Ticker

6/recent/ticker-posts

பெண்கள் மட்டுமே வேலை செய்யும் வங்கி (KMUCB) பற்றித் தெரியுமா?


இந்தியாவில் ஒவ்வொரு துறையிலும் பெண்கள் தங்கள் முன்னேற்றத்தினை பதிவு செய்து வருகின்றனர். பெண்களின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் முழுவதும் பெண் ஊழியர்களைக் கொண்ட ஒரு வங்கி திறக்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டில் திருமதி. லக்கிமி பருவா என்ற பெண்மணி அசாம் மாநிலத்தில் ஜோர்ஹட்டில் பெண்களுக்கான முதல் வங்கியை நிறுவினார். இந்த கூட்டுறவு வங்கியின் பெயர் கனக்லதா மகிளா நகர்ப்புற கூட்டுறவு வங்கி (KMUCB). இந்த வங்கியின் நிறுவனர் முதல் ஊழியர்கள் வரை அனைவருமே பெண்கள்தான். இப்போது இந்த வங்கி நான்கு கிளைகளுடன், 21 பெண் ஊழியர்களுடன் வங்கி சேவையை, 45,000 வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.

லக்கிமி பருவா பிறக்கும்போதே தன் தாயை இழந்தவர். அவரது வளரும் பருவத்தில் தனது தந்தையையும் இழந்து விட்டார். சிறு வயதிலேயே பெற்றோர்களை இழந்து நிறைய துன்பங்களை அடைந்தவர். ஆயினும் ,அவரது உறவினர்கள் அவரை படிக்க வைத்து ஆளாக்கினர். படித்து முடித்த பிறகு அவர் வங்கியில் பணிக்கு சேர்ந்தார். பெரும்பாலான பெண்களுக்கு வங்கிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றி தெரியவில்லை. இதை பற்றி லக்கிமி சிந்தித்தார். 

பெண்கள் வங்கிகளை எளிதாக அணுகவும், அதன் மூலம் பயன் பெறவும் ஒரு சிறப்புமிக்க வங்கி தேவை என்பதை அவர் உணர்ந்தார். பெண்கள் தங்களின் வருமானத்தை சேமிக்க கற்றுக் கொள்ளவும் மற்றும் தேவைப்படும் போது எளிதாக கடன் வாங்கவும், சுயமாக தொழில் தொடங்கவும் வங்கி கடன் கிடைத்தால் எப்படி இருக்கும் என்ற யோசனையில், பெண்களுக்காக தனி வங்கி தொடங்குதல் ஒரு தீர்வாக இருக்கும் என்று லக்கிமி பருவா நினைத்தார்.

பெண்களின் முன்னேற்றத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று நீண்ட காலமாக லக்கிமி உறுதி கொண்டிருந்தார். 1990 ஆம் இந்திய ரிசர்வ் வங்கியில் பெண்களுக்கான கூட்டுறவு வங்கியை தொடங்க விண்ணப்பித்து இருந்தார். பின்னர் 8.5 லட்சம் ரூபாய் முதலீட்டில்1,500 பெண் உறுப்பினர்களின் ஆரம்ப முதலீட்டில் 1998 ஆம் ஆண்டு கனக்லதா மகிளா நகர்ப்புற கூட்டுறவு வங்கியை (KMUCB) நிறுவினார். அதன் பிறகு அது ரிசர்வ் வங்கியின் உரிமத்தைப் பெற்றது. பெண்களின் வங்கித் பரிவர்த்தனைகளையும் சேமிப்பு  பழக்கத்தையும் அதிகரிப்பதே லக்கிமியின் நோக்கமாகும்.

இந்த மகிளா வங்கி, பெண்களை இணைக்க, அவர்களை ஊக்குவிக்க ஒரு முன்மாதிரி முயற்சியாக இருந்தது. அனைத்து விதமான பெண்களையும் ஒருங்கிணைத்து வங்கி சேவையை அவர்களுக்கு வழங்கியுள்ளனர். இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள 75 சதவீத பெண் வாடிக்கையாளர்கள் படிக்காதவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வங்கியின் ஊழியர்கள் அனைவரும் பெண்கள் மட்டுமே என்பது சிறப்பு. பெண்களுக்கு மட்டுமே இந்த வங்கியில் கடன் வழங்கப்படுகிறது. மாநில அரசின் திட்டங்கள் மூலம் பெண்கள் இந்த வங்கியில் கடன் பெறலாம். இருப்பினும், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, ஆண்களுக்கு பணத்தை டெபாசிட் செய்யும் வசதி வழங்கப்பட்டது.

இங்கு பெண்களுக்கான வங்கிக் கணக்கு 100 ரூபாயில் தொடங்குகிறது. பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுகாக ஜீரோ பேலன்ஸ் கணக்கு வசதியும் உள்ளது.

பெண்களை நிதி ரீதியாக சுதந்திரமாக மாற்றுவதற்காக, அவர்களின் பொருளாதார முன்னேற்றத்தை எளிமைப்படுத்துவதற்காக, கனக்லதா மகிளா நகர்ப்புற கூட்டுறவு வங்கியை நிறுவிய லக்கிமி பருவாவிற்கு இந்திய அரசின் உயரிய குடிமை விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது 2021ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. பெண்களுக்கான ஶ்ரீ சக்தி புரஸ்கார் விருது , ஜிங்கிள் விருது மற்றும் தேவி அகல்யாபாய் ஹோல்கர் விருதுகளை பெற்றுள்ளார். 2016 ஆம் ஆண்டில் சமுதாயத்திற்கு ஆற்றிய பணிக்காக கனக்லதா மகிளா நகர்ப்புற கூட்டுறவு வங்கி (KMUCB) நாரி சக்தி விருதைப் பெற்றது.

kalkionline



 Ai SONGS

 



Post a Comment

0 Comments