Ticker

6/recent/ticker-posts

23 நாட்களில் சபாநாயகர் பதவி விலகினார்!


ரன்வல ஆராச்சிகே அசோக சபுமல் ரன்வல என்ற பெயர் கொண்ட இலங்கை அரசியல்வாதியும், தொழிற்சங்கவாதியும், கல்வியாளருமான இவர் 23 நாட்கள் மட்டுமே  நாடாளுமன்றத்தில் சபாநாயகராக இருந்துவிட்டு, தற்போது பதவி விலகியுள்ளார்.

தனது ஆரம்பக் கல்வியை யடியான தொடக்கப் பாடசாலையிலும், ஹெனிகம மத்திய கல்லூரியிலும் பயின்றுள்ள இவர், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் பணிபுரிந்தவர்.

இளவயதிலேயே மக்கள் விடுதலை முன்னணியில் இணைந்து அரசியல் செய்துவரும் இவர், 2024 பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளராக கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றம் நுழைந்து சபாநாயகரானார்.

இவர் ஜப்பான், வசேதா பல்கலைக்கழகத்தில் உயிர் வேதியியலில் கலாநிதிப் பட்டம் பெற்றவர் என்று கூறப்பட்டபோதிலும், அதில் உண்மைத் தன்மை இல்லை என்பது நிரூபணமாகியது. 

எந்தக் கட்சியினதும் தீவிர ஆதரவாளர்களாக இல்லாதவர்களான முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய, கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிரி போன்றவர்கள் இதுபற்றிக் குரல் எழுப்பியிருப்பியிருந்தனர்.

இவருக்கு இலங்கையின் எந்தவொரு பல்கலைக்கழகமும் கலாநிதி பட்டம் வழங்கவில்லை என பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம் தெரிவித்ததோடு, இது சம்பந்தமாக சமூகத்தில் எழுந்துள்ள விவாதத்தினைக் கருத்தில் கொண்டு, நாடாளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்திலிருந்து அவரது பெயருக்கு முன் இடப்பட்டிருந்த 'கலாநிதி'ப் பட்டம் நீக்கப்பட்டது; இருப்பினும், விக்கிபீடியா தமிழ் மொழிபெயர்ப்பில் அது இன்னும் நீக்கப்படாதுள்ளது.

இந்நிலையில், சபாநாயகர் அசோக ரன்வல ஜப்பானில் உள்ள வசேதா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளதாக தெரிவித்த கருத்து பொய்யானது எனவும், அவர் தமது பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கவில்லை எனவும் ஜப்பானின் வசேதா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளதாகவும் செய்தியாளர் சந்திப்பின்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

இந்த விடயம் புதிய அரசின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக மாற்றி, சபாநாயகரை உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற அனைவரினதும் ஏகோபித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.


இந்நிலையில், "எந்தத் தரத்தில் இருப்பவராயினும் தவறு செய்திருந்தால் அதற்கமைவான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கா கூறியிருப்பது அவர் மீதும்,  அவரது கட்சி மீதும் மக்களிடத்தில் ஏகோபித்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது!

குறிப்பிட்ட விடயம் குறித்து சபாநாயகர் அசோக ரன்வலவிடம் கேட்டவேளை, இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு உரிய நேரத்தில் பதில் அளிப்பதாக அவர்  தெரிவித்திருந்த நிலையில், ஜப்பானிலுள்ள வசேதா பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஆராய்ச்சி நிறுவனம் வழங்கிய கலாநிதிப் பட்டத்திற்கான ஆவண ஆதாரத்தை தற்போது தன்னால் வழங்க முடியவில்லை என்றும், அதனால் தான் பதவியிலிருந்து விலகுவதாகவும்  அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அரசாங்கத்தை அசௌகரியப்படுத்தவோ, அதன் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை மோசமடையச் செய்யவோ தான் விரும்பவில்லை எனவும் அவரது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயத்தில் பிரதான எதிர்க்கட்சி ஆரம்பத்தில் அடக்கி வாசித்தமைக்குக் காரணம், எதிர்க்கட்சித் தலைவரின் பட்டங்கள் தொடர்பிலும் இவ்வாறான பிரச்சனைகள் உண்டு என்பதனால் கூட இருக்கலாம். சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, அநுர பண்டாரநாயக்க, நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் பட்டங்கள் தொடர்பிலும் சர்ச்சைகள் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக, சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சி தீர்மானம் மேற்கொண்ட நிலையிலேயே, அசோக ரன்வல பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

சாதாரண  குடிமகன் ஒருவன் போலிச்சான்றிதழ் ஒன்றின் மூலம் உயர்கல்வி பெற்றாலோ, தொழில் ஒன்றுக்கு முயற்சித்தாலோ, வெளி நாடு சென்றாலோ சட்டம் அந்த ஒருவன் மீது பாயும்.

'குற்றம் எவர் செய்தாலும் குற்றமே' என்னும் கோட்பாட்டில் தேசிய மக்கள் சக்தி நம்பிக்கை மிகக் கொண்டுள்ளது. “அவருடைய கருத்தை அவர் விளக்குவார்” என்று சொல்லி தப்பித்துச் செல்லும் நோக்கம் தேசிய மக்கள் சக்திக்கு இருந்ததாகக் குற்றம் சாட்டிவிட முடியாது! குற்றம் செய்பவர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட்ட வேண்டும் என்பதுதான் தேசிய மக்கள் சக்தியின் தார்மீக கொள்கையாக  இருப்பதை மக்கள் தொடர்ந்தும் நம்புவதற்கு சபாநாயகரின் பதவி விலகல் ஒரு சான்றாகும்.

பொதுவாக ஆழமான கற்றல் முறைகள் மற்றும் ஆராய்ச்சி அறிக்கைகளை நிறைவு செய்வதன் மூலம் பெறப்படுவது 'கலாநிதி'ப் பட்டமாகும்.

இதனைப் பெறுவதற்கு முதுகலை பட்டப்படிப்பு அல்லது குறைந்தபட்சம் ஓர் அடிப்படைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டாலும், சில பல்கலைக் கழகங்கள் அவ்வாறான பட்டங்களின்றி 'கௌரவ கலாநிதி'ப் பட்டத்தைப் பெறுவதற்கான வாய்ப்புக்களை வழங்கியுள்ளன.

பல்கலைக்கழகத்துறை, சமூகம் அல்லது பல்கலைக்கழகத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த நபர்களுக்கு 'கௌரவ கலாநிதி'ப் பட்டம் வழங்கப்படலாம். இவற்றுக்கு கல்வித் தகைமை எதுவும் தேவையில்லை; படிப்பு அல்லது ஆய்வறிக்கைகளின்றி விதிவிலக்கான சாதனைகளுக்காக இவை வழங்கப்படுகின்றன.

பாராளுமன்றம் இந்த நாட்டின் மிக உயர்ந்த ஸ்தாபனம். இந்த நாட்டின் நிலைப்பாடுகளின் படி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அடுத்தபடியாக சபாநாயகர் பதவி வகிக்கின்றார்.

பாராளுமன்றத்தில் உயர் அதிகாரிகள் குழு உள்ளது; சபாநாயகர் இந்த குழுவின் தலைவராவார். இந்தப் பாராளுமன்ற உயர் அதிகாரிகள் குழுவின் மூலம்தான் அமைச்சுக்களின் செயலாளர்கள், தூதர்கள் போன்ற முக்கியமானவர்கள் நியமனம் பெறுகின்றனர்.

கல்வித் தகைமை விடயத்தில் போலித் தகவல்களை வழங்கி, அதன் மூலம் பதவிகளை அனுபவிப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

போலித் தகைமைகள் என்பது இலங்கையின் பல்வேறு துறைகளில் மலிந்து காணப்படுகிற ஒரு விடயமாகும். அதனால், இதுவிடயமாக அரசாங்கப் பிரதிநிதிகள் தொடர்பில் மட்டுமல்லாது எல்லாத் துறைகளிலும் கவனப்படுத்தப்பட வேண்டியது கட்டாயமாகும்!

செம்மைத்துளியான்



 



Post a Comment

0 Comments