
மாணிக்கக் கல் வர்த்தகரான முஹம்மது இர்ஷாத் மற்றும் ஆசிரியை பாத்திமா ஸஹியா தம்பதியினரின் மூத்த மகளான இவர்,1986ம் ஆண்டு காலியிலுள்ள சமகிவத்தகம என்ற இடத்தில் பிறந்தவராவார்.
தனது ஆரம்பக் கல்வியை, ஸுலைமானியா வித்யாலயத்தில் பயின்றுள்ள இவர், அதனைத் தொடர்ந்து கல்முனை மஹ்மூத் பாலிகாவில் சேர்ந்து கற்று, அங்கு சாதாரண தரப் பரீட்சைக்கு முகங்கொடுத்து, திறமையாகச் சித்தி பெற்றதன் பின்னர் அதே பாடசாலையில் உயிரியல் பிரிவில் தனது உயர் கல்வியைத் தொடர்ந்தவராவார்.
தனது மகள் ஒரு வைத்தியராக வரவேண்டும் என்பது தாயின் ஆசையாக இருந்தாலும் இறைவனின் நாட்டம் அவரை சட்டத்துறைக்கு ஈர்க்க வைத்தது.
அதன் விளைவாக அவர், 2006ம் ஆண்டில் 'கோட் முதலியார்' என்ற பதவியில் அமர்த்தப்பட்டார்.
நீதி தேவதையின் நிழலில் நின்ற வண்ணம் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் அவரின் உள்ளத்தில் வலுவாக ஊன்றி நின்றது. தாய் தந்தையரின் அரவணைப்பில் கிடைத்த அன்பும் அவரது ஆளுமையும் எதிர்காலத்து அத்திவாரத்தை அவருக்கு நிர்ணயிக்க வைத்தது.
கற்கும் காலத்தில் பாடசாலையின் சிறந்த மாணவியாகத் திகழ்ந்த ஜிப்ரியா, கவிதை எழுதுவதில் சிறந்து விளங்கியுள்ளார்; அத்துடன் போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றி பாடசாலைக்காகப் பல விருதுகளையும் பெற்றுக் கொடுத்துள்ளார்.
2008ம் ஆண்டில் இலங்கை சட்டக் கல்லூரி மாணவியாக தெரிவு செய்யப்பட்ட அவர், 2012ம் ஆண்டில் சட்டத்தரணியாகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டு, கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தார்.
தன்னோடு கோட் முதலியாராக சேவை புரிந்த திஹாரியைச் சேர்ந்த, தற்போது சட்டத்தரணியாகக் கடமையாற்றி வரும், தில்ஷான் என்பவரோடு திருமண பந்தத்தில் இணைந்த இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர்.
பாத்திமா ஜிப்ரியா என்ற ஆளுமை மிக்க பெண் சட்டத்தரணி பல கோணங்களில் மிளிரத் தொடங்கினார். அவரின் பேச்சு வன்மை விவாதத் திறமை, மும்மொழிகளிலும் திறம்பட பேசக்கூடிய ஆற்றல் அவரின் முன்னேற்றத்துக்கு முதுகெலும்பாய் அமைந்தது.
கிட்டத்தட்ட பண்ணிரண்டு ஆண்டுகள் சட்டத்தரணியாக நின்று சாதித்த பெண் ஆளுமை, அவரின் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்காக, மேற்படிப்புக்காக நாவலை சட்டக்கல்லூரியில் இணைந்து சட்ட முதுகலைப் பட்டம் (LLM) பெற்றதோடு, சட்டத்துறைக்கு மிகவும் அத்தியாவசியமான தடயவியல் மருத்துவத்தில் டிப்ளோமா (DIPLOMA IN FORENSIC MEDICINE) என்ற வைத்தியத்துறை கற்கை நெறியையும் பேராதெனியாப் பல்கலைக்கழகத்தில் கற்றுத் தேர்ந்துள்ளார்.
ஒரு நீதிபதியாக வரவேண்டுமென்ற கனவைச் சுமந்தவராக அதற்கான தருணம் வரும் வரை காத்திருந்த அவர், நடந்து முடிந்த பரீட்சையில் சிறந்த முறையில் சித்தியெய்தி, 2025. 04. 01ம் திகதி மாஜிஸ்ட்ரேட் நீதிமன்ற நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பாக எமது சமுதாயத்துக்குப் பெருமையைத் தருகின்றது! அல்ஹம்துலில்லாஹ்!
செம்மைத்துளியான்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments