
உலக அளவில் மூன்றில் இரண்டு பங்கு விலங்குகள் மற்றும் தாவரங்களின் மரபணு பரவல் தன்மை குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால், இந்த விலங்குகள் மற்றும் தாவரங்கள் எண்ணிக்கை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உலக அளவில் கோடிக்கணக்கான விலங்குகள் மற்றும் தாவர இனங்கள் உள்ளன. இந்த உயிரினங்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், விலங்குகள், பறவைகள் மற்றும் தாவரங்களின் மரபணு பரவல் தன்மை குறித்து ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
1985-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டுவரையான காலத்தில், 628 வகையான தாவரங்கள், விலங்குகள் மற்றும் பறவைகள் தன்மை குறித்த தரவுகள் ஆய்வு செய்யப்பட்டன. அதாவது, விலங்குகளின் உரோமம், மலம் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டு, ஆய்வகங்களில் ஆய்வுசெய்யப்பட்டன. இதில், மூன்றில் இரண்டு பங்கு விலங்குகள் மற்றும் தாவரங்களின் மரபணு பரவல் தன்மை குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம், அந்த விலங்குகள் மற்றும் தாவரங்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பறவைகள் மற்றும் பாலூட்டி உயிரினங்களின் எண்ணிக்கையில் மிகப்பெரும் வேறுபாடு இருப்பதால், அவை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்த சிட்னி பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் கேத்தரின் குரூபர், ''குறிப்பிட்ட பிராந்தியம் என்று இல்லாமல், உலகம் முழுமைக்கும் உயிரி பரவல் குறைய வாய்ப்பு உள்ளதாக'' தெரிவித்தார். குறிப்பாக, சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்திருப்பதே இதற்கு உதாரணம் என்று அவர் குறிப்பிட்டார்.
மரபணு பரவல் தன்மை குறையும்போது, புதிதாக உருவாகும் நோய்கள், வெப்ப அலை, சுற்றுச்சூழல் மாற்றங்கள் போன்ற எதிர்கால சவால்களை அந்த குறிப்பிட்ட விலங்குகளால் எதிர்கொள்ள முடியாத நிலை ஏற்படும் என்று அவர் தெரிவித்தார். மனிதர்கள் குடியேற்றம், மனிதர்களால் உருவான காலநிலை மாற்றம், இயற்கைப் பேரிடர் போன்ற காரணங்களால், விலங்குகளின் எண்ணிக்கை குறையும் நிலை இருப்பதாகவும் குரூபர் தெரிவித்தார்.
பறவைக் காய்ச்சல் காரணமாக, உலகம் முழுவதும் பறவைகளின் எண்ணிக்கை குறைவதற்கான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ள விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம், விலங்குகள் மற்றும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், மரபணு பரவல் அளவு அதிகரித்துள்ளதை ஆய்வுகள் தெரிவிப்பதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments