
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 25ஆம் தேதி தலைநகர் டெல்லியில் 68வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் கொல்கத்தாவுக்கு எதிராக பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு 7 ஓவரில் 92 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த அபிஷேக் ஷர்மா அதிரடியான 32 (16) ரன்கள் விளாசி அவுட்டானார்.
அவருடன் சேர்ந்து விளையாடிய டிராவிஸ் ஹெட் தம்முடைய ஸ்டைலில் வெளுத்து வாங்கினார். அடுத்து வந்த ஹென்றிச் க்ளாஸென் சுமாராக பவுலிங் செய்த கொல்கத்தா பவுலர்களை முரட்டுத்தனமாக அடித்து நொறுக்கினார். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடித்து நொறுக்கிய அவர் வெறும் 17 பந்துகளில் அரை சதத்தை அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.
எதிர்ப்புறம் அவருடன் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அசத்திய ஹெட் அரை சதத்தை விளாசி 76 (40) ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த இசானுக்கு சான் தம்முடைய பங்கிற்கு 29 (20) ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். ஆனால் இந்தப் பக்கம் தொடர்ந்து கொல்கத்தா பவுலர்களை சூறையாடிய க்ளாஸென் 37 பந்துகளில் சதத்தை அடித்தார்.
அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் 2வது வேகமான சதத்தை அடித்த வெளிநாட்டு வீரர் என்ற டேவிட் மில்லரின் 12 வருட சாதனையை உடைத்த அவர் புதிய சாதனை படைத்தார். இதற்கு முன் 2013ஆம் ஆண்டு பெங்களூருவுக்கு எதிராக பஞ்சாப் அணிக்காக டேவிட் மில்லர் 38 பந்துகளில் சதத்தை அடித்ததே முந்தைய சாதனை. 2013இல் புனேவுக்கு எதிராக 30 பந்துகளில் வேகமான சதத்தை அடித்த கிறிஸ் கெயில் முதலிடத்தில் இருக்கிறார்.
மேலும் கிறிஸ் கெய்ல் (30), வைபவ் சூர்யவன்சி (35) ஆகியோருக்கு பின் 3வது வேகமான சதத்தை அடித்த வீரர் என்ற யூசுப் பதான் சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் 7 பவுண்டரி 9 சிக்சரை பறக்க விட்ட அவர் 105* (39) ரன்களை விளாசி ஃபினிஷிங் கொடுத்தார். இறுதியில் அன்கிட் வர்மா 12* (6) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் ஹைதராபாத் 278/3 ரன்களை குவித்து மிரட்டியது.
இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் 3வது அதிகப்பட்ச ஸ்கோரை பதிவு செய்து ஹைதராபாத் சாதனை படைத்தது. இதற்கு முன் 2024இல் மும்பைக்கு எதிராக ஹைதராபாத் 277/3 ரன்களை அடித்ததே முந்தைய சாதனை. முதல் 2 டாப் ஸ்கோரையும் (287/3, 286/6) ஹைதராபாத் அணியே அடித்துள்ளது. கொல்கத்தாவுக்கு அதிகபட்சமாக சுனில் நரைன் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
crictamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments