Ticker

6/recent/ticker-posts

Ad Code



6.4 ஓவரில் 43/8.. சொதப்பிய இலங்கையின் கையில் வைத்த வெற்றியை நியூஸிலாந்து பறித்தது எப்படி?


நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டி மவுண்ட் மவுங்கனி நகரில் டிசம்பர் 28ஆம் தேதி இந்திய நேரப்படி முற்பகல் 11.30 மணிக்கு துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து 20 ஓவரில் போராடி 172-8 ரன்கள் எடுத்தது. ரச்சின் ரவீந்திரா, கிளன் பிலிப்ஸ் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே நியூசிலாந்து ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 65-5 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக டேரில் மிட்சேல் 62 (42), மைக்கேல் பிரேஸ்வெல் 59 (33) ரன்கள் விளாசி கை கொடுத்தார்கள்.

இலங்கைக்கு அதிகபட்சமாக பெர்னாண்டோ 2, தீக்சனா 2, ஹஸரங்கா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதன் பின் 173 ரன்களை துரத்திய இலங்கைக்கு துவக்க வீரர்கள் குஷால் மெண்டிஸ் மற்றும் பதும் நிஷாங்கா ஆகியோர் ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடினார்கள். பவர்பிளே ஓவர்கள் கடந்து 10 ஓவர்களை தாண்டி அதிரடியாக விளையாடிய இந்த ஜோடியில் நிசாங்கா அரை சதமடித்து அசத்தினார்.

அவருடன் சேர்ந்து விளையாடிய மெண்டிஸ் 13.3 ஓவரில் 121 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமான துவக்கத்தை கொடுத்தார். ஆனால் அப்போது அவரை 46 (36) ரன்களில் அவுட்டாக்கிய ஜேக்கப் ஃடுபி அடுத்து வந்த குசால் பெரேரா, கமிண்டு மெண்டிஸ் ஆகியோரை அடுத்தடுத்து டக் அவுட்டாக்கினார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய நிசாங்கா சதத்தை நெருங்கினார்.

ஆனால் அடுத்ததாக வந்த கேப்டன் அசலங்கா 3 ரன்களில் அவுட்டானார். அடுத்த ஓவரிலேயே நிசாங்காவும் 7 பவுண்டரி 3 சிக்ஸருடன் 90 (60) ரன்கள் விளாசி அவுட்டானார். அதைப் பயன்படுத்திய நியூசிலாந்து அடுத்ததாக வந்த ராஜபக்சா 8, ஹஸரங்கா 5, தீக்சனா 1 ரன்களில் அவுட்டாக்கி திருப்பு முனையை உண்டாக்கியது. இறுதியில் பெர்னாண்டோ 4* (4), பதிரனா 0* (1) ரன்கள் எடுத்தார்களே தவிர ஃபினிஷிங் செய்ய முடியவில்லை.

அதனால் 20 ஓவரில் இலங்கையை 164-8 ரன்களுக்கு கட்டுப்படுத்திய நியூசிலாந்து வெறும் 8 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. குறிப்பாக 13.2 ஓவரில் 121-0 வலுவான நிலையில் இலங்கை கையில் வைத்திருந்த வெற்றியை அடுத்த 6.4 ஓவரில் தீயாக செயல்பட்ட நியூசிலாந்து 43 ரன்கள் மட்டும் கொடுத்து 8 விக்கெட்டுகளை சாய்த்து பறித்தது. அந்தளவுக்கு பந்து வீச்சில் மேஜிக் செய்த நியூசிலாந்துக்கு மாட் ஹென்றி 2, ஜாக் போல்க்ஸ் 2, ஜேக்கப் ஃடுபி 3 விக்கெட்டுகளை சாய்த்தார்கள்.

crictamil




 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments