
ஒரு சமுதாயம் தன் கடந்தகால வரலாற்றினை தெரிந்து வைத்திருக்கவில்லையோ அச்சமுதாயத்தினால் நிகழ்கால எதிர்கால வாழ்க்கைத் திட்டங்களை அமைக்கவோ, செயற்படுத்தவோ முடிவதில்லை. கடந்த காலத்தில் சமுதாயம் செய்துள்ள நல்லவைகளை பாதுகாப்பதும், விட்ட தவறுகளை உணர்ந்து அவைகளை அகற்றுவதற்கான எதிர்காலத்திட்டங்களை வகுப்பதும் சமுதாயம் தொடர்ந்து பின்பற்றி வருவதாகும்.
பூகோள ரீதியாக முற்காலத்தில் இலங்கையும், இந்தியாவும் இணைந்தே இருந்திருந்தன. கடற்கோள், கடலரிப்பு, நிலநடுக்கம்
போன்றவற்றால் இலங்கைத்தீவு பிரிகையுற்ற நிலையில், ஆதம் (அலை) அவர்கள் சுவனலோகத்திலிருந்து பூமிக்கு இறக்கப்பட்டபோது, அன்னார் இலங்கையின் உயர்ந்த மலைப்பிரதேசத்தில் தனது காலடியை வைத்துள்ளதாதாக வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுவர்.
“பாவா ஆதாமலை” என்று குறிப்பிடப்படும் இம்மலை, இலங்கையில் வாழும் பல்சமூகத்தினரால் வெவ்வேறு பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்டு வருகின்றது.

“அல் பிதாயா வன் நிஹாயா” எனும் கிரந்தத்தின் முதலாம் பாகத்தில் இந்நிகழ்வு பற்றி அறியப்படுவதாக வரலாற்றாசிரியர் குறிப்பிடுவர். இம்மலைப்பகுதியின் முக்கியத்துவம் பெற்ற ஓரிடமாக “மஸ்கெலியா” அமைந்துள்ளது.
கி. பி. 1409ல் “சேனதிஸ்ஸ கிராமம்” என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள இக்கிராமத்தில், ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் கண்டியை ஆண்ட காலப்பகுதியில் (1798-1815) பௌத்தர்களும், இந்துக்களும், முஸ்லிம்களும் இணைந்து வாழ்ந்துள்ளனர். 1869ல் இப்பிரதேசத்தின் பிரதானியாக “மஸ் எலிஸ்னோ” இருந்தமையினால், "சேனாதிஸ்ஸ கிராமம்" என்று அழைக்கப்பட்டு வந்த இவ்விடம் “மஸ்கெலிய” என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது.
மலைவளம், விளைநிலம் தாங்கி நிற்கும் மஸ்கெலியாவின் நீரோட்டப்பகுதிக்கு அருகாமையில் சுமார் 140 வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம்கள் மார்க்கக் கடமைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக பள்ளிவாயில் ஒன்று தோற்றம் பெற்றுள்ளது. ஆங்கிலேயரின்
காலத்தில் 1875ம் ஆண்டில், தென்னிந்தியாவிலிருந்து இலங்கை வந்த இந்திய முஸ்லிம் வர்த்தகர்கள் இந்த இறையில்லத்தை அமைத்துள்ளனர்.
இலங்கைத்தீவின் மின்சக்தித் தேவையைப் பூர்த்திசெய்வதற்காக மஸ்கெலிய ஓயாத்திட்டத்தினால் மவுசாக்கலை நீர்த்தேக்கம் 1969ல் உருவாக்கப்பட்டதினால், மஸ்கெலியாவின் பழைய நகரமும் பள்ளிவாயிலும் நீரில் மூழ்கின.
அரசினால் நஷ்டஈடாகக் கொடுக்கப்பட்ட நிதித்தொகையோடு புதிய பள்ளிவாயில் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையிலேயே, எதிர்பாராத விதமாக இந்தோனேசியா ஹஜ் யாத்ரீகர்கள் பயணம் செய்த Martin air DC8 விமானம் ஏழுகன்னி மலையில் மோதி வெடித்துச் சிதறி, விபத்துக்குள்ளானது.

1974ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் திகதி இரவு 10 மணி 10 நிமிடம் மஸ்கெலியா நோட்டன்பிரிட்ஜ் தெப்பட்டன் பகுதியை மட்டுமல்லாது அப்பிரதேசத்தை அண்டிய ஏனைய பகுதி மக்களையும் பீதியடைச் செய்த சம்பவம் அது.
இந்தோனேசியா சுராபயாவிலிருந்து 182 ஹஜ் பயணிகளை ஏற்றிக்கொண்டு மக்கா நோக்கி பயணித்த மார்டின் எயார் டீ.சீ 8 ரக பயணிகள் விமானம் சப்த கன்னியா என அறியப்படும் ஏழுகன்னியர் மலை என்றழைக்கப்படும் வல்கின் ஹில்ஸ், ஐந்தாவது குன்றின் மீது விமானம் மோதி சிதறிய நாள் அது. விமானமோட்டிகள் உட்பட 190 பேரும் அதே இடத்தில் உடல் சிதறி பலியாகினர்.
இலங்கை நாட்டை பொறுத்தவரை இது வரை வெளிநாட்டு விமானம் ஒன்றுக்கு ஏற்பட்ட மிக மோசமான விபத்து இதுவாகும். மலையகத்திற்கு இது ஓர் அதிர்ச்சியளித்த புது அனுபவம். 191 பேரை பலியெடுத்த இந்த ஏழு கன்னியர் மலை ஆங்கிலத்தில் 'வில்கின் ஹில்ஸ்' என்று அழைக்கின்றனர்.
இவ்விபத்தில் பலியான 190 பேர் தெப்பட்டன் தோட்ட கொத்தலென பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டனர். அடையாளம் காணக்கூடியவாறு இருந்த விமானப்பணிப்பெண்ணில் உடலை அவரின் காதலர் ஹெலிகொப்டர் மூலமாக இந்தோனேசியாவுக்கு கொண்டு சென்ற நெகிழ்ச்சியான சம்பவமும் இதில் அடங்கும்.
விமானத்தின் கருப்புப்பெட்டி தகவலின் படி தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இவ்விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விமானத்தை செலுத்திய விமானி 8 தடவைகள் இலங்கை மார்க்கமாக மக்காவிற்கு விமானத்தை செலுத்திய அனுபவஸ்தர் என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய ஒரு முக்கிய விடயமாகும்.
விபத்துக்குள்ளான விமான பாகங்களில் டயர்கள் இரண்டு மட்டும் பாதுகாக்கபட்டு வருகின்றது. ஒரு டயர் நோட்டன் பொலிஸ் நிலையத்திலும், மற்ற டயர் நோட்டன் விமலசுரேந்திர அணைக்கட்டுக்குச் செல்லும் வழியிலும் சம்பவத்தின் சுருக்கமான விபரங்களுடன் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவுத்தூண் ஒன்றும் அமைந்துள்ளதுடன் அப்பகுதி இப்போதுகாடாக காட்சியளிக்கின்றது.
இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 4ம் திகதி இந்தோனேசியாவிலிருந்து உறவினர்கள் இவ்விடத்திற்கு வந்து செல்வதாகக் கூறப்படுகின்றது.
விபத்து நடந்த இடத்தில் வசிக்கின்றவர்கள் இப்பகுதிக்குச் செல்பவர்களுக்கு சம்பவத்தை எடுத்துக் கூறிவருகின்றனர்.
2024 டிசம்பர் 4ம் திகதியுடன் இவ்விபத்து இடம்பெற்று 50 வருடங்களாகின்றன. இன்னமும் இச்சம்பவம் குறித்த நினைவுகளில் இப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றதாக அறிய முடிகின்றது!
செம்மைத்துளியான்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




0 Comments