
நோன்புப் பெருநாளின் நோக்கம் அதன் இஸ்லாமிய நடைமுறைகள் தொடர்பான சில விளக்கங்கள்:
الله أكبر الله أكبر ولله الحمد
நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் எனும் இரு நிகழ்வுகளும் இஸ்லாத்தின் முக்கியமான இபாதத்துக்களும் அடையாளச் சின்னங்களுமாகும். அவை ஏனைய சமூகங்களது கொண்டாட்டங்களை விடவும் வித்தியாசப்படுகின்றன.
நபிகளார் (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது அங்கிருந்த மக்கள் இரண்டு தினங்களை பெருநாள் தினங்களாக ஆக்கி கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தார்கள். அதனைப் பார்த்த அன்னார் இவை இரண்டை விடவும் சிறந்த இரண்டு நாட்களை அல்லாஹுத்தஆலா தந்திருக்கிறான் என்றும் அவற்றை பதிலீடாக முஸ்லிம்கள் கொண்டாடலாம் என்றும் கூறி அன்றிலிருந்து நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு தினங்களையும் முஸ்லிம்கள் கொண்டாடி வந்தார்கள்.
கூலியின் களிப்பின் நாள்:
நோன்புப் பெருநாளை பொறுத்தவரையில் அது முஃமின்கள் ஒரு மாத காலமாக மிகவும் தியாகத்தோடு அர்ப்பணத்தோடு அல்லாஹ்வின் கூலியை மட்டுமே எதிர்பார்த்து செய்த அமல்களுக்கு கூலி வழங்கப்படும் நாளாகும்.
சந்தோஷத்துக்கும் களிப்புக்கும் உரிய நாளாக அது இருப்பது போன்றே அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகின்ற புனிதமான நாளுமாகும்.
நன்மைகளை அள்ளிச் சொரிந்த பாக்கியமான மாதத்தை, குர்ஆனை, லைலத்துல் கத்ரை எமக்குத் தந்தமைக்காக நன்றி செலுத்தும் நாளாகும்.
கடந்த வருடம் எம்மோடு இருந்த பலர் இந்த வருடம் உயிரோடு இல்லை. ஆனால் எம்மைப் பொருத்தவரை இந்த வருடம் ரமலானை அடைய கிடைத்தும் அதிலே அமல் செய்ய கிடைத்ததும் மிகப் பெரிய பாக்கியமாகும் என்ற வகையிலே முதலில் அல்லாஹ்வுக்கு நாம் ஷூக்ர் செய்ய வேண்டும்
தக்பீர்:
எனவே இந்த நாளில் முதலாவதாக அல்லாஹுத்தஆலாவுக்கு நாம் ஷுக்ர் செய்ய வேண்டும். அதுதான் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் லா இலாஹ இல்லல்லாஹ். அல்லாஹ் மிகப் பெரியவன் அல்லாஹ் மிகப் பெரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இரட்சகன் கிடையாது அவன் மிகப்பெரியவன் என்ற அந்த தாரக மந்திரத்தை ஷவ்வால் பிறை கண்டதிலிருந்து பெருநாள் தொழுகைக்கு போகும் வரைக்கும் நாம் உச்சரிப்பது பெருநாள் தினத்தின் மிக முக்கியமான நடைமுறைகளில் ஒன்றாகும்.
தொடர வேண்டிய பயிற்சி:
மேலும் கடந்த ஒரு மாதத்தில் நாம் பெற்ற ஆழமான பயிற்சியை தொடர்ந்தும் அடுத்த ஒரு வருடத்திற்கு தக்க வைத்துக் கொள்வோம் என மனதில் நாம் உறுதி கொள்ள வேண்டும். எமது ஈமானை இந்த மாதம் பலப்படுத்தியது.பண்பாடுகளை அழகூட்டியது. ஏறத்தாழ 13 மணித்தியாலங் களுக்கும் அதிகமாக தாகத்துடன் பசியுடன் பகல் காலத்தை கடத்தி அல்லாஹ்வுக்கு எமது பூரண அடிமைத்தனத்தை முழுமையாக காட்டினோம். ஏழையின் பசியை உணரக்கூடிய வகையில் நோன்பு அமைந்திருந்தது. எனவே தொடர்ந்தும் ஏனைய காலங்களிலும் அல்லாஹ்வுக்கு மட்டுமே அடிபணிவோம் அவன் சொல்வதற்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்போம் என்று திடசங்கர்பத்தை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

பாவமீட்சி:
கடந்த ஒரு மாதங்களாக நாம் பாவங்களை செய்யவில்லை என்பதற்கும் அப்பால் பாவங்களை நினைத்தும் பார்க்கவில்லை. அது எமக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆன்மீகப் பயிற்சியாகும். கண், உள்ளம் உறுப்புகள் எல்லாம் நோன்பிருந்தன. எனவே இனிவரும் 11 மாதங்களிலும் இதே போன்று பாவங்களில் ஈடுபடாமல் இருப்பதற்கு நாம் உள்ளத்தில் உறுதிபூண வேண்டும்.
குர்ஆனிய தொடர்பு:
கடந்த ஒரு மாதத்தில் குர்ஆனை பல தடவை ஓதி முடித்தவர்களும் ஓரளவு ஓதியவர்களும் எம்மில் இருக்கிறார்கள். இது நல்லதொரு பயிற்சியாகும். எனவே ஏனைய காலங்களிலும் குர்ஆனை கிரமமாக ஓதுவதற்கும் அதனை விளங்குவதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் உச்சகட்ட கட்ட முயற்சிகளை எடுப்பது அவசியமாகும்.
இரவு வணக்கம், தர்மம்:
அது மட்டுமல்ல பயபக்தியோடு நாம் இரவு காலங்களில் நின்று வணங்கினோம். எனவே ஏனைய காலங்களிலும் நாம் தஹஜ்ஜத் தொழுகையில் ஈடுபடுவதற்கு முயற்சிக்க வேண்டும். தான தர்மங்களை அதிகமாக இந்த மாதத்தில் செய்தவர்கள் இருக்கிறார்கள். ஏழைகளுடைய பசியை பட்டினியை உணர்ந்து அல்லாஹ்வின் கூலியை எதிர்பார்த்து வாரி வழங்கினார்கள். ஏனைய காலங்களிலும் அவற்றை அவர்கள் தொடர வேண்டும்.
அறிவுப் பகுதி:
நோன்பு காலத்தில் பயான் மஜ்லிஸ்கள் அறிவுபூர்வமான நிகழ்ச்சிகளிலே கலந்து கொண்டோம். அதேபோன்று ஏனைய காலங்களிலும் இவை தொடர வேண்டும். பள்ளிவாயல் நிர்வாகங்களும் உலமாக்களும் அதற்காக திட்டங்களை போட வேண்டும்.
நாவடக்கம்:
அது மாத்திரமன்றி நோன்பு காலத்தில் நாவை அடக்கிக் கொண்டோம் புறம்,கோள், ஆபாசமான வார்த்தைகள், பொய் போன்றன இடம்பெற்றால் அது நோன்பை பெரிய அளவு பாதிக்கும் என்பதால் நாவை மிகவும் பக்குவமாக பாதுகாத்தோம். இது ஏனைய காலங்களிலும் இந்த நடைமுறை தொடர வேண்டும்.
நபிவழியில்:
நபியவர்கள் பெருநாளை கொண்டாடிய விதத்தில் மாத்திரமே நாமும் அதனைக் கொண்டாட வேண்டும். பெருநாள் தினத்தில் குளித்து புத்தாடை அணிந்து நறுமணம் பூசிக் கொள்வது சுன்னத் ஆகும் அதேபோன்று தக்பீரை நாம் அடிக்கடி மொழிந்து கொள்ள வேண்டும்.பெரு நாள் தொழுகைக்கு போவதற்கு முன்னர் உணவருந்திக் கொள்வதும் பள்ளிவாயலுக்கு ஒரு பாதையில் சென்று மற்றொரு பாதையால் வீடு வருவதும் நபிகளாரின் சுன்னாவாகும்.

ஒற்றுமையாக:
பள்ளிவாயலில் இடம்பெறுகின்ற குத்பாவிலும் தொழுகையிலும் கலந்து கொள்வது பெருநாள் தினத்தின் மிக முக்கியமான அமலும் நிகழ்ச்சியுமாகும். நபி (ஸல்)அவர்கள் அந்த நிகழ்விலே சமூகத்தில் இருக்கின்ற அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கண்டிப்பாக இருந்தார்கள் வீட்டில் இருக்கின்ற எல்லா பெண்களும் அவர்கள் மாதவிடாய் உள்ளவர்களாக இருந்தாலும் தொழுகை இடம்பெறுகின்ற இடத்துக்கு போக வேண்டும் அங்கு இருக்கின்ற உபந்நியாசங்களை கேட்க வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தினார்கள். இத்தினத்தில் முஸ்லிம் சமூகம் சந்தோஷமாக இருப்பதோடு ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும் என்பதிலே அவர்களுக்கு இருந்த அக்கறை தான் அவ்வாறு அவர்களை சொல்லத் தூண்டியது. முஸ்லிம்கள் பிரிந்து பிளவுபட்டு இருக்கலாகாது. சகோதரத்துவ வாஞ்சையும் புரிந்துணர்வும் முஸ்லிம் சமூகத்தில் நிலவ வேண்டும். பெருநாள் தொழுகைக்காக வருவோர் கைலாகு செய்து கட்டித் தழுவி சுகம் விசாரிப்பார்கள்.பகை மறப்பார்கள் இந்த அவகாசத்தை அந்த சந்தர்ப்பம் ஏற்படுத்துகிறது.
பெற்றாரும் இனபந்துக்களும்:
பெருநாள் தினத்திலே குறிப்பாக பெற்றாரை சந்திக்க போக வேண்டும் அவர்கள் வபாத்தாகி இருந்தால் அவர்களது மண்ணறைகளை தரிசித்து துஆ ஒரே செய்ய வேண்டும் பொதுவாக உறவினர்களையும் நாம் சந்தித்து அளவளாவி அவர்களது சுக துக்கங்களிலே பங்கெடுத்து அவர்களது உளரீதியான பெளதீக ரீதியான தேவைகளை பூர்த்தி செய்து மனது குளிரச் செய்து அல்லாஹ்வின் அருளை அடைய வேண்டும். உறவினர்களது உறவைத் துண்டித்து வாழ்பவன் சுவர்க்கம் நுழைய மாட்டான் என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதனால் நோன்பு காலத்து அமல்கள் அங்கீகரிக்கப்பட வேண்டுமாயின் இது அவசியமாகும்.
ஏழைகளது துயர் துடைப்போம்:
அதேவேளை பெருநாள் தினத்தில் ஏழைகள், அனாதைகள் அங்கவினர்கள் நோயாளிகள் போன்றவர்களை சந்தித்து அவர்களது தேவைகளையும் நிறைவு செய்து அவர்களது மனதையும் குளிரச் செய்ய வேண்டும். ஸதகதுல் பித்ர் நோன்பு கால தர்மமாக ஆக்கப்பட்ட இருப்பது ஏழைகளது பசியைப் போக்குவதற்கான ஒரு வழிமுறை தான் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
வீண்விரயம் வேண்டாம்:
மிக முக்கியமாக இன்றைய தினத்திலே நாம் எமது நேரங்களையும் பணத்தையும் வீண்விரயம் செய்வதிலிருந்து முற்று முழுதாக தவிர்ந்து கொள்வது அவசியம்.
இன்று உலகத்தில் பல கோடிக்கணக்கான மக்கள் உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி வசிக்க இல்லிடங்கள் இல்லாமல் அனாதைகளாக திணிக்கப்பட்ட யுத்தங்களால் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார்கள் அவர்களை நாம் இந்தத் தினத்தில் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் உணவுக்காக பயணத்திற்காக ஆடைகளை கொள்வனவு செய்வதற்காக பணத்தை வீண்விரயம் செய்வது மிகப்பெரிய குற்றமாகவே அமையும். சந்தோஷமாக இருக்க முடியும் ஆனால் அவற்றில் எல்லை மீறி போய்விடக்கூடாது.
ஒரு நாள் சந்தோஷம்:
இந்த தினத்தில் அனுமதிக்கப்பட்ட விளையாட்டுகளிலும் பொழுது போக்குகளிலும் ஈடுபடுவதில் தவறு கிடையாது நபியவர்கள் அத்தகைய அம்சங்களை அனுமதித்திருக்கிறார்கள். மார்க்க வரம்புகளை கட்டாயமாக பேணிக் கொள்ள வேண்டும். ஈமானை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இல்லாத போது ஒரு மாதத்தில் பெற்ற பயிற்சியை முழுமையாக விளக்க வேண்டி வரும்.
சந்தோஷமான பொழுதுகளில் மனிதன் தன்னிலை மறப்பது வழக்கமாகும். இந்த புனிதமான ஈதுல் பித்ர் தினத்தில் குறிப்பாகவும் வேறு நாட்களிலும் கூச்சலிடுவதும் பிறருக்கு இடையூறாக அமைவதும் நோன்பு காலத்திலே பெற்ற பயிற்சியை முழுமையாக அழித்து விடுவதாக அமையும்.
எனவே இந்த சந்தோஷமான பாக்கியமான நோன்புப் பெருநாள் தினத்தில் அல்லாஹ் விரும்பும் நற்காரியங்களில் ஈடுபட்டு மார்க்கத்தின் எல்லைகளைப் பேணி சந்தோஷமாக இருந்து கொள்வதற்கும் வரும் காலங்களிலும் ரமலானில் பெற்ற பயிற்சியை பயன்படுத்துவதற்கும் முயற்சிப்போமாக.!

வல்லவன் அல்லாஹ் எம் அனைவரையும் பொருந்திக் கொண்டு அவனது உயர்தரமான சுவர்க்கத்தில் நுழைவிப்பானாக.
அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்!! அல்லாஹு அக்பர்!!! லா இலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர்.
தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்.
அல்லாஹ் எம்மிடமிருந்தும் உங்களிடமிருந்தும் நற்கருமங்களை அங்கீகரிப்பானாக!
அஷ்ஷெய்க் S.H.M.பளீல் (நளீமி)
பீடாதிபதி, இஸ்லாமிய கற்கைகள் பீடம்,
ஜாமிஆ நளீமிய்யா.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments