Ticker

6/recent/ticker-posts

Ad Code

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-44


முனைப்பகுதி தட்டையான ”கியூரி” தடவாத அம்புபட்ட ரங்கு - தான் இருந்த இடத்திலிருந்து எழுந்து நடந்து கொள்ள முடியாமல் இன்னும் அதே இடத்தில் இருப்பதைக் கண்டதும் ரெங்க்மாவும் செரோக்கியும் பிரமித்துப் போயினர்.

அவன் மீது அனுதாபப்பட்ட செரோக்கி அவனைப் பிடித்து எழுப்பிவிட முற்பட்டபோது செரோக்கியின் கைகளைக் கோபமாகத் தட்டிவிட்டான் ரங்கு!

அவனுக்கு உதவுவதில் எந்தப் பிரயோசன முமில்லை என்பதைப் புரிந்து கொண்ட அவர்கள்  அங்கிருந்து ரெங்க்மாவின் ஜாகையை நோக்கி நடையைக் கட்டினர்!

காட்டுக்கு வேட்டையாடச் சென்ற ரெங்க்மாவின் தந்தை இன்னும் வீடு வந்து சேரவில்லை.

தாய் பகல் உணவை முடித்துக் கொண்டு ஜாகைக்குள் ஆயாசமாகச் சாய்ந்திருந்தாள்! ரெங்க்மாவை வாசலடியில் விட்டுவிட்டு, அத்தையிடம் விடைபெற்றுக் கொண்டு செரோக்கி அங்கிருந்து தன் ஜாகை நோக்கி நடந்தான்!

சூரியன் மறையத் தொடங்கியது. தாயும் மகளும் தந்தையின் வரவை எதிர் பார்த்துக் காத்திருந்தனர். 

தந்தை முயல்கள் இரண்டினைத் தன் இரு கைகளிலும் தோளில் ஒரு மரையையும் சுமந்து வந்தார். அவைகளை இறக்கி வைத்து விட்டு கால் கைகளை ஸ்நானம் செய்து கொண்டு ஜாகைக்குள் நுழைந்தார்.

ரெங்க்மா வெளியுலகம் சென்று வந்த செய்தி அவளது தாய், தந்தையருக்குத் தெரியாது. அலவத்தைகாட்டுக்குள் அல்லது அம்புளுவாவக் காட்டுக்குள் எங்காவது சுற்றியலைந்துவிட்டு வந்திருக்கின்றார்கள் என்றுதான் தாய் நினைத்தாள்!

முனைப்பகுதி தட்டையான ”கியூரி” தடவப்படாத அம்பை  எய்தி ரங்குவிடமிருந்து தந்தை அவளைக் காப்பாற்றிய விடயம் ரெங்க்மாவுக்குத் தெரியாது! 

ரங்கு இதுவரைக்கும் அதே இடத்தில் கிடக்கின்றான் என்பதும், இது ரெங்க்மாவுக்குத் தெரியும் என்பதும் தந்தைக்குத் தெரிய வாய்ப்பில்லை! ரங்கு அதே இடத்தில் கிடக்கின்றதை ரெங்க்மா அறிவாள். 

அவனுக்கு உதவப்போன செரோக்கியை  உதாசீனம் செய்த விடயத்தைக் ரெங்க்மாவின் தந்தை அறியார்!

இப்படியாக ஒருவருக்கொருவர் அறிந்தும் அறியாத துமான விடயங்கள் நிகழ்ந்து விட்டபோதிலும் அவர்களது வாழ்க்கைக்கு அவை எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்த வில்லை என்பதுதான்  யதார்த்தம்!

கெட்டவர்கள் இறுதிவரை கெட்டவர்களாகவே இருப்பதும், நல்லவர்கள் நல்லவர்களாக வாழ்வதும் உலக நியதி!

இதற்கொரு மாற்றம் தேவை என்பதையே “மூத்தவர்” விரும்பினார்!

தனது ஜாகை முன்றலை அடைந்த செரோக்கி மீன் பிடிப்பதற்காக ஒரிநாகோ சென்ற  தந்தை இன்னும் வரவில்லை என்பதைப் புரிந்து கொண்டான்!
சூரியன் மறைய முன்பு அவர் வந்துவிடுவார்; 

அதனால், தான் வெளியுலகிலிருந்து வாங்கி வந்த புதிய துணிமணிகளை மறைத்துக் கொண்டு சென்று குகைக்குள் இரகசிய இடமொன்றில் வைத்துவிட்டு, குகையை விட்டும் வெளியே வரும்போது… 

தூரத்தில் அவனது தந்தை மீன் கூடையைத் தலையில் சுமந்து வருவதைக்  கண்டான்! ஓடிச்சென்று கூடையை அவர் தலையிலிருந்தும் இறக்கியெடுத்துடுத்துக் கொண்டு ஜாகைக்குள் நுழைந்தான்!

மீன்களில் தடவுவதற்காக தாயார் தயார் செய்து வைத்திருந்த வாசனை மூக்கைத் துளைத்தது!  

(தொடரும்)

செம்மைத்துளியான்



Post a Comment

0 Comments