
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் நடப்புச் சாம்பியனாக விளையாடியது. வரலாற்றிலேயே முதல் முறையாக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் இந்தத் தொடரில் பாகிஸ்தான் மீண்டும் கோப்பையை வெல்லும் என்று அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியிலேயே தோற்ற பாகிஸ்தான் பரம எதிரி இந்தியாவுக்கு எதிராகவும் தோல்வியை சந்தித்தது.
அதனால் 5 நாட்களில் குரூப் சுற்றுடன் வெளியேறிய பாகிஸ்தான் அணி வங்கதேசத்துக்கு எதிராக விளையாடி கடைசிப் போட்டியும் மழையால் ரத்து செய்யப்பட்டது. அதனால் சொந்த மண்ணில் நடைபெற்ற ஐசிசி தொடரில் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யாத அணி என்ற மோசமான உலக சாதனையை பாகிஸ்தான் படைத்தது. அதனால் பாகிஸ்தான் ரசிகர்களும் வீரர்களும் பெரிய ஏமாற்றத்தை சந்தித்தனர்.
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரானப் போட்டியில் தம்முடைய இளம் வயது ஹீரோ விராட் கோலிக்கு பௌலிங் செய்ததாக பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமது தெரிவித்துள்ளார். துபாயில் நடைபெற்ற அந்தப் போட்டியில் அபாரமாக பௌலிங் செய்த அவர் 10 ஓவரில் 28 ரன்கள் மட்டும் கொடுத்து சுப்மன் கில் விக்கெட்டை எடுத்தார். அதற்காக விராட் கோலி களத்திலேயே அவரை மனதார தோளில் தட்டிக் கொடுத்து பாராட்டினார்.
மேலும் அற்புதமாக பந்தை சுழற்றி கில்லை கிளீன் போல்ட்டாக்கிய அவரைப் பார்த்து விராட் கோலி வியப்பான ரியாக்ஷனையும் கொடுத்தார். அப்படி தம்மைப் பாராட்டிய விராட் கோலி சிறந்த கிரிக்கெட்டர் என்பதற்கு நிகராக நல்ல மனிதர் என்றும் அப்ரார் அகமது தெரிவித்துள்ளார். இது பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.
“எனது குழந்தைப் பருவ ஹீரோ விராட் கோலிக்கு பௌலிங் செய்தேன். அவருடைய பாராட்டுக்காக நன்றியுடையவனாக இருக்கிறேன். கிரிக்கெட்டராக அவருடைய மகத்துவம் ஒரு மனிதராக அவருடைய பணிவுக்கு பொருத்தமாக இருக்கும். களத்திலும் களத்திற்கு வெளியேயும் அவர் உண்மையாக உத்வேகத்தைக் கொடுக்கக் கூடியவர்” என்று பதிவிட்டுள்ளார்.
அந்த வகையில் சிறந்த வீரரான கோலி பாகிஸ்தானுக்கு எதிராக சதத்தை அடித்து ஃபார்முக்கு திரும்பி தன்னை சாம்பியன் வீரர் என்பதை நிரூபித்தார். இதைத்தொடர்ந்து இந்தியா தங்களது கடைசி குரூப் போட்டியில் வலுவான நியூசிலாந்தை சந்திக்கிறது. அதில் இந்தியா வெல்வதற்கு விராட் கோலி அசத்துவது அவசியமாவது குறிப்பிடத்தக்கது.
crictamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments