
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஐதராபாத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை குஜராத் டைட்டன்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
நடப்பு ஐபிஎல் தொடரில் இது ஐதராபாத் அணியின் 4 ஆவது தொடர் தோல்வியாகும். இதனால் பாயின்ட்ஸ் டேபிளில் தற்போது ஐதராபாத் அணி கடைசி இடத்திற்கு சென்றுள்ளது. இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் ஆகியோர் களம் இறங்கினர். ஹெட் 8 ரன்னில் ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து அபிஷேக் சர்மா 18 ரன்னிலும், இஷான் கிஷன் 17 ரன்னிலும் வெளியேறினர்.
ஓரளவு தாக்குப்பிடித்த நிதிஷ் ரெட்டி 31 ரன்னும், ஹெய்ன்ரிக் கிளாசன் 27 ரன்களும் எடுத்தனர். அனிகேத் வர்மா 18 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவர்களில் கேப்டன் பாட் கம்மின்ஸ் அதிரடியாக 9 பந்துகளில் 22 ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ஐதராபாத் அணி 152 ரன்களை எடுத்தது.
குஜராத் தரப்பில் சிராஜ் 4 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி குஜராத் அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.
சாய் சுதர்சன் 5 ரன்னிலும், ஜாஸ் பட்லர் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்த நிலையில் 3.5 ஓவர்களில் குஜராத் அணி 16 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது. இதையடுத்து இணைந்த வாஷிங்டன் சுந்தர், கேப்டன் சுப்மன் கில் இணை அற்புதமாக பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டெடுத்தது.
49 ரன்கள் எடுத்திருந்தபோது ஷமி வேகத்தில் அனிகேத் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழந்தார். இருவரும் 3 ஆவது விக்கெட்டிற்கு 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 16.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த குஜராத் அணி 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கில் 61 ரன்களும், ரூதர்போர்டு 35 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி பாயின்ட்ஸ் டேபிளில் 2 ஆவது இடத்திற்கு முன்னேறியது. இது ஐதராபாத் அணி தொடர்ச்சியாக பெறும் 4 ஆவது தோல்வியாகும். இதன் மூலம் கடைசி இடமான 10 ஆவது இடத்திற்கு அந்த அணி சென்றுள்ளது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments