எனது கணவன் இருதய நோயினால் கடந்த 12 வருடங்களாக பாதிக்கப்பட்டுள்ளார். 1 மாதத்திற்கு முன்பு திடீரென பாரிசவாத நோயினால் பாதிக்கப்பட்டு உடம்பின் வலது பக்கம் எந்தவிதமான அசைவும் இன்றி உள்ளது. முகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இவருக்கு யுனானி வைத்தியசாலையில் ஏதாவது சிகிச்சை உண்டா ? தயவு செய்து கூடிய சீக்கிரம் பதில் தாருங்கள்.
ரிஸ்வியா,திஹாரிய
பதில் : பாரிசவாதம் என்பது நரம்புத் தொகுதியின் பிரதான உறுப்புக்களான மூளை அல்லது அதனை தொடரும் முண்ணானில் ஏற்படுகின்ற ஒரு அசாதாரண நிலையினால் உடம்பின் ஒருபகுதி செயல் இழப்பதை குறிக்கும். இது பக்க வாதம் எனவும் கூறப்படும்.
மூளையின் வலது பக்கத்திலிருந்து ஆரம்பிக்கும் நரம்புகள் உடலின் இடது பக்கத்தையும் மூளையின் இடது பக்கத்திலிருந்து ஆரம்பிக்கும் நரம்புகள் உடம்பின் வலது பக்கத்தையும் கட்டுப் படுத்துகின்றன என்பது எம்மில் அனேகருக்கு தெரியாது. எமது மூளையின் வலது பக்கத்தில் ஏற்படுகின்ற நோய் நிலை உடம்பின் இடது பக்கத்தையும் மூளையின் இடது பக்கத்தில் ஏற்படுகின்ற நோய் நிலை உடம்பின் வலது பக்கத்தையும் செயல் இழக்கச் செய்கின்றன.
உதாரணமாக நாம் எமது இடது கையை அசைக்க வேண்டுமாயின் அதற்கான சமிக்ஞையும் உத்தரவும் மூளையின் வலது பக்க மூளையிலிருந்து கைகளுக்கு வரக்கூடிய நரம்புகளின் ஆரோக்கியத்தில் தான் தங்கியுள்ளது. இவ்வாறு வலது பக்க மூளையிலிருந்து வரக்கூடிய நரம்பு பாதிக்கப்பட்டால் இடது கையை அசைக்க முடியாமல் போகும். இதையே பாரிசவாதம் எனக் கூறுகின்றோம்.
நமது நாட்டில் மரணத்திற்கான மூன்றாவது காரணியாக பாரிசவாதம் இருப்பதோடு வருடந்தோறும் 1000 பேரில் 3 பேரை இந்நோய் தாக்குகின்றது. மேலும் பாரிசவாதம் ஏற்பட்டு உயிர். தப்பினாலும் அவர்கள் அங்கவீனர்களைப் போல் எதையும் செய்ய முடியாது குடும்பத்திற்கு ஒரு சுமையாகவே இருப்பார்கள்.
எனவே இந்நோய் வராமல் தடுப்பதே மிகவும் மேலானது. பாரிசவாதம் பல நோய்களுக்கு தொடர்ச்சியாக சிகிச்சை எடுக்காமல் இருப்பதன் மூலம் மூளையில் உள்ள இரத்தக் குழாய்களிலிருந்து இரத்தக் கட்டி அடைபடுதல் அல்லது இரத்த நாடிகள் வெடித்தல் போன்றவைகளினால் ஏற்படுகின்றன.
இவ்வாறு இரத்தக் குழாய்கள் அடைபடுவதற்கு அல்லது வெடிப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அதிக குருதி அழுத்தம், அதிக கொலஸ்ரோல் இருதய நோய்கள், நீரிழிவு நோய், அதிக உடற்பருமன் போன்ற நோய்களுக்கு சரியான சிகிச்சை எடுக்காமல் இருப்பதும் புகைத்தல், மதுபானம், உடற்பயிற்சியின்மை போன்றவைகளுமே காரணங்களாக இருக்கின்றன.
அதிக குருதி அழுத்தம் போன்ற நிலைகளில் அனேகமாக நோய் அறிகுறிகள் தென்படாது. ஒருவர் சுகதேகி போல தென்பட்டாலும் இந்நோய்களின் உக்கிரத்தன்மை கூடி பாரிசவாதமே முதல் அறிகுறியாகவும் வரலாம். ஒருமுறை பாரிசவாதம் வந்தவர்களுக்கு மீண்டும் ஒருமுறை பாரிசவாதம் ஏற்படாது எனக் கூறவும் முடியாது.
ஒருவருக்கு பாரிசவாதம் ஏற்பட்டால் உடனடியாக நவீன வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதன் மூலம் பாரிய தாக்கங்களில் இருந்து நோயாளியை காப்பாற்றலாம்.
6 மணித்தியாலங்களுக்கு முன் கொண்டு செல்வதே மிகச் சிறந்தது. நவீன சிகிச்சை முறையின் மூலம் நோயின் தீவிரத்தன்மையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இதற்கு ஏறக்குறைய 7 நாட்கள் எடுக்கும். நரம்புத் தொகுதியின் இழந்த தொழிற்பாடுகளை ஈடுசெய்வதற்கும் நரம்பக் கொகுதியை பலப்படுத்துவதற்கும் திருப்திகரமான சிகிச்சை முறைகள் நவீன வைத்தியத்துறையில் இல்லை. எனவே நோயின் தீவிரத்தன்மையை நவீன வைத்திய சிகிச்சை மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பின்பு யுனானி அல்லது ஆயுர்வேத சிகிச்சை முறைகளில் மூலமே சிகிச்சையளித்து சிறந்த பலனை பெறலாம்.
யுனானி மற்றும் ஆயுர்வேத வைத்திய முறைகளில் பாரிசவாதத்திற்கு சிகிச்சையளிக்கும்போது பல வேறுபட்ட சிகிச்சை முறைகளை கையாள்வதனால் திருப்தி கரமான பெறுபேறுகள் கிடைக்கின்றன.
முக்கியமாக இந்நோய்க்குரிய மருத்துவ குணமுள்ள உணவுகள் ஊட்டச்சத்துள்ள மருந்து வகைகள் உட்பட நரம்பு மற்றும் மூளையின் தொழிற்பாடுகளை சீர்செய்யக்கூடிய விசேட மருந்துகள் மருத்துவ குணமுள்ள வெளிப்பூச்சு,மருத்துவ குணமுள்ள வெளிப்பூச்சு மருந்துகள் போன்ற சிறந்த சிகிச்சை முறைகள் மூலம் திருப்திகரமான பெறுபேறுகளை பெற்றுள்ளோம்.
சிகிச்சையில் கூடிய பலனைப் பெற வேண்டுமானால் நவீன மருத்துவ சிகிச்சை முறை மூலம் நோயின் தீவிரத் தன்மையை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்ததும் உடனடியாக யுனானி மற்றும் ஆயுர்வேதச் சிகிச்சை முறைகளை மேற்கொள்ளவேண்டும். ஆனால் நீங்கள் தேர்ச்சி பெற்ற யுனானி அல்லது ஆயுர் வேத வைத்திய நிபுணர்களை நாடுவதே முக்கியம்.
இங்கு கேள்வி கேட்டிருப்பவரின் கணவருக்கும் பாரிசவாதம் ஏற்பட்டு குறுகிய காலமென்பதால் திருப்திகரமான பலனைப் பெறலாம் என நினைக்கின்றேன்.
இதற்காக நன்கு தேர்ச்சியும் அனுப்வமும் பெற்ற கொழும்பு பல்கலைக் கழக யுனானி மற்றும் ஆயுர்வேத விசேட வைத்திய நிபுணர்களது சிகிச்சை மூலம் அனேகமானோர்கள் பயன்பெற்றுள்ளனர்.
இறுதியாக நீரிழிவு, இருதய நோய்கள் அதிக குருதி அழுத்தம், அதிக கொலஸ்ரோல் போன்ற நோயிருப்பவர்கள் வைத்தியர்கள் கூறும் ஆலோசனைகளைப் பின்பற்றி - மாத்திரைகளை ஒழுங்காக உட்கொண்டு - பாரிசவாத நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
DR.NASEEM
0 Comments