Ticker

6/recent/ticker-posts

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-58


பழங்குடி மக்கள் பற்றிய தனது உயர்கல்விக்கான தேடலின்போது கானகத்துக் கலியாணங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை இர்வின்  அறிந்து வைத்திருந்தான்.

இரவு முழுவதும் கூத்தும் கும்மாளமுமாக இருந்தவர்களிற் சிலர், விடிந்ததும் தமது ஜாகைகளை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். இன்னும் சிலர் வெட்டவெளியில்  அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். 
ரெங்க்மாவின் பெற்றோர்களும், செரோக்கியின் பெற்றோர்களும் உறவினர்கள்  சிலரோடு சேர்ந்து, இரவு உண்டுவிட்டு ஆங்காங்கே போடப்பட்டிருந்த ஏனங்களைத் திரட்டிக்  கழுவிக் கொண்டிருப்பதில் கொண்டிருந்தனர்.

முன்றலுக்கு வந்துசேர்ந்த இர்வினை தூரத்திலிருந்தே இனங்கண்டுகொண்ட செரோக்கியின் தந்தை  ஓடி வந்து, கானகத்து மொழியில் எதோ கர்ஜித்தவராக, தலை குனிந்து  வரவேற்றார்!

செரோக்கியோடு பலமுறைகளில் இர்வினை அவர் கண்டிருக்கின்றார். இர்வின் நகரத்து இளைஞன் என்பதோ கானகத்துக்குள் வேசமிட்டு வந்திருப்பதோ செரோக்கியின் பெற்றோருக்கு மாத்திரமல்ல, புரோகோனிஷ் கிராமத்தில்  எவருக்குமே தெரிய வாய்ப்பில்லை! செரோக்கியின் நண்பன், அவனும் கானகத்தில் ஏதோவொரு பழங்குடியைச்  சேர்ந்தவன் என்பதுதான் அவர்களது நினைப்பு!

இர்வின் வந்துள்ள விடயத்தை நாசூக்காகப் புரிந்துகொண்ட செரோக்கியின் தந்தை புதுத்தம்பதியினரின் அறையை சுட்டிக்காட்டி, வெளியிலிருந்து குரல் கொடுத்தார். 

செரோக்கி ஓலைக்கதவை மெல்ல நகர்த்தி எட்டிப் பார்க்கலானான்! தன்  நண்பனைக் கண்டதும் அவன் அதிர்ந்து விட்டான்.  இர்வினின் வருகையை அவன் ஒருபோதும் எதிர்பார்த்திருக்கவில்லை! ஒலைக்கதவை நகர்த்திவிட்டு, அசாதாரண பலவந்தத்தோடு அறைக்குள் நுழைந்தவனை ஆரத்தழுவிக் கொண்டான் செரோக்கி!

புன்னகை பூத்தபடி பூரித்து நின்றிருந்த ரெங்க்மா, நண்பர்களின் நேச இணைப்பைக்கண்டு,  தன் கை விரல்களை மெல்லக் கடித்தவளாக  ஒய்யாரமாக ஒதுங்கி நின்றாள். அந்த வெட்கத்திலிருந்து   அவளின் மாற்றத்தில் ஒருவித தோற்றம் வெளிப்பட்டதை  இர்வின் புரிந்துகொண்டான்!

(தொடரும்)

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments