
காலைப் பனியில் மெல்ல நடந்து கொண்டிருந்த அந்தக் கிராமத்து சிறு தெருவில், அர்ஜுனின் மனம் எங்கோ பறந்து கொண்டிருந்தது. அவனுக்குப் பிடித்த புத்தகக் கடையின் முன் நின்று, கண்ணாடி யன்னல் வழியாக உள்ளே பார்த்தான்.
அங்கே எப்போதும் போல, மீனா புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தாள். அவளது முகத்தில் ஒரு மென்மையான புன்னகை, அவள் கண்கள் புத்தகத்தின் வரிகளைத் துலாவின.
அர்ஜுனுக்கு மீனாவைப் பார்க்கும்போது எப்போதும் ஓர் இனம்புரியாத உணர்வு. அவளுடன் பேசும்போது சில சமயம் சிரிப்பு; ஆழமான உரையாடல்கள் அல்லது மௌனம் கூட அவனுக்கு இனிமையாக இருக்கும்.
இப்பொழுதெல்லாம் அவன் மனதில் ஒரு கேள்வி திரும்பத் திரும்ப எழுந்து கொண்டிருக்கும். 
 “மீனா என்னைப் பற்றி என்ன நினைக்கிறாள்?” என்பதுதான் அந்தக் கேள்வி!
கடைக்குள் நுழைந்த அர்ஜுனை, மீனா  பார்த்து விட்டாள்!
“அர்ஜுன்! இன்னைக்கு என்ன புத்தகம் தேடற?” அவள் கேட்டாள்.
"ஒரு கதை தேடறேன். ஆனா, அதுக்கு முடிவு இருக்கக் கூடாது!” வழக்கமான குறும்பு கலந்த குரலில் கூறிச் சிரித்தான் அவன்!
"அப்படியா? அப்போ என் கதையைப் படி. ஆரம்பம் இருக்கும்; முடிவு இருக்காது!” என்று கண்ணடித்தாள் மீனா.
அவர்கள் இருவரும் அன்று மணிக்கணக்காகப் பேசினார்கள். புத்தகங்களில் இருந்து வாழ்க்கைக் கனவுகள் வரை; கனவுகளிலிருந்து பயங்கள் வரை; மீனாவின் குரல் அவனுக்கு ஒரு இசையாக இருந்தது.
ஒரு கட்டத்தில், மீனா திடீரென அமைதியாகி, அவனை உற்றுப் பார்த்தாள்.
“அர்ஜுன், உன்கிட்ட பேசறது... ரொம்ப சந்தோஷமா இருக்கு; என் மனசு நிறைஞ்ச மாதிரி ஒரு உணர்வு; இப்படியே எப்பவும் பேசிட்டு இருக்கலாம்னு தோணுது,” என்று சொன்னாள்.
அவள் கண்களில் ஒரு பளபளப்பு.
அர்ஜுனின் இதயம் ஒரு நொடி துடித்து நின்றது. அவள் சொன்ன வார்த்தைகள் அவனை ஒரு புதிய உலகத்துக்கு இழுத்துச் சென்றன.
ஆனால், அதே நேரத்தில், அவன் மனதில் ஒரு கேள்வி உரக்கக் கத்தியது.
“நீ என்னைக் காதலிக்கிறாயா?”அவன் அந்தக் கேள்வியை வெளியே சொல்லத் தயங்கினான்.
மீனாவின் புன்னகை, அவள் பார்க்கும் பார்வை அவளது வார்த்தைகள்;  எல்லாமே ஒரு புதிர் போல இருந்தன.
அவன் மனதில் ஆயிரம் எண்ணங்கள்.
'இது காதலா? இல்லை, வெறும் நட்பின் அழகா? இப்போ இதைக் கேட்டால், இந்த மந்திரத்தில் கட்டுண்டுள்ள தருணம் உடைந்துவிடுமோ?'
"என்ன அர்ஜுன், எங்கேயோ பறந்துட்ட?” என்று மீனா கேட்டு சிரித்தாள்.
“இல்லை... உன் வார்த்தைகள்... ரொம்ப அழகா இருந்துச்சு. இப்படிச் சொல்லறவங்க, இதயத்துல இருந்துதான் சொல்வாங்க...” என்று அவன் மெதுவாகச் சொன்னான்.
மீனா சற்று நேரம் அமைதியாக இருந்தாள். பிறகு, 
“அர்ஜுன், சில உணர்வுகளுக்கு பேர் வைக்க முடியாது. ஆனா, அது இருக்கறப்போ மனசு நிம்மதியா இருக்கு. நான் உன் கிட்ட இருக்கறப்போ, அப்படித்தான் உணர்கின்றேன்!"
அர்ஜுனுக்கு அந்தக் கணம் ஒரு முடிவு போலத் தோன்றினாலும், அது ஒரு புதிய ஆரம்பமாக இருந்தது.
அவன் மனதிலிருந்த கேள்வி இன்னும் வெளி வரவில்லை. ஆனாலும், அவனுக்கு ஒரு தெளிவு கிடைத்தது; காதல் என்பது சொற்களில் மட்டுமல்ல, அது மௌனத்தில், புன்னகையில், ஒரு பார்வையில் கூட இருக்கின்றது!
"மீனா, இன்னொரு நாள் இன்னும் நிறைய பேசுவோம். உன் கதையோட முடிவு என்னன்னு தெரிஞ்சுக்க ஆசையா இருக்கு" என்று சொல்லிச் சிரித்தபோது, மீனா புன்னகைத்தாள்.
"நிச்சயம் அர்ஜுன்! ஆனா, முடிவு நம்மளைத் தேடி வரும். அதுவரை, இந்தப் பயணத்தை அனுபவி!”
அந்த மாலை, அர்ஜுன் கடையை விட்டு வெளியேறும்போது, அவன் மனதில் ஒரு இனிமையான கனம்.
 “நீ என்னை காதலிக்கிறாயா?” என்ற கேள்வி இன்னும் கேட்கப்படவில்லை. ஆனால், அவனுக்கு ஒரு நம்பிக்கை இருந்தது; அந்தக் கேள்விக்கு பதில், ஒரு நாள் அவள் இதயத்திலிருந்து  வெளிப்படுமென்று!
(2)
மலைப்பகுதியில் அந்தக் குளிரான குக்கிராமத்தில் அமைந்த அந்த புத்தகக் கடை, அர்ஜுனுக்கு எப்போதும் ஒரு பொக்கிஷம். மாலைப் பொழுதில், மெல்லிய மஞ்சள் வெளிச்சத்தில் அந்தக் கடையின் கண்ணாடிகளைத் தாங்கிய மர நிலைகள் பளபளத்துக் கொண்டே இருக்கும்!
உள்ளே, மீனா ஒரு பழைய கவிதைப் புத்தகம் ஒன்றைப் புரட்டிக் கொண்டிருந்தாள். அவளது முகத்தில் எப்போதும் காணப்படும் மென்மையான புன்னகை, இன்றும் அர்ஜுனின் இதயத்தைத் தொட்டது!
கடைக்குள் நுழைந்த அவனைக் கண்டதும், மீனா குறும்பாகச் சிரித்தாள்.
“இன்னைக்கு என்ன கதை வேணும், அர்ஜுன்? சோகமா, சந்தோஷமா, இல்லை வேற ஏதாவதா?”
“ஒரு கதை... ஆனா, அதுல ஒரு முடிவு இருக்கணும்; ஆரம்பம் இல்லாவிட்டாலும் கூட...”
அவன் சொன்னதும், இருவரும் எக்காளமிட்டுச் சிரித்தனர்.
அவர்கள் பேச்சு புத்தகங்களில் இருந்து வாழ்க்கைக்கும், கனவுகளில் இருந்து நினைவுகளுக்கும் பயணித்தது.
மீனாவின் குரல் அர்ஜுனுக்கு ஓர் இனிமையான இசை. அவள் பேசும்போது, அவன் மனதில் ஒரு மெய்சிலிர்க்கும் உணர்வு மெல்ல உருவானது; இது அவர்களது நட்பையும் தாண்டியது; ஆனால், அதற்கு பெயர் வைக்க அவன் தயங்கினான்.
ஒரு கட்டத்தில், மீனா அமைதியாகி, அவனை உற்றுப் பார்த்தாள்.
“அர்ஜுன், உன்கிட்ட பேசறது... என் மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு. இப்படியே எப்பவும் பேசிட்டு இருக்கலாம்னு தோணுது,” என்று மெதுவாகச் சொன்னாள். 
அர்ஜுனின் இதயம் ஒரு நொடி துடித்து நின்றது.
“நீ என்னை காதலிக்கிறாயா?” என்ற கேள்வி அவன் நுனி நாக்கில் தவழ்ந்தது. ஆனால், அவன் வாய் திறக்கும் முன், கடையின் கதவு பலமாகத் திறந்து கொண்டது!
கதவைத் திறந்து உள்ளே வந்தான் விக்ரம் என்பவன்.
கிராமத்தில் பணமும் செல்வாக்கும் உள்ள ஒருவன், ஆனால் அவனது ஆணவம் அனைவருக்கும் தெரியும். அவன் முகத்தில் ஒரு திமிரான புன்னகை.
அவனது பார்வை மீனாவைத் தேடியது. 
“மீனா, இன்னும் இந்தப் புத்தகக் கடையிலேயே உக்காந்து கனவு காணறியா? உனக்கு இதைவிட பெரிய உலகம் இருக்கு,” அவன் சொன்னான்; அர்ஜுனை அவன் ஒரு பொருட்டாகவே மதிக்காமல்!
மீனாவின் முகம் சற்று மாறியது.
“விக்ரம், இந்தக் கடை என் உலகம். இங்கே இருக்கற ஒவ்வொரு புத்தகமும் என் கதை சொல்லும்! உனக்கு இது புரியாது” என்று அவள் பதிலளித்தாள், அவளது குரலில் ஒரு உறுதி.
விக்ரம் சிரித்தான், ஆனால் அது ஒரு கேலியான சிரிப்பு.
"நீ எவ்வளவு நாளைக்குத்தான் இந்தக் கற்பனை உலகத்துல இருப்பே? உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை வேணாமா? நான் உனக்கு எல்லாம் தருவேன்” என்று சொல்லி அவன், அவளது கையைப் பிடிக்க முயன்றான்.
அர்ஜுனுக்கு உடம்பு கொதித்தது.
“விக்ரம், அவளைத் தொந்தரவு பண்ணாதே,” என்று அர்ஜுன் குறுக்கிட்டான்; குரலில் கோபத்தில்!
விக்ரம் அர்ஜுனை ஒரு பார்வை பார்த்தான்.
 “நீ யாரு இவளுக்கு? இவளோட எதிர்காலத்தைப் பத்தி பேசற அளவுக்கு உனக்கு என்ன தகுதி இருக்கு?”  கேலியாகக் கேட்டான் விக்ரம்!
மீனா முன்னே வந்தாள்.
“விக்ரம், என் வாழ்க்கையை நான் முடிவு பண்ணுவேன். உனக்கு இதுல எந்த உரிமையும் இல்ல!" என்று கறாராகச் சொன்னாள்.
விக்ரம் கோபமாக முறைத்துவிட்டு,
"நான் கடையை இருபது இலட்சத்துக்கு விலை பேசிவிட்டேன்; உன்னால் முடிந்தால் அதைத் தந்துவிட்டு, கடையைச் சொந்தமாக்கிக் கொள்!" என்றான். இது ஒன்னால முடியாது மீனா" என்று கூறிவிட்டு அங்கிருந்து  வெளியேறினான்.
ஆனால், அவன் பார்வையில் ஒரு தீய எண்ணம் தெரிந்தது. புயலுக்கு முந்தைய அமைதி; அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, கடையில் ஒரு மௌனம். 
மீனா அர்ஜுனைப் பார்த்து,
“நீ ஏன் இடையில வந்தே? அவனை நான் பார்த்துக்கறேன்,” என்று சொன்னாள்; ஆனால் அவள் குரலில் ஒரு மென்மையான நன்றி!
"மீனா, உன்னை யாராவது தொந்தரவு பண்ணா, நான் சும்மா இருக்க முடியாது" என்று அர்ஜுன் சொன்னான்.
ஆனாலும், அவன் மனதிலிருந்த  அந்தக் கேள்வி அவனை விட்டும் அடங்கவில்லை!
'நீ என்னை காதலிக்கிறாயா?'
ஆனாலும், இப்போது அதைக் கேட்க சரியான தருணம் இல்லை.
அடுத்த சில நாட்களில் கடைக்குள் விக்ரமின் தொந்தரவு அதிகரித்தது. அதனால், வாடிக்கையாளர்கள் வருகையும் குறைந்தது. மீனாவின் முகத்தில் கவலை தெரிந்தது,
ஆனால் அவள் தன் உறுதியை விடவில்லை. ஒரு மாலைப் பொழுது, அர்ஜுன் கடைக்கு வந்தபோது, மீனா தனியாக உட்கார்ந்து, ஒரு புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால், அவள் கண்கள் ஈரமாக இருந்தன.
“மீனா, என்ன ஆச்சு?” என்று அர்ஜுன் கேட்டான், 
மனதில் பதற்றம்...
“அர்ஜுன், இந்தக் கடை... இது என் கனவு. ஆனா, விக்ரம் இதையும் பறிச்சுடுவானோன்னு பயமா இருக்கு,” என்று அவள் விம்மலாகச் சொன்னாள்.
அர்ஜுன் அவளருகில் அமர்ந்தான்.
"மீனா, உன் கனவை யாராலும் பறிக்க முடியாது. நான் உன் கூட எப்போதும் இருப்பேன்" என்று உறுதியாகச் சொன்னான்.
உணர்வுகளின் வெளிப்பாடு;
அந்த இரவு, அர்ஜுனும் மீனாவும் கடையை மூடுவதற்கு முன் நீண்ட நேரம் பேசினார்கள். மீனா தன் பயத்தை, கனவுகளை, வாழ்க்கையைப் பற்றி பகிர்ந்தாள். அர்ஜுன் அவளை ஆறுதலாகப் பார்த்தான்.
"மீனா, இதுவரை நீ எத்தனை ஆக்கங்களை எழுதியுள்ளாய்?" 
பீரோவுக்குள் பத்திரப் படுத்தி வைத்திருந்த அவளது கதைகள், கட்டுரைகள், கவிதைகள் எல்லாவற்றையும் எடுத்து அர்ஜுனிடம் காட்டினாள். அவற்றையெல்லாம் எடுத்துக் கொண்ட அர்ஜுன், நாளை அச்சகம் ஒன்றை நாடிச் செல்வதாக நினைத்துக் கொண்டான்.
அர்ஜுன் அங்கிருந்து நகர முற்படும்போது,
“அர்ஜுன், உன்கிட்ட இருக்கறப்போ எனக்கு எந்தப் பயமும் இல்லை. உன்கிட்ட பேசறது... என் மனசுக்கு ஒரு நிம்மதியைக் கொடுக்குது,” என்று மீனா சொன்னாள், கண்களில் ஒரு ஒளி.
அர்ஜுனுக்கு அந்தக் கணம் தவிர்க்க முடியாததாகத் தோன்றியது.
“மீனா, ஒரு கேள்வி கேட்கட்டுமா?” என்று தயங்கி கேட்டான்.
“கேளு,” என்று அவள் புன்னகைத்தாள்.
“நீ... நீ என்னை காதலிக்கிறியா?” அந்த வார்த்தைகள் அவன் இதயத்தில் இருந்து வெளியே வந்தன; மெல்லிய நடுக்கத்துடன்.
மீனா ஒரு நொடி அமைதியாக இருந்தாள். பிறகு, அவள் கைகளை அவன் கைகளோடு பிணைத்து, 
“அர்ஜுன், உன்கூட இருக்கற ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு காதல் மாதிரிதான். ஆனா, இப்போ உனக்கு ஒரு வாக்கு தரேன்—நம்ம கதை இங்கே முடியாது. இதுக்கு ஒரு அழகான முடிவு இருக்கு" என்று சொன்னாள்.
அர்ஜுனும் மீனாவும் விக்ரமின் தொந்தரவுகளை எதிர்கொள்ள முடிவு செய்தனர்.
மீனா தன் புத்தகக் கடையை ஒரு கலை மையமாக மாற்றினாள். அவனது ஆக்கங்களை ஒன்று திரட்டி நூலுருவாக்கினான் அர்ஜுன்; மீனா வெளியீட்டு விழாவுக்கு திகதி குறித்தாள். ஊர்மக்களுக்கும், தனக்குத் தெரிந்தவர்களுக்கும் அழைப்பு விடுத்தாள். குறித்த நாளில் ஒன்று திரண்ட மக்கள் மத்தியில் அவளது நூலின் முதற் பிரதியை ஊர்ப் பிரமுகர் ஒருவர் வாங்கினார். அதனைத் தொடர்ந்து பிரதம அதிதிகள் பலரும் நூல்களை வாங்கினர். அந்த வெளியீட்டு விழாவின்போதே அர்ஜுன் பதிப்பித்த ஆயிரம் பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன.
இப்போது விக்ரமின் நெருக்குதல் பயனற்றுப் போனது, மக்களின் ஆதரவு மீனாவுக்குக் கிடைத்தது. 
அன்று மாலையே விக்ரம் கேட்ட பணத்தை அவனது மூஞ்சில் தூக்கி எறிந்தாள் மீனா; கடைக்கான உரிமைப் பத்திரம் அவள் பெயருக்கு மாறியது!
ஒரு மாலை, புத்தகக் கடையில் மீனாவும் அமர்ந்திருந்தபோது, மீனா தனது நூலின் பிரதி ஒன்றினை அர்ஜுனிடம் கொடுத்தாள். அதன் முகப்பில் குறிப்பு ஒன்றிருந்ததை அர்ஜுன் கவனித்தான்!
“என் கதையோட முடிவு நீதான்!"
அர்ஜுன் சிரித்தான்.
"இது முடிவல்ல; இது ஒரு புது ஆரம்பம்!" அவளது குறிப்புக்குக் கீழ் அவன் எழுதி, அந்த நூலை அவளிடமே கொடுத்தான்.
நூலை அவள் தன் மார்போடு அணைத்துக் கொண்டதும், தன்னையே அவள் அணைத்துக் கொண்டதாக அர்ஜுன் நினைத்தான்!
(யாவும் கற்பனை)
செம்மைத்துளியான்

கட்டுரைகள் |  Ai SONGS |

Email;vettai007@yahoo.com


1 Comments
காதலின் தீபம்
ReplyDelete