அபிதா சுல்தான் மற்ற இளவரசிகளை போல ஒரு சராசரி நபர் அல்ல.
அபிதாவுக்கு நீளமான கூந்தல் இல்லை, சிறப்பாக போலோ விளையாடுவார், புலிகளை சுட்டு வீழ்த்துவார், அவர் விமானங்களையும் இயக்கினார். அது மட்டுமின்றி, 9 வயதில் தனியாக ரோல்ஸ் ராய்ஸ் காரை ஓட்டிச் சென்றார்.
துணிச்சலான பேகம்களை (உயர் நிலை முஸ்லிம் பெண்) கொண்ட ஒரு குடும்பத்தில் 1913-ஆம் ஆண்டு அவர் பிறந்தார். இந்த குடும்பம், பிரிட்டிஷ் இந்தியாவின் வடக்கு சமஸ்தானங்களில் ஒன்றான போபாலை ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஆண்டது. இவர்களின் அட்சியில் பெண்கள் (குறிப்பாக முஸ்லிம் பெண்கள்) மீது இருந்த பொதுவான கண்ணோட்டங்களை, தடைகளை மீறி அரச மரபு உருவாக்கப்பட்டது. அதனை அபிதாவும் பின்பற்றினார்.
முஸ்லிம் பெண்களும் சில இந்து பெண்களும் தங்கள் உடலை முழுமையாக மறைக்கவும் ஆண்களின் பார்வையில் இருந்து விலகி இருக்கவும், பர்தா அணியும் கலாசாரத்தை பின்பற்றியதை அவர் எதிர்த்தார். அவர் பதினைந்தாவது வயதில் அரியணைக்கு வாரிசானார்.
அபிதா பத்தாண்டிற்கும் மேலாக தனது தந்தையின் அமைச்சரவையை வழிநடத்தினார். நாட்டின் முன்னணி சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் இணைந்து செயல்பட்டார். 1947-ல் நாடு பிரிந்து பாகிஸ்தான் உருவான போது ஏற்பட்ட வெறுப்பையும் வன்முறையையும் நேரில் கண்டார்.
கண்டிப்பான பாட்டியால் ஒழுக்கமாக வளர்க்கப்பட்ட அபிதா
அபிதாவின் பாட்டி சுல்தான் ஜெஹான், போபாலின் ஆட்சியாளராக இருந்தவர். ஒழுக்கத்தைக் கடைபிடிப்பதில் கண்டிப்பானவர். அபிதாவை சிறுவயது முதல் ஆட்சி நடத்தும் திறன்களை பெற ஏதுவாக வழிநடத்தியது சுல்தான் ஜெஹான் தான்.
தனது சுயசரிதையான 'மெமரிஸ் ஆஃப் எ ரிபெல் பிரின்சஸ்' (Memoirs of a Rebel Princess) என்னும் புத்தகத்தில், அபிதா அதிகாலையில் நான்கு மணிக்கு எழுந்து குர்ஆனைப் படிப்பதில் இருந்து தன் நாள் தொடங்கியதாக விவரித்திருக்கிறார். ஒவ்வொரு நாளும் பல பயிற்சிகளை அவர் மேற்கொண்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
விளையாட்டு, இசை , குதிரை சவாரி போன்ற பயிற்சிகள் மட்டுமின்றி, தரையைத் துடைத்தல், குளியலறையை சுத்தம் செய்தல் போன்ற அடிப்படை வேலைகளையும் அவர் மேற்கொண்டதாக சுயசரிதையில் எழுதியிருக்கிறார்.
அபிதா ஒரு நேர்காணலில், "பெண்களாகிய நாங்கள் எங்கள் பாலினத்தின் காரணமாக எந்த ஒரு தாழ்வு மனப்பான்மையையும் உணர அனுமதிக்கப்படவில்லை. எல்லாவற்றிலும் சமமாக நடத்தப்பட்டோம். ஒரு ஆண் பிள்ளைக்கு இருந்த சுதந்திரம் எங்களுக்கும் இருந்தது. நாங்களும் குதிரை சவாரி செய்யலாம், மரங்கள் மீது ஏறலாம், நாங்கள் விரும்பிய எந்த விளையாட்டையும் எங்களால் விளையாட முடியும். எந்த கட்டுப்பாடுகளும் எங்களுக்கு விதிக்கப்படவில்லை” என்று தனது குழந்தை பருவத்தைப் பற்றி கூறினார்.
பர்தா அணிய மறுப்பு
அபிதா சிறு வயதிலேயே உறுதியான அதேசமயம் சுதந்திரமான போக்கைக் கொண்டிருந்தார். அவரின் பாட்டி 13 வயதில் அவரை பர்தா அணிய கட்டாயப்படுத்திய போது மறுப்புத் தெரிவித்தார்.
அபிதாவின் தந்தைக்கு இருந்த பரந்த மனப்பான்மையும் அவரிடம் இருந்த அபரிமிதமான தன்னம்பிக்கையாலும், பர்தா அணியும் நடைமுறையை அவர் பின்பற்றவில்லை.
போபாலின் அரியணைக்கு ஏற்கனவே வாரிசாக இருந்த அபிதா, அண்டை சமஸ்தானமான குர்வாயின் அரச குடும்பத்தின் அங்கமாகும் வாய்ப்பைப் பெற்றார். அவர் 12 வயதில், அவர் தனது பால்ய நண்பரும் குர்வாய் ஆட்சியாளருமான சர்வார் அலி கானை மணந்தார்.
அபிதா தனது நிக்காஹ் (திருமணம்) பற்றி மிகவும் வேடிக்கையான முறையில் சுயசரிதையில் விவரித்துள்ளார்.
ஒருநாள், தன் உறவினர்களுடன் தலையணை வைத்து சண்டையிட்டு விளையாடிக் கொண்டிருந்த போது, அவருடைய பாட்டி அந்த அறைக்குள் வந்து, திருமணத்திற்கு ஆடை அணியச் சொன்னதைப் பற்றி அவர் விவரித்திருக்கிறார். அந்த சமயத்தில் அவர் தான் மணப்பெண் என்று யாரும் சொல்லவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
விரைவில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை
அபிதா தன் நிக்காஹ் பற்றி விவரிக்கையில், "எப்படி இருக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று யாரும் என்னிடம் அறிவுறுத்தவில்லை. வழியில் நின்ற பெண்களை தள்ளிவிட்டு நேராக நிக்கா அறைக்குள் சென்றேன். என் முகத்தை கூட மூடவில்லை. என்ன நடக்கிறது என்பது புரியாமல் சிணுங்கிக் கொண்டிருந்தேன்" என்று அவர் எழுதியிருக்கிறார்.
திருமணம் விரைவாக நடந்து முடிந்தது, அபிதாவின் திருமண வாழ்க்கையும் 10 வருடம் கூட நீடிக்கவில்லை.
அபிதாவின் இளம் வயது மற்றும் மிகவும் கண்டிப்பான, ஒழுக்கமான வளர்ப்பின் காரணமாக அவரது திருமண வாழ்க்கை கடினமானதாக மாற்றியது.
`உடலுறவு’ பற்றிய புரிதல் இல்லாமை மற்றும் அதுபற்றிய சங்கடமான உணர்வு தனது திருமண வாழ்க்கையை எவ்வாறு பாதித்தது என்பதை தன் சுயசரிதையில் அவர் விளக்கியுள்ளார்.
"எனது திருமணத்திற்குப் பிறகு, நான் திருமண பந்தம் என்னும் புரியாத ஒரு உலகில் நுழைந்தேன். அதைத் தொடர்ந்து நடந்த முதல் உடலுறவு என்னை மிகவும் திகிலடையச் செய்தது, அசுத்தமாக உணரச் செய்தது” என்று விவரித்துள்ள அவர், "என்னால் ஒருபோதும் கணவன்-மனைவி இடையேயான திருமண உறவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நினைத்தேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இது அவரது திருமண முறிவுக்கு வழிவகுத்தது.
வரலாற்றாசிரியர் சியோபன் லம்பேர்ட்-ஹர்லி, தெற்காசியாவில் உள்ள முஸ்லிம் பெண்களின் சுயசரிதைகளை வைத்து அவர்களின் புத்தகங்களில் பாலுணர்வு பற்றி எழுதப்பட்டிருக்கும் கருத்துகளை ஆய்வுக்குட்படுத்தி கட்டுரை ஒன்றை எழுதினார். அந்த கட்டுரையில், அபிதாவின் பாலுணர்வு பற்றிய வார்த்தைகளைக் கோடிட்டு காட்டியிருக்கிறார்.
அபிதா தனது கணவருடனான பாலியல் நெருக்கம் குறித்து வெளிப்படையாக நேர்மையாக எழுதியிருப்பது, முஸ்லிம் பெண்கள் பாலியல் உணர்வுகள் பற்றி எழுத மாட்டார்கள் என்னும் வழக்கமான கருத்தை உடைத்தெறிந்துள்ளது என்பதை வரலாற்றாசிரியர் சியோபன் குறிப்பிட்டிருக்கிறார்.
மகனுக்காக கணவரை எதிர்த்து சண்டையிட்ட அபிதா
தனது திருமண உறவு முறிந்த பிறகு, குர்வாயில் உள்ள கணவர் வீட்டை விட்டு வெளியேறி போபாலுக்கு திரும்பினார் அபிதா. ஆனால் தம்பதியரின் ஒரே மகனான ஷஹ்ரியார் முகமது கான், யாரிடம் வளர்வார் என்பதில் தகராறு ஏற்பட்டது. இந்த சர்ச்சை நீண்ட காலத்துக்கு நீடித்தது. தன் மகனை விட்டுப் பிரிய அபிதா விரும்பவில்லை என்பதால், தைரியமாக செயல்பட்டு கணவரை பின்வாங்கச் செய்தார்.
மார்ச் 1935இல் ஒரு இரவு, அபிதா மூன்று மணிநேரம் கார் ஓட்டிச் சென்று, குர்வாயில் உள்ள தனது கணவரின் வீட்டை அடைந்தார். கணவரின் படுக்கையறைக்குள் நுழைந்து, ஒரு ரிவால்வரை வெளியே எடுத்து, அவர் மீது தூக்கி எறிந்தார்.
"என்னைச் சுடு அல்லது நான் உன்னைக் கொன்றுவிடுவேன்." என்றார்.
இந்த சம்பவத்தின் போது அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டு, அதில் அபிதா வெற்றி பெற்றதால், மகன் பற்றிய தகராறு முடிவுக்கு வந்தது. மகன் அபிதா வசம் வந்தார்.
சிம்மாசனத்தின் வாரிசாக தனது கடமைகளை செய்த அதேவேளை, மகனை ஒரு தாயாக பொறுப்புடன் அவர் வளர்க்கத் தொடங்கினார். 1935 முதல் 1949 வரை, போபால் இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்துடன் இணைக்கப்படும் வரை, அவர் தனது மாநில அமைச்சரவையை வழிநடத்தினார்.
இந்தியாவின் வருங்கால அரசாங்கத்தை தீர்மானிக்க பிரிட்டிஷ் அரசாங்கம் நடத்திய வட்டமேசை மாநாடுகளிலும் அபிதா கலந்து கொண்டார். அப்போது, இந்தியாவின் முதல் பிரதமராக வரவிருந்த ஜவஹர்லால் நேரு, மகாத்மா காந்தி, மோதிலால் நேரு போன்ற செல்வாக்கு மிக்க தலைவர்களை சந்தித்தார்.
இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான உறவு மோசமடைந்து வருவதையும், 1947-இல் இந்தியப் பிரிவினைக்குப் பிறகு ஏற்பட்ட வன்முறையையும் அவர் நேரடியாக பார்த்தார்.
அபிதா தனது சுயசரிதையில், போபாலில் தான் எதிர்கொள்ளத் தொடங்கிய பாகுபாட்டை விவரித்துள்ளார். பரம்பரை பரம்பரையாக அங்கு நிம்மதியாக வாழ்ந்த அவரது குடும்பம் எப்படி 'வெளியாட்களை' போல் நடத்தப்பட்டனர் என்பதை விளக்கியுள்ளார்.
அபிதா சுல்தான் பாகிஸ்தானுக்கு சென்றது ஏன்?
அவர் தனது நேர்காணல் ஒன்றில், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் வெடித்த வன்முறை தொடர்பாக தனக்குள் இருந்த ஒரு சங்கடமான நினைவைப் பற்றி பேசினார்.
ஒருநாள், இந்திய அரசாங்கம் போபாலுக்கு முஸ்லிம் அகதிகளை ஏற்றிக் கொண்டு வரும் ரயிலைப் பற்றி தகவல் கொடுத்ததை அடுத்து, அவர்களின் வருகையைக் கண்காணிக்க அபிதா ரயில் நிலையத்திற்குச் சென்றார்.
"ரயில் பெட்டிகள் திறக்கப்பட்ட போது, அவர்கள் அனைவரும் இறந்திருந்தனர்" என்று அவர் அந்த துயரமான சம்பவத்தை விவரித்தார்.
இந்த வன்முறை மற்றும் அவநம்பிக்கை தான் 1950இல் அவரை பாகிஸ்தானுக்குச் செல்லத் தூண்டியது என்றும் அவர் கூறியுள்ளார்.
அபிதா தனது மகனுடன், பிரகாசமான எதிர்காலம் அமையும் என்ற நம்பிக்கையுடன் அமைதியாக இந்தியாவை விட்டு வெளியேறினார்.
பாகிஸ்தானில், அவர் தனது வெற்றிகரமான அரசியல் வாழ்க்கையின் மூலம் ஜனநாயகம் மற்றும் பெண்களின் உரிமைகளில் முக்கிய பங்காற்றினார்.
அபிதா, 2002இல் கராச்சியில் உயிரிழந்தார்.
அபிதா பாகிஸ்தானுக்குச் சென்ற பிறகு, அவரது சகோதரி இந்திய அரசால் வம்சத்தின் வாரிசாக அறிவிக்கப்பட்டார். இருப்பினும் அபிதாவின் பெயர் போபாலில் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. போபால் மக்கள் அவரை 'பியா ஹுசூர்' என்று அழைக்கிறார்கள்.
போபாலின் பெண் ஆட்சியாளர்களைப் பற்றி ஆய்வு செய்து வரும் பத்திரிகையாளர் ஷம்ஸ் உர் ரஹ்மான் அலவி கூறுகையில், "பல ஆண்டுகளாக வகுப்புவாத அரசியலின் எழுச்சியால் அவரது பாரம்பரியம் மறைக்கப்பட்டுள்ளது. அவர் பெயர் அதிகம் உச்சரிக்கப்படுவதில்லை” என்றார்.
“ஆனால் அதேசமயம், அபிதாவின் பெயர் அவ்வளவு சீக்கிரமாக மறக்கப்படவும் வாய்ப்பில்லை” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ரஹ்மான்.
செரிலன் மோலன்
பதவி,பிபிசி நியூஸ், மும்பை
bbctamil
கட்டுரைகள் | Ai SONGS |
0 Comments