Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-170


குறள் 545
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.

நீதி நெறிகளுக்கு ஏத்த மாதிரி நாட்டுல ஒரு அரசாங்கம் நடந்துச்சுன்னா, அந்த ஆட்சியில காலத்துக்கு ஏத்த மாதிரி நல்ல மழை பெய்யும். அதுனால வெளச்சலும் நல்லா இருக்கும். 

குறள் 547
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.

நாட்டை ஆள்கிறவன், நீதி நியாயத்துக்கு கட்டுப்பட்டு ஆட்சி நடத்துனாம்னா, அந்த நீதியும்  நியாயமும் அவனோட அரசாங்கத்தைக்  காக்கும். 

குறள் 549
குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.

ஆட்சி செய்பவன் நாட்டு மக்களைப் பாதுகாக்கணும். அவர்களுக்குத் துணையாக இருக்கணும். தப்பு பண்ணுதவன் எவனானாலும் சரி அவன் மேல கையை வச்சா நமக்கு கெட்ட பேரு வருமோன்னு நெனைய்க்காம தண்டிக்கணும்.

குறள் 550
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.

கொலை செஞ்ச கொடுமைக்காரர்களுக்கு அரசாங்கம் மரண தண்டனை கொடுத்து மத்தவங்களைக் காக்குறது, பயிர்கள் நல்ல வளர்வதுக்காக களைகளைப் பிடுங்கி எறியிறதுக்கு சமம்.

குறள் 559
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.

ஆட்சி ஊழல் நிறைஞ்சதா இருந்தா, எங்குன கூடி மழை பெய்யும்? பொறவு எப்படி வெவசாயத்துக்கு தண்ணீர் சேத்து வைக்கிறது? 

(தொடரும்)


 



Post a Comment

0 Comments