
தனது நண்பன் இர்வின் அன்பளிப்பாகத் தந்த உந்துருளியை அவனின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து முதல் நாள் மைதானத்தில் வைத்துவிட்டு வந்தபோதிலும், அடுத்தடுத்த நாட்களில் வேலைவிட்டு வரும்போது மைதானத்தையும் தாண்டி அதிலேயே வந்து, எவரும் அறியாதவாறு கல்லிடுக்கொன்றில் மறைத்து வைத்துவிட்டே தனது ஜாகையை அடைவான்.
நீரோடையில் நீராடி விட்டு ரெங்க்மாவுடன் கல்லிடுக்கு வரை வந்து, மறைத்து வைத்திருந்த உந்துருளியை வெளியிலெடுத்து பின் இருக்கையில் அவளை ஏற்றிக் கொண்டவனாக மனாஸ் நகர் நோக்கி விரைந்தான்!
அவர்கள் முதலில் ஓர் அழகு சாதன நிலையம் சென்றனர்.
அங்கு ரெங்க்மாவை ஒப்பனை செய்து, நவீன கால நகர்ப்புறத்துப் பெண்ணாக மாற்றிக் கொண்டு, பிரம்மாண்டமானதோர் ஆடையகத்துக்குள் நுழைந்தார்கள்.
முதலாவது மாடி சிறுவர்களுக்கான ஆடைகளும், இரண்டாம் மாடி ஆண்களுக்கான ஆடைகளும் மூன்றாவது மாடி பெண்களுக்கான ஆடை அணிகளுக்குமாக ஒதுக்கப்பட்டிருந்தது.
இவற்றையெல்லாம் பார்த்தபோது ரெங்க்மா அதிசயித்தும், பிரமித்தும் போனாள்! வெளியுலக மக்கள் இவ்வாறெல்லாம் வாழ்கின்றார்களா என வியந்தாள்!
வெளியுலகோடு நெருங்க விடாமல் தங்களையெல்லாம் ஒரு கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்கும் தமது மூதாதை யரை ஒருகணம் சபித்துக்கொண்டவளாக, மூன்றாம் மாடியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆடைகளை ஒவ்வொன்றாகப் பார்த்து வந்தவள் ஓரிடத்தில் நின்றாள்!
அந்த ஆடை அவளுக்குப் பிடித்திருந்தது! செரோக்கியைப் விழித்து – மௌனராகத்துடன் அதற்கு விரல் நீட்டினாள்!
அங்கிருந்த பணியாளியிடம் அதனைக் கேட்டுப் பெற்று, சரி பார்க்கும் கூண்டுக்குள் நுழைந்து அதனை சரி கண்டு, உடுத்திக் கொண்டே கூண்டுக்குள்ளிருந்து வெளியானாள்!
நவீன ஆடையில் அவளைக் கண்ட செரோக்கி சொக்கிப் போய்விட்டான்! அவனுக்கு அவள் அப்போது தேவதையாகத் தெரிந்தாள்!
அதன் பிறகு அவர்கள் இரண்டாம் மாடிக்கு இறங்கிவந்து செரோக்கிக்கான ஆடைகளைத் தேர்ந்தெடுத்து வாங்கிக்கொண்டவர்களாக - ஆடையகத்தை விட்டும் வெளியேறி - பிரமாண்டமானதொரு சினிமாக் கொட்டகையை அடைந்தனர்!
ஆதிகாலத்துக் காதல் கதை சினிமாப் படமொன்று !
அவர்கள் இருவரும் டிக்கட்டைப் பெற்றுக் கொண்டு அரங்கத்தினுள் நுழைந்தார்கள். அலங்கார ஒளி விளக்குகளால் மூழ்கியிருந்த மண்டபம் திடீரென விளக்குகள் அணைய திரையில் சினிமா காட்சி தரத் தொடங்கியது!
தமது வாழ்நாளில் இப்படியானதொன்றைக் காண்கின்ற பாக்கியம் கிட்டிய சந்தோசத்தில் அவர்கள் ஒருவரை ஒருவர் ஆஸ்வசித்துக் கொண்டனர்.
சினிமாவில் வந்த காட்சிகளைக் கண்டு அவர்கள் சொக்கிப் போயினர்! அவ்வாறானதொரு காதலுக்காக அவர்கள் கூட வசீகரிக்கப்பட்டனர்!
சினிமாவை முற்றும் வரை பார்த்துவிட்டு, அரங்கை விட்டும் வெளியே வந்து பக்கத்தில் இருந்த உணவகத்துக்குள் நுழைந்தனர். அங்கு கண்ணாடிப் பெட்டிக்குள் வகை வகையான உணவு வகைகளும் “சாண்ட்விட்ச்” வகைகளும் இனிப்புப் பதார்த்தங்களும் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன.
சுட்ட மாமிசம் சற்று வெளியே தெரிந்த “சாண்ட்விட்ச்” இரண்டிற்கு பணியாளரிடம் சமிஞ்சை மொழியில் “ஓடர்”
செய்துவிட்டு அருகிலிருந்த நாற்காலிகளில் அமர்ந்து கொண்டனர்!
தட்டொன்றில் “சாண்ட்விட்ச்” இரண்டை வைத்து மேசை நடுவில் வைத்துவிட்டுச் சென்றான் பணியாள்.
செரோக்கி இர்வினுடன் சென்று உணவகங்களில் சாப்பிட்ட பழக்கமிருந்ததால், உணவக ஒழுக்கங்களைப் பேணி சமாளித்துச் சாப்பிட்டுவிட்டு இருவரும் அங்கிருந்து வெளியாகினர்.
ரெங்க்மாவுக்கு அனைத்தும் வியப்பாகத் தெரிந்தது! ஏனென்றால் இது அவளின் முதல் அனுபவம்!
(தொடரும்)
செம்மைத்துளியான்

.gif)



0 Comments