
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 7 ஆண்டுகளாக பூட்டி கிடந்த பாழடைந்த வீட்டிற்குள் மனித எலும்புக்கூடு ஒன்று கிடந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள நாம்பள்ளி சந்தைப் பகுதியில் கடந்த 7 ஆண்டுகளாக ஒரு வீடு பூட்டிய நிலையில் இருந்துள்ளது. சிதிலமடைந்து காணப்படும் அந்த வீட்டின் அருகே இருந்த மைதானத்தில் இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பந்து பாழடைந்த அந்த வீட்டின் அருகே உள்ள புதருக்குள் போய் விழுந்துள்ளது.
இந்நிலையில், விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் அந்த பந்தை எடுப்பதற்காக வீட்டின் அருகே சென்றுள்ளார். அப்போது தூர்ந்து போன ஜன்னல் வழியாக பார்த்தபோது வீட்டுக்குள் ஒரு மனித எலும்புக்கு கூடு ஒன்று சுவற்றின் அருகே துருத்திக் கொண்டு இருந்துள்ளது. அதைக் கண்டு அதிர்ந்துபோன இளைஞர் உடனே அங்கிருந்து ஓடி விட்டார். மறுநாள் அது உண்மையாகவே மனித எலும்புக்கூடுதானா? என்பதைத் தெரிந்துகொள்ள அதே பாழடைந்த வீட்டக்கு மீண்டும் சென்றுள்ளார்.
இந்த முறை தனது செல்போனை எடுத்து எலும்புக் கூட்டை Zoom செய்து வீடியோ எடுத்துள்ளார். அதை தன்னுடைய முகநூல் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ சில நாட்களில் வைரலானது. வீடியோவைப் பார்த்த பலரும் கடும் அதிர்ச்சி அடைந்த நிலையில் இந்த விவகாரம் போலீசாரின் கவனத்திற்கு சென்றது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டின் உரிமையாளர் யார்? என விசாரித்தனர்.
ஆனால் அவர் கடந்த 7 ஆண்டுகளாக வெளிநாட்டில் வசிப்பதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். எனவே வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு மனித எலும்புக்கூடு ஒன்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த வீடியோவை முகநூலில் பகிர்ந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தபோது, நடந்தவற்றை போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அந்த மனித எலும்புகூட்டை கைப்பற்றிய போலீசார் அதை தடய அறிவியல் ஆய்விற்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அந்த மனித எலும்புக்கூடு யாருடையது? கொலை செய்யப்பட்டாரா? என்பதை தெரிந்து கொள்ள வீட்டு உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசுவதற்கான முயற்சிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 7 ஆண்டுகளாக பூட்டிக் கிடந்த வீட்டிற்குள் மனித எலும்புக் கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments