
பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகள் காலனித்துவ காலத்தில் இருந்தே பசி , பட்டினியால் வாடுபவையாக உள்ளன. அவர்களுக்கு விடுதலை கிடைத்த பின்னரும் மற்றவர்களால் உறிஞ்சப்பட்டுக் கொண்டு தான் உள்ளனர். அடிக்கடி நிலவும் உள்நாட்டு வன்முறைகள் அவர்களின் நிலைமையை இன்னும் மோசமாக்குகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் பசி மற்றும் பட்டினியால் உயிரிழப்பு சாதாரண ஒரு விஷயமாக தான் உள்ளது.
சூடான் நாட்டின் மொத்த மக்கள் தொகை தற்போது சுமார் 48 மில்லியனாக உள்ளது. சூடானின் நாட்டு இராணுவத்திற்கும் துணை ராணுவ ஆதரவுப் படைகளுக்கும் இடையே 22 மாதங்களாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. போரின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். சூடான் மக்கள் தொகையில் 20% ஏற்கனவே இடம்பெயர்ந்து விட்டனர்.
இந்த மோதல்களால் மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் சூடானின் உள்கட்டமைப்பு, வர்த்தக வழிகள் மற்றும் விநியோகச் சங்கிலிகள் ஆகியவை பெரும்பாலும் அழிந்து விட்டன. தற்போது சூடான் வரலாற்றில் உலகின் மிகப்பெரிய பட்டினிப் பேரழிவை சந்திக்கும் அபாயத்தில் உள்ளது. இதுவரை 1060 க்கும் மேற்பட்ட மக்கள் பட்டினியால் உயிரிழந்துள்ளனர். மக்கள் தொகையில் 2.46 கோடி மக்கள் பசி, பட்டினியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு கிடைப்பது பெரிய சவாலாக உள்ளது.
உணவு பஞ்சத்தினால் உலகில் அதிகமாக பட்டினியை எதிர் கொள்ளும் நாடாக சூடான் உள்ளது. சூடானில் வடக்கு டார்ஃபரின் ஜம்சாம் முகாமில் ஆகஸ்ட் மாதம் பஞ்சம் முதன்முதலில் உறுதி செய்யப்பட்டது. பின்னர் அது மேலும் நான்கு பகுதிகளுக்கு பரவியுள்ளது. டிசம்பர் மற்றும் மே 2025 க்கு இடையில் வடக்கு டார்ஃபரில் மேலும் ஐந்து பகுதிகளில் பஞ்சம் ஏற்படும் என்று கணிக்கப் பட்டுள்ளது. இந்த நிலை தொடரும் பட்சத்தில் பெரிய பேரழிவை ஏற்படுத்தும் என ஐ.நா கவலை கொள்கிறது.
2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், உலக உணவுத் திட்டம் மூலம் சூடான் முழுவதும் உணவு பொருட்கள் வழங்குவதை ஐநா தொடங்கியது. 20 லட்சத்திற்கும் அதிகமாக மக்களுக்கு மாதாந்திர உதவி வழங்கியது. இந்நிலையில் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட முகாம்கள் ஒன்றில் கடந்த வாரம் சூடான் துணை இராணுவக் குழு தாக்குதல் நடத்தியது. துணை ராணுவக் குழு டார்ஃபர் பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைக்க முயற்சி செய்கிறது. பஞ்சம் உள்ள பகுதிகளிலும் பஞ்ச அபாயத்தில் உள்ள பகுதிகளிலும் மோதல்கள் கடுமையாக நடைபெறுவதால் உணவு விநியோகத்தை ஐநாவினால் சரியாக வழங்க இயலவில்லை.
உள்நாட்டுப் போரினால் ஏற்பட்ட மோசமான உணவுப் பஞ்சத்தால் மேலும் 1 கோடி மக்கள் இடம்பெயர தயாராக உள்ளனர். இதை தடுக்க அவர்களுக்கு உணவு விநியோகம் கிடைக்க வேண்டும். இதற்காக 6 பில்லியன் டாலர்களை ஐ.நா சபை கோரியுள்ளது. ஐ.நா வின் உணவுத் திட்டம் நாட்டிற்குள் சுமார் 2.1 கோடி மக்களுக்கு விநியோகம் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது 2025 ஆம் ஆண்டிற்கான மிகவும் முக்கியமாக மனிதாபிமான நடவடிக்கையாக உள்ளது. மேலும் இந்த உணவு திட்டத்திற்கு 4.2 பில்லியன் டாலர் தேவைப்படுகிறது. மீதமுள்ள தொகை இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளுக்காக பயன்படும்.
உலகின் மிகப்பெரிய உணவு பஞ்சங்களை நமது நாடான இந்தியாவும் , பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சந்தித்துள்ளது.1943 ஆம் ஆண்டு இந்தியாவில் விளைந்த தானியங்களை எல்லாம் பிரிட்டிஷ் அரசாங்கம் உலகப்போரினால் பாதிக்கப்பட்ட தன் நாட்டிற்கு எடுத்து சென்று விட்டது. இதனால் வங்காளத்தில் மட்டும் 30 லட்சம் பேருக்கு மேல் உணவுக்கு வழியின்றி பட்டினால் இறந்தனர். 1959-61 ஆம் ஆண்டு சீனாவின் விவசாயக் கொள்கை மாற்றத்தினால் 3- 4.8 கோடி மக்கள் இறந்துள்ளனர். உலகின் பெரும் பஞ்சங்களில் இவை பெரியவை.
kalkionline

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments