Ticker

6/recent/ticker-posts

Ad Code



யார் இந்த அஹ்மத் முஸ்லியார்? இறுதி நேரத்தில் கேரள நர்ஸின் மரண தண்டனை நிறுத்தப்பட்டது எப்படி?


நிமிஷா ப்ரியா, கேரளாவைச் சேர்ந்த 37 வயது நர்ஸ், 2008ல் வேலைக்காக யெமன் நாட்டுக்குச் சென்றுள்ளார். 2017ல் அவரது யெமன் தொழில் பங்குதாரரான தலால் அப்தோ மஹ்தியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, 2020ல் மரண தண்டனைக்கான தீர்ப்பைப் பெற்றார்; இது 2023ல் உறுதி செய்யப்பட்டது.  2025 ஜூலை 16ல் அவரது தூக்கு தண்டனை நடைபெறவிருந்தது. 

இந்த சூழலில், அவரைக் காப்பாற்ற அவரது குடும்பமும்  இந்திய அரசும் பல முயற்சிகள் மேற்கொண்டபோதிலும், யெமன் அரசுடனான தூதரக உறவுகள் குறைவாக இருந்தமையால் எதுவும் முடியாமற் போய்விட்டது!

கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் பிறந்த, 94 வயதான ஷெய்க் அபூபக்கர் அஹ்மத் முஸ்லியார்  இந்தியாவின் பெரிய முஃப்தியாவார். "முஃப்தி" என்பது அரசு அங்கீகாரம் பெறாத பட்டமாக இருந்தபோதிலும், சமூகத்தில் மிகவும் மதிப்பு பெற்ற ஒன்றாகக் கருதப்படுகின்றது.

சன்னி இஸ்லாமிய தலைவரான இவர்,  இஸ்லாமிய சட்ட நிபுணராகவும், தெற்காசியாவில் சன்னி முஸ்லிம்களிடையே மிகவும் மதிப்பும், மரியாதையும் பெற்ற ஒருவராகவும் கருதப்பட்டு வருகின்றார்.

ஷெய்க் அபூபக்கர் அஹ்மத் முஸ்லியார்  அனைத்திந்திய சன்னி ஜமிய்யத்துல் உலமா பொதுச் செயலாளராகவும், ஜாமிஆ மர்கஸ் தலைவராகவும் பணியாற்றிவருகின்றார். அத்துடன் இவர் மர்கஸ் அறிவு நகர திட்டத்தின் தலைவராகவும் பணியாற்றுகிறார்; இது மருத்துவ மற்றும் சட்டக் கல்லூரிகள், கலாச்சார மையங்களை உள்ளடக்கியதாகும்.

ஷெய்க் அபூபக்கர் அஹ்மத் முஸ்லியார் அவர்கள், அறிஞர்கள் கவுன்சில்களில் பங்கேற்று, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கு அடிக்கடி சென்று சொற்பொழிவுகள் நடத்தி வருபவருமார்.

தூக்கு தண்டனை பெற்ற நர்ஸ் நிமிஷா ப்ரியா விடயத்தில் ஷெய்க் அபூபக்கர் அஹ்மத் முஸ்லியார் அவர்கள் இறுதி நேரத்தில் தலையிட்டு, யெமன் சூபி இஸ்லாமிய அறிஞர் ஷெய்க் ஹபீப் உமர் பின் ஹாஃபிஸ் அவர்களுடன் தொடர்பு கொண்டு பேச்சு வார்த்தை நடத்தினார்.

யெமன் சூபியவர்கள், பலியின் குடும்பத்துடன் பேசி, இஸ்லாமிய சட்டத்தின் கீழ் "ரத்த பணம்" மூலம் மன்னிப்பு பெற முயற்சித்தார். இது ஷரீய்யா சட்டத்தின் கீழ் மரண தண்டனைக்கு மாற்றாக அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

யெமன் சூபியவர்கள் யெமனின் மத அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, வட யெமனில் அவசர கூட்டம் ஒன்றை ஏற்படுத்தினார். இதில் மூத்த அதிகாரிகள், சனா கிரிமினல் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, பலியின் குடும்பம் மற்றும் பழங்குடி தலைவர்கள் பங்கேற்றனர்.

மூத்த நீதிபதி முகம்மது பின் அமீன் மற்றும் ஷூரா கவுன்சில் உறுப்பினர்,  தண்டனையை தள்ளிவைக்க பலியின் குடும்பத்தினரை வலியுறுத்தினர்.
இதன் விளைவாக, யெமன் சிறப்பு கிரிமினல் நீதிமன்றம் அவரது தூக்கு தண்டனையை தள்ளிவைக்கும் உத்தரவை பிறப்பித்தது. இது நீதிபதி ரிஸ்வான் அஹ்மத் அல்-வஜ்ரி மற்றும் புரோஸிக்யூட்டர் ஸ்வரி முதீன் முஃபத்தால் ஆகியோரால் கையெழுத்திடப்பட்டது.

இந்த முயற்சிகள் நிமிஷா ப்ரியாவின் குடும்பத்திற்கு நம்பிக்கையை அளித்துள்ளது; மேலும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷெய்க் அபூபக்கர் அஹ்மத் முஸ்லியார் அவர்களின் தலையீடு இஸ்லாமிய சட்டத்தின் மற்றும் மத அடிப்படையில் சர்வதேச உறவுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செம்மைத்துளியான்.

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments