எனவே ஆசிரியர் திருவள்ளுவரின் காலம், கி.மு.95 ஆண்டு முதல் கி.மு.10 ஆண்டு வரை என்பதும் ஏற்கத் தகுந்தது.
இவ்வாறு தவத்திரு மறைமலை அடிகள் வாயிலாக, திருவள்ளுவரின் காலம் இன்னதெனச் செய்தி இருக்கிறது.
சிந்தனைச் செம்மல் கு.ச.ஆனந்தன் அவர்கள் "இன்றைய நிலையில் கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதி அல்லது கி.பி. முதல் நூற்றாண்டின் தொடக்கம் என்பதே திருக்குறள் நூலின் காலக்குறி" என தனக்குத் தோன்றியபடி குறிப்பிடுகின்றார்.
ஆனால் அவரே, "அப்பெரு நூல் கடைச் சங்கத்தின் கடைப் பகுதியிலும், இரட்டைக் காப்பியங்களுக்கு முன்னரும் தோன்றியிருத்தல் கூடும் அல்லது அந்நூல் அக்காலத்தே புரட்சிப் பனுவலாக அமைந்து விட்டக் கரணத்தினாலும், வேறு பல அரசியல், சமய, சமுதாய அழுத்தங்களினாலும் சங்கப் புலவர்கள் போன்ற சமகாலத்தவர்களால் புறக்கணிக்கப்பட்டு, மறைநிலைக்கு ஆட்பட்டிருத்தல் வேண்டும் என்ற உறுதியான முடிவுக்கு நம்மை இட்டுச் செல்லும்" என்று திருக்குறளைப் பற்றி கூறுகிறார்.
எனில், திருக்குறள் தோன்றிய காலம், கி.பி.முதல் நூற்றாண்டின் இறுதியில் அல்லது கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கம் என்றால், அவரே சொன்ன கடைச் சங்கத்தின இறுதிக் காலம் என்ன? கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியும், கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கமுமா கடைச்சங்க காலமா?! சிரிப்பு வருகிறது!
ஒரே நூலில், ஓரிடத்தில் திருக்குறளின் காலத்தை ஒரு மாதிரியாகவும், அதே நூலில் வேறு மாதிரியாகவும் எழுதினால், இது...இந்தத் திறனாய்வு சிரிப்பை வரவழைத்ததிலே ஆச்சரியம் இல்லை.
இது இவ்வாறு இருக்க, தற்காலத்தில் வள்ளுவர் பிறந்த ஆண்டை, இப்பொழுது நடை பெறுகின்ற ஆண்டுடன் 31 ஆண்டுகளைக் கூட்டிக் கணக்கிட வேண்டும் என முடிவு செய்துள்ளனர். அதாவது இதை எண்ணிப் பார்க்கும் பொழுது, ஆசிரியர் பிறந்த வருடம் கி.மு.31 ஆம் ஆண்டு என்று கணக்கில் கொண்டு, இந்நூல் எழுதும் ஆண்டான 2005 உடன் 31 வருடங்களை கூட்டி, திருவள்ளுவர் ஆண்டு 2036 என குறிப்பிடப்படுகிறது.
(தொடரும்)
கட்டுரைகள் | Ai SONGS |
0 Comments