
2024ம் ஆண்டு, ஆகஸ்ட் 16ம் தேதி. உத்தரப்பிரதேசத்தில் அம்பேத்கர் நகரில் ஒரு தலித் பெண் கூட்டு வல்லுறவு செய்யப்பட்டார். அவரது தந்தை காவல்துறையை அணுகி இருக்கிறார். முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய காவல்துறை மறுத்திருக்கிறது. மன அழுத்தம் தாங்காமல் அப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
ராஜஸ்தானிலுள்ள சுற்றுலா தலத்தில் படப்பதிவு செய்து கொண்டிருந்த ஒரு தலித் இளைஞர் தாக்கப்பட்டிருக்கிறார். அவரை முட்டி போட வைத்து, அவர் மீது சிறுநீர் கழித்திருக்கின்றனர்.
மத்தியப் பிரதேசத்தில் ஒரு தலித் பஞ்சாயத்து தலைவர் மரத்தில் கட்டி வைத்து அடிக்கப்பட்டு, ஊரை விட்டு விரட்டப்பட்டார்.
கடந்த 2023ம் ஆண்டில், தலித்கள் மீதான வன்கொடுமை குறித்த கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய அரசு, 2018ம் ஆண்டு தொடங்கி நான்கு வருடங்களில் 1.9 லட்சம் வன்கொடுமை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் அளித்தது. தேசிய குற்ற ஆவண நிறுவனத் தரவுகளின்படி இச்சம்பவங்களில் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 49,613 வன்கொடுமைகள் தலித்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கின்றன.
தலித்கள் மீதான வன்முறைகளில் உத்தரப்பிரதேசம் முதல் இடத்தில் இருக்கிறது. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி 2023ம் ஆண்டு வரையிலான தரவுகளில் 12,287 பதிவு செய்யப்பட்ட சம்பவங்களுடன் உத்தரப்பிரதேசம், தலித்களுக்கு எதிரான வன்கொடுமை எண்ணிக்கையில் முதல் இடத்தில் இருக்கிறது. அடுத்த இடத்தில் மத்தியப் பிரதேசம் இருக்கிறது.
பட்டியல் சாதியினர் மீது 52,866 வன்முறை சம்பவங்களும் பட்டியல் பழங்குடியினரின் மீது 9,725 சம்பவங்களும் 2022ம் ஆண்டில் பதிவாகி இருப்பதாக ஒன்றிய அமைச்சகம் தெரிவிக்கிறது. இவற்றில் பெருமளவுக்கான சம்பவங்கள், அதாவது 97.7% சம்பவங்கள், வெறும் 13 மாநிலங்களில் பதிவாகி இருக்கின்றன. அவற்றில் முன்னணி வகிப்பது பாஜக ஆளும் மாநிலங்களான உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகியவை என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேசத்தில் 2021ம் ஆண்டு 13146 ஆக இருந்த குற்றச் சம்பவங்கள் எண்ணிக்கை 2022ம் ஆண்டில் 15368 ஆக உயர்ந்திருக்கிறது. 16% அதிகம்.
இத்தகைய சம்பவங்களில் காவல்துறை எடுத்த நடவடிக்கை இன்னுமொரு சுவாரஸ்யம்!
பட்டியல் சாதியினர் மீதான வன்கொடுமை சம்பவங்கள் 69,597 ஆகவும் பட்டியல் பழங்குடியினர் மீதான வன்கொடுமை சம்பவங்கள் 12,417 ஆகவும் மொத்தத்தில் பதிவான நிலையில், 49,852 சம்பவங்களில்தான் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. 2022ம் ஆண்டின் முடிவில் 17,166 பட்டியல் சாதியினர் மீதான குற்றச்சம்பவ வழக்குகளும் 2,702 பட்டியல் பழங்குடியினர் மீதான குற்றச்சம்பவ வழக்குகளும் காவல்துறையால் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன.
இன்னொரு முக்கியமான பிரச்சினை வன்கொடுமை வழக்கு விசாரணைக்கென சிறப்பு நீதிமன்றங்கள் எண்ணிக்கையில் இருக்கும் பற்றாக்குறை!
வன்கொடுமை குற்றங்களை விசாரிக்க, மாநில அரசுகளே சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க முடியுமென வன்கொடுமை தடுப்புச் சட்டம் வழிவகை செய்திருக்கிறது. வேகமாக வழக்குகளை விசாரிக்க ஏதுவான சாத்தியத்தை இது கொடுத்தாலும் நாட்டின் 498 மாவட்டங்களில் வெறும் 194 சிறப்பு நீதிமன்றங்கள்தான் அமைக்கப்பட்டிருக்கின்றன.
குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவெனில், 17 என்ற அதிகமான எண்ணிக்கையில் சிறப்பு நீதிமன்றங்களை தமிழ்நாடு கொண்டிருக்கிறது என்பதுதான். பட்டியல் சாதி மற்றும் பழங்குடி மீதான குற்றங்கள் பட்டியலில் 10ம் இடத்தில் தமிழ் நாடு இருக்கிறது.
இரு முறை தொடர்ந்து ஆட்சியில் இருந்தும் தலித்கள் மீதான வன்கொடுமைகளை தடுக்க முடியாத உத்தரப்பிரதேச பாஜக அரசு கடும் விமர்சனங்களுக்குள்ளாகி வருகிறது. குறிப்பாக தலித்களுக்கு ஆதரவு அளிப்பது போலவும் தலித்களுக்கு ஆதரவாக குரல் எழுப்புவது போலவும் காட்டிக் கொள்ளும் பாஜக, உண்மையில் தலித்களுக்கு எதிரான அரசியலை இலக்காக கொண்டு செயல்பட்டு வருவதையே பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகமாகி வரும் தலித் வன்கொடுமைகளின் எண்ணிக்கை காட்டுகிறது.
kalaignarseithigal

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments