
தாடி வைத்திருப்பது திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்படுவதற்கு காரணமாகிவிடுமா? இந்த கேள்வி சற்று விசித்திரமாகத் தோன்றலாம், ஆனால் இதேபோன்ற ஒரு வழக்கு உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் நடந்துள்ளது. ஒரு பெண் தன் கணவனை விட்டுவிட்டு அவரது தம்பியுடன் ஓடிவிட்டார். இந்த சம்பவத்திற்கான காரணத்தைக் கேட்டால் நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள். ஆம், கணவர் தாடியை ஷேவ் செய்ய மறுத்ததை அடுத்து மனைவி இந்த முடிவை எடுத்தார். இந்த சம்பவம் லிசாடி கேட் பகுதியில் நடந்தது. மேலும், இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
பெண்ணின் கணவர் பெயர் முகமது ஷாகிர், அவருக்கு வயது 28. அவரது வீடு மீரட்டின் உஜ்வால் கார்டன் காலனியில் உள்ளது. இவர் ஏழு மாதங்களுக்கு முன்பு இஞ்சோலியை சேர்ந்த 25 வயதான அர்ஷியை திருமணம் செய்து கொண்டார். திருமணமான முதல் நாளிலிருந்தே ஷகீரின் தாடி வைத்திருப்பது, அர்ஷிக்கு பிடிக்கவில்லை. எனவே அவர் ஷாகிரின் தாடியை ஷேவ் செய்ய வேண்டும் என்று சொன்னார். தாடியின் தோற்றம் தனக்குப் பிடிக்கவில்லை என்றும், ஷேவ் செய்யுங்கள் என்றும் அவர் அடிக்கடி கூறிக்கொண்டே இருப்பார். “நீ ஷேவ் செய்யாவிட்டால், நான் உன்னை விட்டு சென்று விடுவேன்” என்றும் அவர் கூறிக்கொண்டே இருப்பார் என்று ஷாகிர் போலீசாரிடம் கூறியுள்ளார். முதலில் ஷாகிர் இவற்றை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி, அர்ஷி திடீரென காணாமல் போனார். மேலும், ஷாகிரின் 24 வயது சகோதரரான முகமது சபீருடன் ஓடிப்போனதாக சந்தேகிக்கப்படுகிறது. ஏனெனில் சபீர் சுத்தமாக ஷேவ் செய்திருப்பார். இருவரும் வீட்டைவிட்டு வெளியேறும்போது வீட்டில் இருந்து சில பொருட்களையும் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து ஷாகிர் இருவரையும் கடந்த மூன்று மாதங்களாகத் தேடிக்கொண்டிருந்தார். அவர்களின் போன்களும் ஆஃப் செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து, ஷாகிர் போலீசில் புகார் அளித்தார்.
இதுகுறித்து மீரட் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆயுஷ் விக்ரம் சிங் கூறுகையில், காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். மற்றொரு அதிகாரி கூறுகையில், இருவரும் கடைசியாக பஞ்சாபின் லூதியானாவில் இருந்தார்கள் என்று விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இருவரையும் கண்டுபிடிக்க உள்ளூர் போலீசாருடன் மீரட் காவல்துறை இணைந்து பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு அற்ப காரணத்திற்காக மனைவி எடுத்த இந்த முடிவு அதிர்ச்சியளிப்பதாக கிராம மக்கள் கூறிவருகின்றனர். இந்த விவகாரம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே விரைவில் உண்மை வெளிவரும் என்று நம்பப்படுகிறது.
News18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments