இன்றைய காலகட்டத்தில் கைபேசி இன்றியமையாத ஒன்றாகி விட்டது. அது இல்லாத உலகத்தை நினைத்துக்கூட பார்க்க முடியாது. திடீரென ஒரு நாளைக்கு எல்லா நெட்வொர்க்கும் வேலை செய்யவில்லை என்றால் நம் கதி அதோகதிதான். இதற்கு முன்னால் நாம் எல்லோருடைய விலாசம் மற்றும் தொலைபேசி எண்களை டையரியில் குறித்து வைப்போம். ஆனால், இப்போது அந்த வழக்கமே இல்லாமல் போய் விட்டது.
அன்றாட வாழ்க்கையில் பால் கணக்கு, சில குறிப்புகள் இவற்றை எல்லாம் நாம் இதற்கு முன்னால் காலண்டரில் குறித்து வைப்போம். ஆனால், இப்போது எல்லாம் கைபேசியில்தான். கையால் எழுதும் வழக்கமே போய் விட்டது. குழந்தைகள் முதற்கொண்டு கால அட்டவணையைக் கூட கைபேசியில் குறித்து வைக்கிறார்கள்.
படிக்காதவர்கள் கூட கைபேசியின் அனைத்து இயக்கங்களை கற்றுக்கொண்டு விட்டனர். அதுவும் இந்த வாட்ஸ் அப் வந்ததிலிருந்து எல்லோருடைய கைதான் அதிகமாகப் பேசுகிறது. முன்பு போல் யார் இப்போது land lineல் பேசுகிறார்கள்? தொலைபேசி மூலமாக பேசுவது முற்றிலும் குறைந்து விட்டது.
அப்போதெல்லாம் வெளியூரிலிருந்து trunk call செய்து பேசுவார்கள். மகனோ, மகளோ அல்லது குடும்பத்தில் யாராவது வெளியூரிலோ அல்லது வெளிநாட்டிலோ இருந்தால் வாரம் ஒருமுறைதான் போன் செய்து பேசுவார்கள். அந்த அழைப்பிற்காக மற்றவர்கள் காத்துக்கொண்டிருப்பார்கள். அதைப்போல் முக்கியமான அவசரச் செய்தி என்றால் telegram மூலமாக அனுப்புவார்கள். தபால்காரர் telegram என்று கத்தினாலே நமக்கு உடல் நடுங்கி விடும், பதற்றமாக இருக்கும். ஆனால், இப்போது அந்தப் பதற்றமே இல்லாமல் போய் விட்டது.
கடிதம் எழுதும் வழக்கமும் போய் விட்டது. இன்னும் சொல்லபோனால் அந்த நாட்களில் பள்ளிக்கூட தேர்வு முடிவும் கடிதத்தில்தான் வரும். ஆண்டுத் தேர்வு முடிந்து இரண்டு வாரம் ஆன உடன் குழந்தைகள் தபால்காரரை நச்சரிப்பார்கள். 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள் முடிவுக்காக செய்தித்தாளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த எதிர்பார்ப்பு எல்லாம் இப்போது போய் விட்டது.
குழந்தைகள் நூலகத்திற்குச் சென்று படிக்கும் வழக்கம் குறைந்து விட்டது. எல்லோரும் நூலக புக்கிற்கு பதிலாக face book ஐ வைத்திருக்கிறார்கள். வங்கியில் கால் கடுக்க நிற்போம், பணம் எடுப்பதற்கும் போடுவதற்கும். ஆனால், இப்போதோ வீட்டில் உட்கார்ந்தபடியே எல்லாம் நடக்கின்றன.
அன்று பாரதியார், ‘காலை எழுந்தவுடன் படிப்பு’ என்று கூறினார். ஆனால், இன்றோ காலை எழுந்தவுடன் வாட்ஸ் அப் என்றாகி விட்டது. திருமண அழைப்பிதழ்களை கூட இப்போதெல்லாம் எல்லோரும் வாட்ஸ் அப்பில் அனுப்புகிறார்கள். தொலை தூரத்தில் இருப்பவர்கள் வாட்ஸ் அப்பில் பத்திரிகையை அனுப்பினால் அதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால், பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் கூட வாட்ஸ் அப்பில் அனுப்புகிறார்கள்.
காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை இந்த கைபேசி ஒரு நிமிடம் கூட இல்லை என்றால் ஒன்றுமே ஓடாது என்ற நிலைமையாகி விட்டது. சிறு குழந்தைகளுக்குக் கூட தாலாட்டை வாயில் பாடாமல் கைபேசியில் ஆன் செய்து விட்டு தனது வேலையை பார்க்கச் சென்று விடுகிறார்கள். இக்காலத்து குழந்தைகளுக்கும் அதுவே வழக்கமாகி விட்டது. நேரத்திற்கு தனது உடம்பை கவனித்துக் கொள்கிறார்களோ இல்லையோ தெரியாது, ஆனால் நேரத்திற்கு கைபேசியை chargeல் போட்டு விடுவார்கள். வீட்டிற்குத் தேவையானதை வாங்க மறந்தாலும் பரவாயில்லை, ஆனால் recharge செய்ய மறந்துவிட்டால் அவ்வளவுதான், நிலைமை மோசமாகி விடும்.
இவை எல்லாம் இனி மாறப்போவதில்லை. கைபேசியும் நமக்கு அவசியம்தான். ஆனால், நம்மால் முடிந்தவரை மறந்துபோன சில விஷயங்களை மீண்டும் புதுப்பிக்க முயற்சிப்போம். முடிந்த வரை அருகில் இருப்பவர்களிடம் கைபேசியில் பேசாமல் நேரில் சென்று பேசும் வழக்கத்தை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்போம். நூலகத்திற்கு சென்று புத்தகங்களைப் படிக்க குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்வோம். எங்கெல்லாம் தவிர்க்க முடியுமோ அங்கெல்லாம் கைபேசியைத் தவிர்ப்போம்.
kalkionline
கட்டுரைகள் | Ai SONGS |
Email;vettai007@yahoo.com
0 Comments