
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரையும் இந்திய அணி வென்றுள்ளது. ஏற்கனவே 20 ஓவர் கிரிக்கெட் தொடரை வென்றிருந்த நிலையில் இன்று நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறது. டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்றது. இதனை தொடர்ந்து ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கின.
3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில் இரண்டாவது போட்டி இன்று ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
49.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்த இங்கிலாந்து அணி 304 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியின் ஜோ ரூட் 69 ரன்களும், பென் டக்கட் 65 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் ஓரளவு ரன்கள் சேர்க்க 304 என்ற சவாலான ஸ்கோரை இங்கிலாந்து அணி சேர்த்தது.
இதன் பின்னர் 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களமிறங்கினர். தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா – சுப்மன் கில் இணை அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தது. இருவரும் முதல் விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்தனர். கில் 60 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க, தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 76 பந்துகளில் சதம் அடித்தார்.
தொடர்ந்து விளையாடிய அவர் 90 பந்துகளில் 7 சிக்ஸர் மற்றும் 12 பவுண்டரியுடன் 119 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 44 ரன்கள் சேர்த்தார். 44.3 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 308 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் வரும் 12-ம் தேதி புதன் அன்று நடைபெறுகிறது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments