
ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் 4வது போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முழுமூச்சுடன் முயற்சித்து வருகிறது. முன்னதாக அந்தத் தொடரின் முதல் போட்டியிலேயே நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா கேப்டனாக 8 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
அதற்கடுத்த போட்டிகளிலும் அபாரமாக பந்து வீசி வரும் அவர் ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக செயல்பட்டு வருகிறார். மேலும் தம்முடைய கேரியரில் 44 போட்டிகளில் பும்ரா 202 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அந்த 202 விக்கெட்டுகளை அவர் 19.52 என்ற சராசரியில் எடுத்துள்ளார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 20க்கும் குறைவான சராசரியில் 200 விக்கெட்டுகள் எடுத்த முதல் பவுலர் என்ற உலக சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
சொல்லப்போனால் நூற்றாண்டு சிறப்புமிக்க டெஸ்ட் கிரிக்கெட்டில் வேறு யாருமே 20க்கும் குறைவான சராசரியில் 200 விக்கெட்டுகள் எடுத்ததில்லை. குறிப்பாக 1980, 1990களில் உலகின் டாப் பேட்ஸ்மேன்களை தெறிக்க விட்ட மல்கோம் மார்சல் (20.94), ஜோயல் கார்னர் (20.97), கர்ட்லி ஆம்ப்ரோஸ் (20.99) ஆகிய வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்களை முந்தி பும்ரா இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
அந்த வகையில் துல்லியமாக பந்து வீசும் அவர் தன்னை உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலர் என்பதையும் நிரூபித்து வருகிறார். இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ராவின் திறமையை பாராட்டுவதற்கு தன்னிடம் வார்த்தைகள் இல்லை என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். இது பற்றி பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.
“இந்த விளையாட்டின் மற்றவர்களுடன் ஒப்பிடும் போது பும்ரா விளையாடுவது வித்தியாசமான ஆட்டம். வித்தியாசமான கிரகத்தில் இருப்பது போல் இருக்கிறது. அவருடைய ஆட்டத்தை பார்ப்பது மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது. அவருடைய ஆட்டத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லாமல் நாம் ஓடுகிறோம். உலகத்தரம் வாய்ந்த பவுலரான அவரது பவுலிங் மெல்போர்ன் மைதானத்தில் நாம் பார்த்த சிறந்த ஒன்றாகும்”
“அந்தப் பட்டியலை பாருங்கள். அவர் அவர்களை விட முன்னிலையில் இருக்கிறார். ஒவ்வொரு முறையும் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்களுக்கு எதிராக விளையாடியதைப் பற்றி நாம் பேசுவோம். மார்சல், கார்னர், ஆம்ப்ரோஸ் கிட்டத்தட்ட எதிர்கொள்வதற்கு அசாத்தியமானவர்கள். ஆனால் அவர்களை விட பும்ரா தனது தலையையும் தோளையும் மேலே வைத்துள்ளார்” என்று கூறினார்.
crictamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments