
கடுமையாக யோசித்த செரோக்கி, ஜாகையை விட்டும் அம்பாக வெளியேறி, சற்று நேரம் சென்று பென்னாம் பெரிய மீசையுடன் கூடிய கறுகறுவென்றிருந்த கொளுத்த உருவம் கொண்ட ஒரு வயோதிப பழங்குடியின நபரைத் தன்னோடு அழைத்து வந்து, ஜாகைக்குள் நுழைந்தான்!
வந்த நபர் அப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஒரு வைத்தியராக இருக்க வேண்டும். படுக்கையில் கிடந்த செரோக்கியின் தந்தைக்கருகே அமர்ந்த அவர், செரோக்கியின் தந்தையின் கரங்களில் ஒன்றைப் பற்றிப்பிடித்து சிறிது நேரம் சென்ற பின்னர், ஒரு சிரட்டை சீனித்துளசிச்சாறு எடுத்து வரும்படி பணித்தார். செரோக்கியின் தாய் சிறிது நேரத்தில் சீனித் துளசிச்சாற்றைத் தயார் செய்து அதனை அந்த வைத்தியர் முன் கொண்டுவந்து வைத்தாள்.
வேர்த்து விருவிருத்திருந்த வைத்தியர், தனது இடக்கரத்தை அவரது முதுகுக்குப் பின்னால் நகர்த்தி, அப்பகுதியைச் சற்று நேரம் தடவினார். அங்கிருந்து தன் விரல்களால் உருட்டி எடுத்த பழுப்பு நிறத்திலான ஒரு வில்லையை சீனித்துளசிச்சாற்றினுள் விட்ட அவர் அதனைத் தன் விரல்களாலேயே கலக்கி எடுத்து, படுக்கையில் கிடந்த செரோக்கியியின் தந்தையின் தலையை நிமிர்த்திப் பிடித்து, அதனை முற்று முழுவதுமாக அவருக்குப் பருக்கிவிட்டார்.
மீண்டும் தனது வலக்கரத்தை முதுகுப் பக்கமாக நகர்த்தி அதே வடிவிலான பல வில்லைகளைச் செய்து, வெற்றுச் சிறட்டையினுள் விட்டு விட்டவர், அதனைச் செரோக்கியின் தாயின் கரங்களில் கொடுத்து, அந்தி சாயும்போது ஒரு வில்லையும், விடியலின்போது ஒரு வில்லையும் சீனித்துளசிச்சாற்றினுள் கரைத்துக் கொடுக்குமாறு பணித்து விட்டு அங்கிருந்து நகர்ந்தார்!
செரோக்கி அவரைப் பின்தொடரலானான்!
(தொடரும்)
செம்மைத்துளியான்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments