
காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் தாக்குதலில், இதுவரை 17 ஆயிரத்து 400 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7- ஆம் தேதி முதல் காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதலில் இதுவரை 17 ஆயிரத்து 400 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 15 ஆயிரத்து 613 குழந்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் 45 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை உயிரிழப்பதாகவும், போர் தொடங்கி 535 நாள்களில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 30 குழந்தைகள் கொல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, 100 குழந்தைகளை கணக்கில் எடுத்துக் கொண்டால், 2 பேர் கொல்லப்பட்டிருப்பார்கள், 2 பேர் காணாமல் போயிருப்பார்கள் அல்லது இறந்திருப்பார்கள், 3 பேர் பலத்த காயமடைந்திருப்பார்கள், 5 பேர் அனாதைகளாக அல்லது பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டிருப்பார்கள், 5 பேர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். மீதமுள்ள குழந்தைகள் போரினால், மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.
வயது வாரியாக பார்த்தால், கொல்லப்பட்டவர்களில் 825 குழந்தைகள் 1 வயதை எட்டாதவர்கள், 895 பேர் ஒரு வயது குழந்தைகள், 3,266 பேர் இரண்டு முதல் ஐந்து வயது வரையிலானவர்கள், 4,032 பேர் ஆறு முதல் 10 வயது வரையிலான குழந்தைகள், 3,646 பேர் 11 முதல் 14 வயதையுடையவர்கள், 2,949 பேர் 15 முதல் 17 வயது வரையிலானவர்கள் என கூறப்பட்டுள்ளது. பலியானவர்களில், 8,899 பேர் ஆண் குழந்தைகள், 6,714 பேர் பெண் குழந்தைகள்.
இஸ்ரேல் ராணுவம், மகப்பேறு மருத்துவமனைகளையும், பிரசவ வார்டுகளையும் குறிவைத்து தாக்கி, இனப்படுகொலை போன்ற போர்க் குற்றங்களை புரிவதாக கடந்த வாரம் ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையம் அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், குழந்தைகள் அதிக அளவில் கொல்லப்படுவதாக வெளியாகியுள்ள தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments