
48 வயதான, பிரான்செஸ்கா அல்பானீஸ் அம்மையார், பாலஸ்தீன மக்களின் உரிமைகளை வெளிப்படையாக ஆதரிப்பவர். அவர் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மற்றும் 'அபார்டைட்' கொள்கைகளுக்கு எதிராகக் கடுமையாக விமரிசம் செய்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) விசாரணைகளுக்கு ஆதரவு தெரிவித்தவர்.
இவரது அறிக்கைகள் மற்றும் பொது உரைகள், பாலஸ்தீன மக்களுக்கு நீதி கோருவதற்காக பொருளாதாரத் தடை, ஆயுதத் தடை மற்றும் இஸ்ரேலுக்கெதிராக ஐ.நா. உறுப்பினர் தகுதி இடைநீக்கம் போன்றவற்றை பரிந்துரைத்துள்ளன.
இவரது நிலைப்பாடுகள் சர்வதேச அளவில் ஆதரவையும் எதிர்ப்பையும் பெற்றுள்ள நிலையில், அவர் தனது பணியில் 'நீதியின் பக்கம் உறுதியாக நிற்பேன்' என்று தொடர்ந்து கூறி வருகின்றார்.
பிரான்செஸ்கா அல்பானீஸ் அம்மையார் ஒரு துணிச்சலான மனித உரிமைகள் வழக்கறிஞராகவும், பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக உறுதியாக பணியாற்றுபவராகவும் அறியப்படுபவராவார்.
அவரது பணி, சர்வதேச சட்டம் மற்றும் மனித உரிமைகள் குறித்த ஆழமான அறிவு மற்றும் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது; இருப்பினும் அது பல சர்ச்சைகளையும் எழுப்பியுள்ளது.
காஸா மீதான போரின் போது பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் துஷ்பிரயோகங்களை ஆவணப்படுத்தியமைக்காக, ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் பிரான்செஸ்கா அல்பானீஸ் அம்மையார் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் அண்மையில் தடை விதித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு எதிரான அரசியல் மற்றும் பொருளாதாரப் போர்ப் பிரசாரம் செய்வதாக அல்பானீஸ் அம்மையார் மீது குற்றம் சாட்டியுள்ள நிலையில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளால், பாலஸ்தீன மக்கள் மீது நடாத்தப்படுகின்ற அக்கிரமங்களை விமர்சித்ததற்காக டிரம்ப் நிர்வாகம் ஒரு மாஃபியா பாணி மிரட்டலைக் கூட விடுத்துள்ளதாக அல்பானிஸ் அம்மையார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இஸ்ரேலின் மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுப்பதில் முன்னணி உலகளாவிய குரலாக இருந்து வருபவர்.
இஸ்ரேலும் அதன் நட்பு நாடுகளும் அல்பானீஸ் அம்மையாரைக் கண்டித்து வருவது மட்டுமன்றி, பதவியிலிருந்து அவரை நீக்க வேண்டுமென்றும் கோரி வருகின்றன.
இவ்வாறான உண்மையான அமைதிக்காக உழைத்துவரும் அல்பானிஸ் அம்மையார் சமாதானத்துக்கான நோபல் பரிசு பெறத் தகுதியானவர் என்று சமூக வலைத்தளங்களில் பதிவுகள் கூட வந்த வண்ணமாக உள்ளன.

1977 மார்ச் 30ம் திகதி இத்தாலியில் பிறந்துள்ள பிரான்செஸ்கா பி. அல்பானீஸ் அம்மையார் ஒரு சட்ட அறிஞரும், மனித உரிமை நிபுணருமாவார்.
2022ம் ஆண்டில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 49வது அமர்வின்போது, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளின் மனித உரிமைகள் நிலை குறித்த சிறப்பு அறிக்கையாளராக நியமனம் பெற்றார்.
இந்தப் பதவிக்கு வந்த முதல் பெண்மணியும் இவரேயாவார். இவரது பணிக்காலம் முதலில் மூன்று ஆண்டுகளாக இருந்து, பின்னர் மேலும் மூன்று ஆண்டுகளுக்குப் புதுப்பிக்கப்பட்டதால 2028 வரை இவர் இப்பதவியில் பணியாற்றவுள்ளார்.
பிசா பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முதல் வகுப்பு கௌரவப் பட்டம் பெற்றவரான இவர், லண்டனிலுள்ள சோஅஸ் பல்கலைக்கழகத்தில் மனித உரிமைகள் தொடர்பான முதுகலைச் சட்டப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
தற்போது ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழக சட்ட வளாகத்தில் அகதிகள் சட்டத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இத்தாலிய குடிமகளான அல்பானீஸ் அம்மையார், திருமணமாகி, இரு குழந்தைகளின் தாயாவார்.
பிரான்செஸ்கா அல்பானீஸ் அம்மையார் 2003ம் ஆண்டு முதல் ஒரு தசாப்த காலமாக ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகள் நிபுணராக பணியாற்றி வந்தார்.
இவர் ஐ.நா. உயர் ஆணையர் அலுவலகத்தில் மற்றும் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிவாரண மற்றும் பணி முகாமையில் (UNRWA) பணியாற்றினார்.
மத்திய கிழக்கு, வட ஆபிரிக்கா மற்றும் ஆசிய-பசிபிக் பகுதிகளில் அரசாங்கங்கள் மற்றும் சிவில் சமூகங்களுக்கு மனித உரிமைகள் விதிமுறைகளை குறிப்பாக அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் போன்ற பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு அவற்றை அமுல்படுத்துவதற்கு ஆலோசனைகள் வழங்கி வருபவராவார்,
ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் சர்வதேச புலம்பெயர்வு ஆய்வு நிறுவனத்தில் இணை அறிஞராக உள்ள இவர், அரபு மறுமலர்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் புலம்பெயர்வு மற்றும் கட்டாய இடப்பெயர்ச்சி குறித்த மூத்த ஆலோசகராகவும் பணியாற்றி வருகின்றார்.
அரபு மறுமலர்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் பாலஸ்தீன கேள்வி குறித்த உலகளாவிய வலையமைப்பை இணைந்து நிறுவியரும் இவராவார்.
2013-2015 காலகட்டத்தில், மேற்கு ஆபிரிக்காவில் எபோலா பரவியபோது, Project Concern International என்ற அமெரிக்க அரசு சாரா அமைப்பில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார்.
2020ம் ஆண்டில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக பதிப்பகத்திலிருந்து வெளியான Palestinian Refugees in International Law என்ற நூலை இலெக்ஸ் டாக்கன்பர்க்குடன் இணைந்து எழுதினார். இது பாலஸ்தீன அகதிகளின் சட்ட நிலை குறித்த விரிவான ஆய்வாகக் கருதப்படுகின்றது.
இவர் இஸ்ரேல்-பாலஸ்தீன சட்ட நிலை மற்றும் பாலஸ்தீன அகதிகளின் கட்டாய இடப்பெயர்ச்சி குறித்து பல கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார்.
2018ம் ஆண்டு முதல் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு பல்கலைக்கழகங்களில் சர்வதேச சட்டம் மற்றும் கட்டாய இடப்பெயர்ச்சி குறித்து கற்பித்து வருகிறார்.
இவர் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் மனித உரிமைகள் நிலையை மதிப்பீடு செய்து, பொதுவெளியில் அறிக்கை அளிப்பது, அரசாங்கங்கள் மற்றும் சிவில் சமூகங்களுடன் இணைந்து பணியாற்றுவது ஆகியவற்றை மேற்கொள்கிறார்.
இவர் ஆண்டுதோறும் மனித உரிமைகள் கவுன்சிலுக்கு அறிக்கை சமர்ப்பிக்கிறார் மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளுக்கு அவ்வப்போது பயணம் செய்து வருகின்றார்.
2024 மார்ச்சில் “Anatomy of a Genocide” என்ற அறிக்கையில், காஸாவில் மூன்று வகையான இனப்படுகொலைச் செயல்களை இஸ்ரேல் மேற்கொள்வதற்கான நியாயமான காரணங்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்; இதில் “வாழ்க்கை நிலைமைகளை வேண்டுமென்றே அழிக்கும்” செயல்களும் அடங்கும் என்று குறிப்பிடுகின்றார்.
2025 ஜூனில் “From the economy of occupation to the economy of genocide” என்ற அறிக்கையில், காஸாவின் இனப்படுகொலை தொடர்வதாகவும், இது பல நிறுவனங்களுக்கு இலாபகரமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மைக்ரோசாப்ட், ஆல்ஃபாபெட் இன்க், அமேசான் உள்ளிட்ட 48 நிறுவனங்களை பட்டியலிட்டு, இவை இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மற்றும் பாலஸ்தீனர்களை இடம்பெயர்த்தல் ஆகியவற்றுக்கு உதவுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மற்றும் காஸாவின் நடவடிக்கைகளை “இனப்படுகொலை” மற்றும் “அபார்டைட்” என்று விவரித்ததற்காக இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் விமர்சிக்கப்பட்டார்.
2024 பிப்ரவரியில் இஸ்ரேல் அவரை “பெர்சோனா நான் கிராட்டா” (persona non grata) என்று அறிவித்து, நாட்டுக்குள் நுழைய தடை விதித்தது.
2025 ஜூலையில், அமெரிக்க ட்ரம்ப் நிர்வாகம் இவரை “விசேடமாக புரிந்துணரப்பட்ட தேசியவாதி” என்று குறிப்பிட்டு, Executive Order 14203ன் கீழ் பொருளாதாரத் தடைகளை விதித்தது.
இதனை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, அவரது ICC ஆதரவு மற்றும் “யூத-விரோத” கருத்துகள் என்று குற்றம் சாட்டினார்.
2014ல் “யூத லாபி” (Jewish lobby) குறித்து அவர் வெளியிட்ட கருத்து, இஸ்ரேல் மற்றும் அதன் ஆதரவாளர்களால் யூத-விரோதமாக விமர்சிக்கப்பட்டது.
2023 ஜனவரியில், பல மனித உரிமை அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் அவருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டன.

2023 ஏப்ரலில், இத்தாலிய உரிமைகள் குழுக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் அவருக்கு ஆதரவாக அறிக்கைகள் வெளியிட்டனர்.
முன்னாள் சிறப்பு அறிக்கையாளர்களான ஜான் டுகார்ட், ரிச்சர்ட் ஃபால்க், மைக்கேல் லின்க் ஆகியோர் இவரை “அவதூறு” மற்றும் “தனிப்பட்ட” தாக்குதல்களுக்கு இலக்கானவர் என்று கூறி, ஐ.நா. அவரைப் பாதுகாக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர்.
2024 நவம்பரில், ஐ.நா. உயர் ஆணையர் வோல்கர் டர்க், அல்பானீஸ் அம்மையார் மற்றும் அவரது குடும்பத்தினர், சக ஊழியர்களுக்கு எதிரான மிரட்டல்களைக் கண்டித்த நிலையில், 2025 மார்ச்சில், யூத தீவிரவாத அமைப்பான பெட்டார் (Betar), லண்டனில் அவருக்கு எதிராக “பேஜர் தாக்குதல்” மிரட்டல்கூட விடுத்தமை குறிப்பிடத்தக்கது!
செம்மைத்துளியான்.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments