Ticker

6/recent/ticker-posts

Ad Code



288 'ஹாஃபிழ்' வாரிசுகளை உருவாக்கி, சாதனை படைத்துள்ள ஷேக் தாஹிரு உஸ்மான் பௌச்சி!


ஒரே குடும்பத்தில் 288 பேர் அல்-குர்ஆனை மனப்பாடம் செய்து ஹாஃபிழ்களாகி சாதனை படைத்துள்ளனர்.

அதே குடும்பத்தில் ருக்காயாடு ஃபதாஹு உமர் (Rukkayatu Fatahu Umar) என்ற மூன்று வயது எட்டு மாதங்களேயான சிறுமி, திருக்குர்ஆனை முழுமையாக மனப்பாடம் செய்து, உலகின் இளைய ஹாஃபிழாக அறியப்படுகின்றார்.

இவை அனைத்துக்கும் ஷேக் தாஹிரு உஸ்மான் பௌச்சி  என்ற மூதறிஞரின் வாரிசுகளே காரண கர்த்தாக்களாகின்றனர்.

அல்ஹாஜி உஸ்மான் ஆதம்  அவர்களின் மகனான, 1927 ஜூன் 29 அன்று நைஜீரியாவின் வடக்கு பகுதியில் உள்ள கோம்பேயில் பிறந்த ஷேக் தாஹிரு உஸ்மான் பௌச்சி அவர்கள் தனது முதல் மனைவியை 1948ல் திருமணம் செய்தார், பின்னர் மற்ற மனைவிகளையும் திருமணம் செய்யுள்ளார்.

ஃபுலானி இனத்தவரான இவர், திஜானிய்யா சூஃபி தரீக்காவின் முக்கிய தலைவராவார்.

ஷேக் தாஹிரு பௌச்சி அவர்களுக்கு 95  பிள்ளைகள்; இதில் 48 பெண்கள் மற்றும் 47 ஆண்கள். இவருக்கு 406 பேரக்குழந்தைகள் உள்ளனர்; இதில் 236 ஆண்கள் மற்றும் 170 பெண்கள். இவருக்கு 100  கொள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனர்; அதனால் மொத்தமாக இவரின் வாரிசுகள் 600 பேர்களுக்கும்  அதிகமானோர் ஆவர்.

(இந்த எண்ணிக்கைகள் 2023ம் ஆண்டு வரையிலான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவையாகும்.)

அல்-குர்ஆன் -  114 அத்தியாயங்கள், 6,236 வசனங்கள் மற்றும் 77,797 வார்த்தைகளை உள்ளடக்கியது. இஸ்லாத்தில், அல்-குர்ஆனை முழுமையாக மனப்பாடம் செய்தவர் 'ஹாஃபிழ்' என்று அழைக்கப்படுவர்; இந்அத அந்தஸ்து இஸ்லாமிய சமூகத்தில் மிகவும் மதிக்கப்படுகிறது.

ஷேக் தாஹிரு பௌச்சியின் பரம்பரையில் 95 பிள்ளைகளில் 77 பேர் முழு குர்ஆனையும் மனப்பாடம் செய்து ஹாஃபிழ் அந்தஸ்தைப் பெற்றுள்ளனர். அவரது 406 பேரக்குழந்தைகளில் 199 பேர் குர்ஆனை மனப்பாடம் செய்து ஹாஃபிழ்களாகியுள்ளனர்;  100 கொள்ளுப் பேரர்களுள் 12 பேர் ஹாஃபிழ் அந்தஸ்தைப் பெற்றுள்ளனர். ஆக மொத்தமாக அவரது பரம்பனையில் 288 பேர்கள் ஹாஃபிழ்களாவர். 

ஷேக் தாஹிரு பௌச்சி தனது தந்தையிடமிருந்து குர்ஆனை மனப்பாடம் செய்யக் கற்றுக் கொண்டார். பின்னர், ஷேக் திஜானி உஸ்மான், ஷேக் அபுபக்கர் அதீகு மற்றும் ஷேக் அப்துல்காதிர் ஸாரியா ஆகிய அறிஞர்களிடம் சன்மார்க்கக் கல்வியைப் பயின்றார்.

அவர் திஜானிய்யா சூஃபி தரீக்காவின் முக்கிய தலைவராக இருப்பதால், இந்தத் தரீக்காவை தனது வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஏற்று, அதன் கோட்பாடுகளைப் பரப்புவதில் முக்கிய பங்காற்றினார்.

அவர் 72 ஆண்டுகளுக்கும் மேலாக குர்ஆனுக்கு விளக்கவுரை வழங்கி வருகின்றார். குர்ஆன், தஃப்ஸீர் மற்றும் மஆரிஃபா (ஆன்மீக அறிவு) ஆகியவற்றில் அவர் மிகவும் திறமையானவராகக் கருதப்படுகிறார்.

அவர் நிறுவிய இஸ்லாமியப் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் குர்ஆன் மனப்பாடம் மற்றும் இஸ்லாமிய கல்வியைப் பயின்று வருகின்றனர்.
ஷேக் தாஹிரு பௌச்சி நைஜீரியாவில் மத நல்லிணக்கத்தையும் அமைதியையும் ஊக்குவிக்கும் முக்கிய தலைவராக உள்ளார். அவர் நைஜீரிய இஸ்லாமிய விவகார உயர் கவுன்சில் (NSCIA) ஃபத்வா கமிட்டியின் துணைத் தலைவராகவும் பணியாற்றுகின்றார்.

50 முறைகளுக்கு மேல் ஹஜ் பயணமும், 210 முறைக்கும் மேல் உம்ரா பயணமும் செய்துள்ள ஷேக் தாஹிரு பௌச்சி, விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார், அத்துடன் பௌச்சி, கோம்பே மற்றும் பிற இடங்களில் பெரிய பண்ணைகளை வைத்துள்ளார்.

ஷேக் தாஹிரு பௌச்சியின் குடும்பத்தில் 288 பேர் குர்ஆனை மனப்பாடம் செய்திருப்பது உலகளவில் ஒரு தனித்துவமான சாதனையாகக் கருதப்படுவதால்,  "சோலான் புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்” (Cholan Book of World Records)ல் இது பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது!

மனித வரலாற்றில் இதற்கு முன்பு கண்டிராத ஒரு சாதனையை ஷேக் தாஹிரு பௌச்சி அவர்கள் நிகழ்த்தியுள்ளார்.

முழு அல்-குர்ஆனையும் மனப்பாடம் செய்த அதிக எண்ணிக்கையிலான சந்ததியினரைக் கொண்டவர் என்ற குறிப்பிடத்தக்க சாதனை மூலம் அவர் மதிப்புமிக்க சோலன் உலக சாதனைப் புத்தகத்தில் ஒரு தகுதியான இடத்தைப் பெற்றுள்ளார்.

தனது வாழ்நாள் முழுவதிலும், குர்ஆன் ஓதுதல், ஸலாதுல் ஃபாதிஹி மற்றும் அல்லாஹ்வைப் புகழ்ந்து மன்னிப்பு கோருதல் போன்ற ஆன்மீக நடவடிக்கைகளில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்து வருபவர்.

செம்மைத்துளியான்.

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments