
இஸ்தான்புல்: துருக்கியில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 66 பேர் உயிரிழந்தனர். 51 பேர் காயமடைந்தனர்.
துருக்கியின் வடமேற்கு பகுதியில் உள்ள போலு மாகாணத்தில் கிப்ரிஸிக் நகரில் கர்தால்கயா ஸ்கை ஓட்டல் உள்ளது. 12 தளங்களைக் கொண்ட இதில் உள்ள உணவக பகுதியில் நேற்று அதிகாலையில் தீப்பிடித்துள்ளது. பின்னர் அந்தக் கட்டிடம் முழுவதும் தீ மளமளவென பரவியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புப் படை வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவ குழுக்களும் உடனடியாக அங்கு விரைந்தன. பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இதுகுறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சர் அலி யெர்லி காயா செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஓட்டல் தீ விபத்தில் சிக்கி 66 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 51 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2 வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்ததால் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் (238 பேர்) இந்த ஓட்டலில் தங்கி இருந்துள்ளனர்” என்றார்.
அதிபர் இரங்கல்: துருக்கி அதிபர் ரிசிப் தய்யிப் எர்டொகன் கூறும்போது, “தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்தனை செய்கிறோம். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும். விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
தீ விபத்து ஏற்பட்டதால் அதிர்ச்சியடைந்த விருந்தினர்களில் சிலர் ஜன்னல் வழியாக கயிறு கட்டி தப்பிக்க முயற்சித்துள்ளனர். அவ்வாறு குதித்த 3 பேர் உயிரிழந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
hindutamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments