Ticker

6/recent/ticker-posts

Ad Code



துடிப்பு + அனுபவம்.. டெஸ்ட் அணியில் இளம் ரத்தங்கள்.. புத்துயிர் அளிக்குமா பிசிசிஐயின் செலக்சன்?


இன்னும் பல ஆண்டுகள் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மாவும், விராட் கோலியும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அடுத்தடுத்து அறிவித்து அதிர்ச்சி அளித்தனர். யாரும் எதிர்பாராத வகையில் முன்னணி சுழற்பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். 6 மாத இடைவெளிக்குள் முக்கிய ஜாம்பவான்கள் மூவர் விலகியது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

 இனி இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் எதிர்காலம் எப்படி இருக்கும் எனவும், ரோகித் சர்மா, கோலி இல்லாத சீனியர் ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு தலைமையேற்கப் போவது யார் என்ற ஆவல் அதிகரித்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடப்போகும் அணியின் அறிவிப்பு நேற்று வெளியானது.

 இந்திய அணியை வழிநடத்தப்போவது 25 வயதே ஆன இளம் வீரர் சுப்மன் கில் என்ற அதிரடி அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டது. இந்தியாவின் 37-ஆவது டெஸ்ட் கேப்டனாகியுள்ள ஷுப்மன் கில், இதுவரை 32 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு துணை கேப்டனாக உள்ள ஷுப்மன் தற்போது டெஸ்ட் கேப்டனாகியுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு அணியை தயார் செய்யும் வகையிலும், வருங்கால அணியை கட்டமைக்கும் வகையிலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

இந்திய டெஸ்ட் அணியின் துணைக்கேப்டனாக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மொத்தம் 18 பேர் கொண்ட பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களான சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் இடம்பிடித்துள்ளனர். இதுவரை ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் விளையாடியுள்ள சாய் சுதர்ஷன் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகவுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக சிறப்பாக விளையாடி வருவதால் மட்டுமே சாய் சுதர்ஷனை அணியில் சேர்க்கவில்லை எனவும், உள்ளூர் போட்டிகளில் அவரின் செயல்பாடுகள் முழுமையாக கண்காணிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டதாகவும் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகார்க்கர் கூறினார்.

இங்கிலாந்து லயன்ஸ் அணி இந்தியா வந்தபோது, அவர்களுக்கு எதிராக சாய் சுதர்ஷன் சிறப்பாக விளையாடியதையும் சுட்டிக்காட்டிய அகார்க்கர், இங்கிலாந்தில் சர்ரே அணிக்காக அவர் விளையாடியதும் கைகொடுக்கும் என குறிப்பிட்டார். சாய் சுதர்ஷன் வருங்காலத்தில் மேன்மேலும் உயர்வார் எனவும் அகார்கர் நம்பிக்கை தெரிவித்தார். இதனிடையே, சிறிய இடைவெளிக்குப் பிறகு வாஷிங்டன் சுந்தர் மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில், 8 ஆண்டுகளுக்கு பிறகு கருண் நாயருக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைத்துள்ளது. 2017ஆம் ஆண்டுக்கு பிறகு அணியில் வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறி வந்த 33 வயதான கருண் நாயர், உள்ளூர் போட்டிகளில் அட்டகாசமாக விளையாடியதால் மீண்டும் இடத்தை கைப்பற்றியுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த ரஞ்சித் தொடரில் மட்டும் அவர் 863 ரன்கள் குவித்து தேர்வுக்குழுவின் கவனத்தை ஈர்த்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் அச்சமில்லாமல் பேட்டிங் செய்து அசத்தி வரும் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கும் இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.Online courses

இவர்கள் மட்டுமின்றி அனுபவ வீரர்களான கேஎல்.ராகுல், ஜடேஜா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோருக்கும், அபிமன்யூ ஈஸ்வரன், துருவ் ஜூரெல், நிதிஷ்குமார் ரெட்டி, பிரஷித் கிருஷ்ணா உள்ளிட்ட இளம் வீரர்களுக்கும் சமபலமாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இளம் புயல்களின் துடிப்பான ஆட்டமும், மூத்த வீரர்களின் அனுபவ ஆட்டமும் சேர்ந்து இந்திய அணியை துடிப்புடன் வைத்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த கலவையான அணி இங்கிலாந்து மண்ணில் பிரகாசிக்குமா என்பதை காத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

news18

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments