Ticker

Ad Code



மகிழ்வுகொள் மனமே...!


என்ன நினைக்கிறோமோ, சொல்கிறமோ, செய்கிறோமோ இந்த மூன்றையும் இணக்கமாக ஒரே அலைவரிசையில் செய்ய முடிவதுதான் மகிழ்ச்சி. சிறு சிறு மகிழ்ச்சிகளின் தொகுப்பே வாழ்க்கை. அது வெளியிலிருந்து வருவதில்லை, அது நம்மிடமிருந்தே வருவது என்கிறார்கள் மகான்கள். எதையும் இயல்பாக பார்க்கும் மனோபாவம் தான் மகிழ்ச்சிக்கான அடிப்படை.

மகிழ்ச்சியாக இருக்கும் உடலில் டோபமைன், செரோடோனின், என்டார்பின்ஸ், ஆக்ஸிடோசின், நார்எபிநெப்ரின்ஸ் போன்ற அட்ரினலின் ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவையெல்லாம் ஆரோக்கியமான மனநிலை மற்றும் உடல் நிலைக்கு அடிப்படையானது.

நமது உடலில் சுரக்கும் சில ஹார்மோன்கள் நம்மை மகிழ்ச்சி மனநிலையில் வைத்திருக்க உதவுகின்றன. அந்த ஹார்மோன்களின் சீரான சுரப்பிற்கு சில பயிற்சிகளும், சில முயற்சிகளும் தேவை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அவற்றில் சில, அன்றாடம் இளம் சூரிய ஒளியில் அரைமணி நேரம் உடற்பயிற்சி, ஆழ்ந்த மூச்சு பயிற்சி, யோகா, தியானம் போன்றவைகள். நிம்மதியான 8 மணி நேர தூக்கம், மனதிற்கு பிடித்த விளையாட்டு அல்லது ஹாபிகளில் கொஞ்ச நேரம் செலவிடுதல், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் அதிக நேரம் செலவழித்தல்.

வாரம் ஒருமுறை மசாஜ் செய்து கொள்தல். அன்றாடம் ஒமேகா3 உள்ள உணவுகள், பால் உணவு பொருட்கள்,டார்க் சாக்லேட் மற்றும் காபி போன்றவைகளை அளவாக சாப்பிடுதல்.

மகிழ்ச்சியான மனிதர்கள் வெற்றியாளராக, குறிக்கோளை அடைபவர்களாக, ஆரோக்கியமாக நீண்ட ஆயுள் உடையவராக எதையும் எளிதில் கற்று, பிறருக்கும் சொல்லி தருபவராக, பிற மனிதர்களை மதிப்பவர்களாக இருக்கின்றனர்.

மகிழ்ச்சியுடன் இருக்க, குதூகலமும் இன்பமும் நிறைந்த படி இருக்க ஒருவன் அச்சம் என்பதை அறியாமல் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். ஆபத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் போதுதான் மனம் துயரமடைகிறது. அதிலிருந்து வெளிவரும் பக்குவம் தெரிந்துகொண்டால் மனம் மகிழ்ச்சி கொள்கிறது.

தன்னுடைய மகிழ்ச்சியின்மைக்குக் காரணமாக என்னென்ன இருக்கிறது என்பதை ஒருவன் உணர்ந்து கொண்டாலே அதில் இருந்து தப்பிக்க தானாகவே வழிகள் இருக்கின்றன இரவில் தூங்கச் செல்லும்போது அன்று நடந்த பிரச்னைகள், நெருக்கடிகள் அனைத்தையும் மறந்து விட்டு நிம்மதியாக தூங்குங்கள்.

ஒவ்வொரு நாளும் காலை எழுந்த பின்பு நல்லதையே நினையுங்கள். நல்லதையே செய்யுங்கள். நல்லதையே எதிர் பாருங்கள். இந்த நிலையில் அன்று முழுவதும் உங்கள் வாழ்க்கையை நடத்தினால். அன்று உங்களுக்கு நடப்பதெல்லாம் நல்லதாகவே அமையும்.

எல்லாவற்றையும் தானே தனியாக நின்று செய்து காட்டி சாதிக்க வேண்டும் என்று எல்லா நேரமும் சுமைகளை தூக்கி தலைக்கு மேல் வைத்துக்கொள்ள வேண்டாம். உங்களால் செய்ய முடிகிற வேலைகளை மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள். அதனை சிறப்பாக செய்து முடித்து விடுங்கள்.

முடிந்த அளவு மற்றவர்களுக்கு உதவுங்கள். மற்றவர் களுக்கு உதவுவதும், மற்றவர்களை மதிப்பதும், பாராட்டுவதும் உங்களுக்கு அதிக மனோ பலத்தையும், சந்தோஷத்தையும் தரும். எதைச் சொன்னாலும் மற்றவர் மனம் மகிழும் படி சொல்லுங்கள். வாழ்வில் எதையும் மாற்றி சிந்தியுங்கள், நேர்மையாய் எதையும் எதிர் கொள்ளுங்கள்,

உங்கள் வாழ்க்கையில் பிரச்னையே ஏற்படாது என்று சொல்ல முடியாது. நீங்கள் எவ்வளவுதான் உஷாராக இருந்தாலும் ஏதாவது ஒரு பிரச்னை தேடி வரத்தான் செய்யும். அப்படி பிரச்னைகள் வரும்போது "நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது அது நமக்கு சரியான வழியைக் காட்டும்" என்று நம்புங்கள்.

கோவீ.ராஜேந்திரன்
kalkionline

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments