ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அங்கு முதலில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் வென்றது. அதைத்தொடர்ந்து அவ்விரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டி டிசம்பர் 19ஆம் தேதி ஹராரே நகரில் நடைபெற்றது. இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தானுக்கு துவக்க வீரர்கள் செதிக்குல்லா அட்டல் – அப்துல் மாலிக் 35 ஓவர்கள் வரை நங்கூரமாக விளையாடினார்கள். அந்த வகையில் 191 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் அப்துல் மாலிக் 84 ரன்கள் குவித்து அவுட்டானார்.
அடுத்ததாக வந்த அசமத்துல்லா ஓமர்சாய் 5, ரஹ்மத் ஷா 1 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய அட்டல் சதமடித்து 104 (128) குவித்து பெவிலியன் சென்றார். இறுதியில் கேப்டன் ஷாகிதி 29*, முகமது நபி 18 ரன்கள் எடுத்த உதவியுடன் 50 ஓவரில் ஆப்கானிஸ்தான் 286-6 ரன்கள் குவித்தது. ஜிம்பாப்வே அணிக்கு அதிகபட்சமாக நியூமேன் நயம்ஹுரி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து 287 ரன்களை துரத்திய ஜிம்பாப்வே மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக பென் கரண் 0, மருமணி 3, டியோன் மேயர்ஸ் 1, கேப்டன் கிரைக் எர்வின் 4 ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே பெரிய பின்னடைவை கொடுத்தார்கள்.
அதனால் 11-4 என திணறிய அந்த அணி 50 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட போது அதிகபட்சமாக சிக்கந்தர் ராசா 10*, சீன் வில்லியம்ஸ் 16 ரன்கள் குவித்தார்கள். ஏனைய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்ததால் 17.5 ஓவரில் 54 ரன்களுக்கு ஜிம்பாப்வே அணியை சுருட்டி வீசிய ஆப்கானிஸ்தான் 232 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதிகபட்சமாக பரூக்கி 2, நவீட் ஜாட்ரான் 3, கன்சபர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் தங்களுடைய மிகப்பெரிய வெற்றியையும் பதிவு செய்து சாதனை படைத்தது.
இதற்கு முன் 2024இல் ஷார்ஜாவில் தென் ஆப்பிரிக்காவை 177 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதே முந்தைய பெரிய வெற்றி. சமீப காலங்களாகவே ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட டாப் அணிகளுக்கு சவால் கொடுத்து வரும் ஆப்கானிஸ்தான் புதிய பாதையில் நடந்து வருகிறது. அந்த வரிசையில் ஜிம்பாப்பே அணியையும் மிரட்டும் ஆப்கானிஸ்தான் 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. மறுபுறம் இப்போட்டியில் பந்து வீச்சில் 40 ரன்களை எக்ஸ்ட்ராஸ் வழியாக வாரி வழங்கிய ஜிம்பாப்வே 54க்கு அவுட்டாகி பரிதாபமாக தோற்றது.
crictamil
கட்டுரைகள் | Ai SONGS |
0 Comments