
துள்ளித்திரியும் வயதில், குழந்தைகளின் மனதில் உற்சாகமும், தைரியமும் இயற்கையாகவே நிறைந்திருக்கும். இந்த பருவத்தில் அவர்களின் ஆளுமை மெல்ல மெல்ல மெருகேறும். ஆனால், சில சமயங்களில் பெற்றோர்கள் தங்களையறியாமல் செய்யும் சில தவறுகள், குழந்தைகளின் இயல்பான தைரியத்தைக் குறைத்து, அவர்களை பயந்த சுபாவம் கொண்டவர்களாகவும், தன்னம்பிக்கை இழந்தவர்களாகவும் மாற்றிவிடக்கூடும். இது அவர்களின் எதிர்கால வாழ்க்கையையே பாதிக்கலாம். அத்தகைய சில முக்கியமான தவறுகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. தொடர்ச்சியான கண்டிப்பும், தண்டனைகளும்: குழந்தைகள் தவறு செய்வது இயல்பு. ஆனால், அவர்கள் செய்யும் சின்னச் சின்ன தவறுகளுக்கும் அளவுக்கு அதிகமாக திட்டுவதும், அடிக்கொருமுறை தண்டிப்பதும் அவர்களின் பிஞ்சு மனதில் ஆழமான வடுவை ஏற்படுத்திவிடும். "நாம் எது செய்தாலும் அது தவறாகத்தான் முடியும்" என்ற எதிர்மறையான எண்ணம் அவர்களுக்குள் பதிந்து, எந்தவொரு செயலையும் செய்வதற்கு முன்பே ஒருவித அச்சம் தொற்றிக்கொள்ளும்.
2. அமைதியற்ற வீட்டுச் சூழல்: குழந்தைகள் வளரும் வீடானது அமைதியும், அன்பும் நிறைந்ததாக இருக்க வேண்டியது அவசியம். மாறாக, வீட்டில் பெரியவர்கள் மத்தியில் அடிக்கடி சண்டை சச்சரவுகள், உரத்த குரலில் வாக்குவாதங்கள், அல்லது வன்முறையான சூழல் நிலவினால், அது குழந்தைகளின் மன அமைதியைக் கடுமையாகப் பாதிக்கும். இத்தகைய சூழலில் வளரும் குழந்தைகள் பெரும்பாலும் மன அழுத்தத்துடனும், எரிச்சல் உணர்வுடனும் காணப்படுவார்கள்.
3. புறக்கணிப்பும், தனிமையும்: இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், பல பெற்றோர்கள் தங்கள் வேலை மற்றும் இதர பொறுப்புகளில் அதிக கவனம் செலுத்துவதால், குழந்தைகளுடன் போதுமான நேரம் செலவிட முடியாமல் போகிறது. இதனால், குழந்தைகள் தங்களை யாரும் கண்டுகொள்ளவில்லையோ, தாங்கள் யாருக்கும் தேவையில்லாதவர்களோ என்ற ஏக்கத்திலும், பாதுகாப்பற்ற உணர்விலும் தள்ளப்படலாம்.
4. உணர்வுகளை மதிக்காத போக்கு: குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் பயம், வலி, வருத்தம் போன்ற உணர்வுகளை அழுகையின் மூலமாகவோ அல்லது வேறு விதமாகவோ வெளிப்படுத்துவது இயல்பு. அப்போது, "இதற்கெல்லாம் போய் அழுவதா?" என்று கூறி அவர்களது உணர்வுகளைப் பெற்றோர்கள் உதாசீனப்படுத்தும்போது, குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள்.
5. மற்றவர்களுடன் ஒப்பிடுவதும் கேலி செய்வதும்: ஒவ்வொரு குழந்தையும் தனித்திறமையும், தனித்துவமும் கொண்டது. ஒரு குழந்தையை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பேசுவதும், "அவன் எவ்வளவு நன்றாகச் செய்கிறான், நீ ஏன் இப்படி இருக்கிறாய்?" என்று குறை கூறுவதும், அல்லது அவர்களது செயல்களைக் கேலி செய்வதும் குழந்தையின் சுயமதிப்பைக் கடுமையாகப் பாதிக்கும்.
எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் தனித்திறமையைக் கண்டறிந்து, அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அன்பான, பாதுகாப்பான, ஊக்கமளிக்கும் சூழலை வீட்டிற்குள் உருவாக்கிக் கொடுப்பது மிகவும் அவசியம்.
kalkionline

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments