இந்தியாவில் உள்ள மாநில முதல்வர்களின் சொத்து மதிப்புகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (ADR) இந்த சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்தியாவின் பணக்கார முதல்வராக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இடம்பிடித்துள்ளார். ரூ. 931 கோடிக்கு மேல் சொத்துக்களுடன் இந்தியாவின் பணக்கார முதல்வர் என்கிற அந்தஸ்தை பெற்றுள்ளார் சந்திரபாபு நாயுடு. எனினும், சந்திரபாபுவுக்கு ரூ.10 கோடி அளவுக்கு கடன் இருப்பதாகவும் அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடைசி இடத்தை பிடித்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு ரூ.15 லட்சம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், மம்தாவுக்கு முந்தைய இடங்களை ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் பினராயி விஜயன் ஆகியோர் பெற்றுள்ளனர். உமர் அப்துல்லா 30-வது இடமும், பினராயி விஜயன் 29-வது இடமும் பெற்றுள்ளனர். உமர் அப்துல்லாவின் சொத்து மதிப்பு ரூ.55 லட்சம் என்றும், பினராயி விஜயனின் சொத்து மதிப்பு ரூ.1 கோடி என்றும் சொல்லப்பட்டுள்ளது.
தமிழக முதல்வருக்கு என்ன இடம்?
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த பட்டியலில் 14-வது இடம் பிடித்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ.8 கோடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ.8,88,75,339 சொத்து வைத்துள்ள அதேவேளையில், எந்தக் கடனும் இல்லை என்று சொல்லப்பட்டுள்ளது. எனினும், முதல்வர் ஸ்டாலினுக்கு தனிப்பட்ட வருமானமாக ரூ.28 லட்சம் கிடைக்கிறது என்றும் சொல்லப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியின் முதல்வர் ரங்கசாமி ரூ.38 கோடி சொத்துக்களுடன் 6-ம் இடம் பிடித்துள்ளார். அதேபோல் கர்நாடகா முதல்வர் சித்தராமையா ரூ.51 கோடியுடன் 3-ம் இடம்பிடித்துள்ளார்.
அருணாச்சல பிரதேச முதல்வர் பீமா கண்டு ரூ.332 கோடி சொத்துக்களுடன் பட்டியலில் இரண்டாம் இடம்பிடித்து இந்தியாவின் இரண்டாவது பணக்கார முதல்வராகியுள்ளார்.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு இந்த தகவல்களை மாநில முதல்வர்கள் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த வேட்புமனுக்களில் கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் திரட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.
news18
கட்டுரைகள் | Ai SONGS |
Email;vettai007@yahoo.com
0 Comments