Ticker

6/recent/ticker-posts

அமெரிக்க அதிபருக்கு எதிராக பல நகரங்களில் வலுத்த ஆர்ப்பாட்டங்கள்: திணறும் டிரம்ப்


அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் கொள்கைகளை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் (ஏப்ரல் 5) பேரணி நடத்தினர்.

வா‌ஷிங்டனில் உள்ள நே‌‌ஷனல் மால், அமெரிக்காவில் உள்ள பல்வேறு நகரங்கள், வெளிநாடுகள் எனப் பல இடங்களில் திரு டிரம்ப்புக்கு எதிரான ஆக பெரிய ஆர்ப்பாட்டங்கள் மூண்டன.

வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள வெளிப்புற அரங்கில் ‘குறுக்கிடாதீர்’ (Hands Off) கூறும் பெரிய பதாகையை ஆர்ப்பாட்டக்காரர்கள் பிடித்தனர். ‘என் அதிபர் அல்ல’, ‘சர்வாதிகாரம் வந்துவிட்டது’, ‘எங்கள் சமூகப் பாதுகாப்பிலிருந்து கைகளை எடு’ என்று திரு டிரம்ப்புக்கு எதிரான வாசகங்கள் கொண்ட பலகைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிடித்திருந்தனர்.

டிரம்ப் ஏப்ரல் 2ஆம் தேதி விதித்த புதிய வரிகளை எதிர்த்தும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணி நடத்தினர்.

திரு டிரம்ப்பின் அண்மைய தீர்மானங்கள் அமெரிக்கர்களின் சினத்தைத் தூண்டியது.

திரு டிரம்ப் அரசாங்கத் துறைகளில் மேற்கொண்ட ஆட்குறைப்பு மூலம் பல அமெரிக்கர்களின் சினத்தைத் தூண்டியுள்ளதாகக் கருதப்படுகிறது. அதோடு, நட்பார்ந்த நாடுகள்மீதும் எல்லை ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் அவர் நெருக்கடி கொடுப்பது மக்களுக்குப் பிடிக்கவில்லை.

ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்தவர்களில் ஒருவர் ஜனநாயக் கட்சியின் உறுப்பினர் திரு ஜேமி ராஸ்கின். திரு டிரம்ப்மீது இரண்டாவது அரசியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டபோது அவர் குற்றச்சாட்டு நிர்வாகியாக இருந்தார்.

“டிரம்ப் நிர்வாகம் தூங்கும் ராட்சதனை எழுப்பிவிட்டது, நாங்கள் அமைதியாக அமர்ந்திருக்கப்போவதில்லை,” என்று 71 வயது ஆர்வலர் கிரேலன் ஹெக்லர் கூறினார்.

பல்வேறு இடங்களில் இடம்பெற்ற பேரணி அமைதியான முறையில் நடந்தது. பெரியோர் முதல் சிறியோர் வரை பலர் பேரணியில் பங்கேற்றனர்.

இதற்குமுன் 2016ஆம் ஆண்டு திரு டிரம்ப்பின் முதல் தேர்தலுக்குப் பின் பெண்கள் பேரணியில் அரை மில்லியனுக்கும் அதிகமானோர் வா‌‌ஷிங்டனில் திரண்டனர். இப்போது நடைபெறும் பேரணியில் எப்படியும் 20,000 பேர் திரள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரு டிரம்ப் எடுக்கும் முடிவுகள் அமெரிக்காவையும் அதைத் தாண்டிய பகுதிகளையும் உலுக்கிவரும் நிலையில், அண்மைய கருத்தாய்வின்படி அவரை ஆதரிக்கும் மக்கள் விகிதம் கடுமையாக வீழ்ச்சிக் கண்டுள்ளது.

அனைத்துலக அளவில் திரு டிரம்ப்பின் புதிய வரிகளை எதிர்க்கும் குரல் உயர்ந்தாலும், அமெரிக்கர்களின் சினம் கடுமையானாலும் வெள்ளை மாளிகை ஆர்ப்பாட்டங்களை பொருட்டாக எண்ணவில்லை.

nambikkai


Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments