Ticker

6/recent/ticker-posts

Ad Code



சர்வேத எண்களில் இருந்து அழைப்புகள் வந்தால் ஜாக்கிரதை! பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த தொலைத்தொடர்புத் துறை


அறிமுகமில்லாத சர்வதேச எண்களில் இருந்து அழைப்புகள் வந்தால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடைபெறும் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இதைத் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளையும் விழிப்புணர்வு அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் தொலைத்தொடர்புத் துறை சர்வதேச அழைப்புகளில் இருந்து மேற்கொள்ளப்படும் மோசடிகள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில்... 

கடந்த அக்டோபர் மாதம் 'சர்வதேச மோசடி அழைப்புகள் தடுப்பு தொழில்நுட்பம்' தொலைத்தொடர்புத் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டது. 

இந்த தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்ட 24 மணிநேரத்திற்குள் பெறப்பட்ட  சர்வதேச தொலைபேசி அழைப்புகளுள் 90% அதாவது கிட்டத்தட்ட 1.35 கோடி அழைப்புகள் மோசடி அழைப்புகளாக இருந்தது தெரிய வந்தது.

இந்த மோசடி அழைப்புகள் குறிப்பாக இந்திய தொலைபேசி குறியீட்டில் (+91) தொடங்கும் எண்களில் ஊடுருவல் செய்து மேற்கொள்ளப்பட்டதை அறிந்த தொலைத்தொடர்புத் துறை அவற்றைத் தடை செய்தது. 

இதற்கடுத்தபடியாக, மோசடி கும்பல் மற்றொரு யுக்தியை கையில் எடுத்துள்ளது. இவர்கள் சர்வதேச எண்களில் இருந்து அழைப்புகள் விடுத்து மோசடி செய்ய ஆரம்பித்துள்ளார்கள். இதுபோன்ற மோசடி அழைப்புகள் +8, +85, +65 எனத் துவங்கும் எண்களில் இருந்து வருவதும் தெரிய வந்துள்ளது. மேலே குறிப்பிட்ட எண்களில் அழைப்புகள் வரும்போது விழிப்புணர்வுடன் இருக்க பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். 

அதோடு, இந்தியாவின் தொலைபேசிக் குறியீட்டில் (+91) ஆரம்பிக்காத, அறிமுகமில்லாத சர்வதேச எண்களில் இருந்து அழைப்புகள் வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுபோன்ற அழைப்புகள் வரும்போது, அது குறித்து 'சஞ்சார் சாத்தி இணையதளம்' (Sanchar Saathi Website) அல்லது தொலைபேசி நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளிக்கலாம்.  

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அவற்றின் வாடிக்கையாளர்களுக்கு சர்வதேச எண்களில் இருந்து அழைப்பு வரும் பொழுது, அதை சர்வதேசஅழைப்பு எனச் சுட்டிக்காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'
என்று குறிப்பிட்டுள்ளது. 

மேலும், இந்த மோசடிகளைத் தடுப்பதற்கு பிரத்யேகமாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தொலைத்தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.

kalkionline




 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments