Ticker

6/recent/ticker-posts

Ad Code



பாட்டிக்கு வந்த காதல் கடிதம்!


சைக்கிள் 'பெல்' சத்தம் கேட்டதும் ஹாலில் விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள் முற்றத்துக்கு ஓடி வந்து தபால்காரனைச் சூழ்ந்து கொண்டனர். 

"சிறசுகளா....உங்களில் யாரு புஷ்பா?" என்று தபால்காரன் கேட்டதும், வயதில் கூடிய ராதா, 

"எங்களில் யாருமில்ல... நம்ம பாட்டிதான்" என்று விருட்டெனக் கூறிவிட்டு, தபால்காரன் கொடுத்த கடிதத்துடன் வீட்டுக்குள் ஓடினாள்; அவளைத் தொடர்ந்து மற்றப் பிள்ளைகளும் ஓடினர். 

கால்கள் இரண்டையும் நீட்டிப் போட்டவாறு  தரையில் அமர்ந்து, வெற்றிலை குதப்பிக் கொண்டிருந்த பாட்டியின் கண்கள் அந்தக் கடிதத்தைக் கண்டதும் ஆச்சரியத்தில் விரிந்தன.

ஆஹா.... எத்தனை வருடங்களுக்குப் பிறகு தன் பெயரில் ஒரு கடிதம் வந்திருக்கின்றது. அதுவும் ஜப்பான் முத்திரை குத்தப்பட்ட  வெளிநாட்டுக் கடிதம்!

'தனக்கு ஜப்பானிலிருந்து கடிதம் எழுதும் அளவுக்கு... யார்தான் இருக்கிறார்கள்?' என்று தனக்குள் நினைத்துக் கொண்ட புஷ்பா பாட்டி, கடிதத்தை அப்படியே மூத்த பேத்தியிடம் நீட்டி, பிரித்துப் படிக்கும்படி  சைகை காட்டியபோது, பாட்டியின் கைகள் சற்று நடுங்கின.

கடிதத்தின் மேல்விலாசத்தில் "யமாமோட்டோ கென்ஜி" என்ற பெயர் காணப்பட்டது. அந்தப் பெயரை ராதா முதலில் உச்சரித்ததும், புஷ்பாவின்
இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.  

"இது என்ன வேடிக்கை? இவர் உயிரோடுதான் இருக்கிறாரா?"

மூத்த பேத்தி  ராதா, ஜப்பானியப் பட்டுத்தாளில் எழுதப்பட்டிருந்த கடிதத்தை தொடர்ந்து வாசிக்கலானாள்!

"அன்பே புஷ்பா,

நீ இன்னும் என்னை நினைவில் வைத்திருப்பாயா என்பதை என்பதை நானறியேன். 1945ல் ரங்கூனில் சந்தித்து ஒருவருக்கு ஒருவர் சுகதுக்கங்களில் பங்கேற்று வாழ்ந்த எங்களை, போரின் குரூரங்கள் பிரித்தன. உன் நினைவாக என்னிடம் மறைத்து வைத்திருந்த நீயும், நானும் சேர்ந்து எடுத்த  புகைப்படம் இன்னும் என்னிடத்தில் பத்திரமாக உள்ளது!

இப்போது எனக்கு 98 வயதாகின்றது. என் கடைசி நாட்களில் உன்னை மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசை; 'சிமொதாத்தை'யில் என் பேரனுடன் நான் கூடவே தங்கியிருக்கின்றேன். உனக்கு வசதியானால், என் இடத்தைத் தேடி வா! சிமொதாத்தைக் கிராமம்  சுக்குபா பல்கலைக் கழகத்துக்குப் பக்கத்தில்தான் உள்ளது. நரீட்டாவிலிருந்து ஓயமா வந்தால், அங்கிருந்து மிடோ நோக்கிவரும் ரெயிலில் எனது கிராமத்தை வந்தடைவது மிகவும் சுலபம்! நீ வருவாயா?
-காத்திருக்கும், கென்ஜி"

ராதா கடிதத்தை வாசிக்கக் கேட்டதும்,  பாட்டியின் கண்களில் நீர் வழிந்தது!

இரண்டாம் உலகப்போரின் காலம்; ரங்கூனில் செவிலியாகப் பணிபுரிந்த புஷ்பா, காயப்பட்ட ஜப்பானிய சிப்பாய் கென்ஜியைக் காப்பாற்றியதும்... தொடர்ந்து அவர்களுக்கிடையே மலர்ந்த இனிய காதலும்... அதன் நினைவுகளும்...அவளுக்குள் ஒரு கணம் வந்து போயின. பின்பு  பிரிவு என்ற துயர நிகழ்வு, அவர்களின் காதலை நீண்ட காலம் மறக்கச் செய்து விட்டது.
 
"பாட்டி... யார் இவர்? ஜப்பானுக்கு நீங்கள்  போகணுமா? அப்பாவிடம் சொல்லட்டுமா?" ராதா கேள்விகளைத் தொடுத்தபோது, பாட்டி நமட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தாள்.

"ஒரு காலத்தில்... அவர் என்னை அதிகம் விரும்பினார். நான் நினைத்ததற்கு மாறாக, இப்போது அவர் உயிருடன் இருக்கிறார்; நான் அவரைச் சந்திக்கணும் கண்ணு!" ராதாவைக் கட்டியணைத்து ஏங்கி அழுதாள் பாட்டி!

பாட்டியின் உணர்வுபூர்வமான ஆசையைப் பேத்திகள் நிறைவேற்றி வைக்கத் துணிந்ததும், அவர்களின் தந்தையான, பாட்டியின் மகனிடம் செய்தி சென்றது! பாஸ்போட் புதிதுபடுத்துவது முதல் கட்டுநாயக்காவிலிருந்து விமானத்தில் ஏற்றும் வரை சகலதையும் அவர் செவ்வனே செய்து முடித்தார்.
***
நரீட்டா விமான நிலையத்தில், விமானம் தரைதட்டியதும், அதிலிருந்து இறங்கிய புஷ்பாவின் கால்கள் நடுங்கலாயின. 

ரெயில்கள் பலதை ஏறி இறங்கி, ஈற்றில் பாட்டியும், பேத்திகளும் சிமொதாத்தை மெட்ரோ நிலையத்தில் இறங்கினர்.

"பல தசாப்தங்களுக்குப் பிறகு... அவர் இப்போதும் என்னை அடையாளம் கண்டுகொள்வாரா?" என்று 
புடை சூழ்ந்திருந்த பேத்திகளிடம்  நச்சரித்துக் கொண்டிருந்த பாட்டி,  மூத்தவளின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டாள்.  

திடீரென..."புஷ்பா..." என ஒரு மெல்லிய, ஆனால் உறுதியான குரல்... தூரத்திலிருந்து கேட்டதும்...வீல்சேரில் அமர்ந்திருந்த கென்ஜியைப் பார்த்த புஷ்பாவின் கண்களில் புதிய ஒளிக்கீற்று தெறித்தது. 

கெஞ்சியின் பேரன் ஹிகாரு அவரை மெதுவாகத் தள்ளி வந்து பாட்டி முன் நின்றான்! 

கென்ஜியின் கைகளில் நரம்புகள் புடைத்தும், வயதுச் சுமையால் மேனி வெளிறிப் போயுமிருந்தது. ஆனால், கெஞ்சி ஆதரவாக அவளது கன்னத்தைத் தொட்டபோது, அதே அந்தக்கால வெப்பமான சுகத்தை புஷ்பா உணர்ந்தாள்.

"நீ... இன்னும் அதே புஷ்பாதான் தங்கமே! நீ மாறல...!" கென்ஜி கண்ணீரை வழிய விட்டார்.  

ராதாவும் மற்றப் பிள்ளைகளும் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தனர்.

கென்ஜியின் பேரன் ஹிகாரு, ஒரு பழைய புகைப்படத்தை அவர்களுக்குக் காட்டினான்.

1945ல் ரங்கூனில் எடுத்த புஷ்பா-கென்ஜியின் கருப்பு-வெள்ளைப் புகைப்படம்.

"தாத்தா இதை எப்போதும் தன் கைக்குள் வைத்துக் கொண்டிருப்பார்" என்றான் ஹிகாரு.  

அடுத்த இரண்டு வாரங்கள், சாகுரா பூக்கள் வீழ்ந்த வழிகளில் அவர்களின் இழந்த கால இடைவெளியை பேசிப் பேசியே நிரப்பினார்கள். புஷ்பா பாட்டியின் பேரப்பிள்ளைகள் கென்ஜியின் குடும்பத்தினரோடு மிசோ சூப்பும், இடியாப்பமும் பகிர்ந்து உண்டனர்.  

மற்றொரு நாளில் கென்ஜி புஷ்பாவிடம் ஒரு சிறிய மரப்பெட்டியை நீட்டினார். அவளது இளமைக் காலத்துப் பொன் வளையல்கள் அதில் காணப்பட்டன. போரின்போது புஷ்பா பத்திரப் படுத்தக் கொடுத்த அவற்றை, கென்ஜி  இன்றுவரை பத்திரப் படுத்தி வைத்திருந்தார்!  

"இப்போதுதான் என் மனம் அமைதியடைகிறது" என்று கென்ஜி சொன்னதும்,  புஷ்பா அவரது நெற்றியில்  முத்தமிட்டாள்!

"என பொன் வளையல்களைப் பாதுகாத்தவர்...எனக்குக் கடிதம் எழுதியவர்... இப்போது என் இதயத்தில் வசிக்கிறார்" என்று அவள் தன் பேத்திகளிடம் சொல்ல, அவர்கள் சில நாட்கள் சகுரா இதழ்களை வானத்தில் பறக்கவிட்டுவிட்டு, இலங்கை திரும்பினர். 

***
இபராக்கியின் அமைதியான ஒரு புறநகரில், மரங்கள் நிறைந்த தெருவில் ஒரு சிறிய ஜப்பானிய வீடு. அங்குதான் இப்போது புஷ்பாவும் கென்ஜியும்  வாழ்கின்றார்கள்.  

ஆனால் ஒவ்வொரு வாரமும் வீடியோ கோல் மூலம் பாட்டியின் கலகலப்பான முகத்தைப்  பேத்திகள் பார்த்து மகிழ்ந்தனர். குறிப்பாக, பாட்டி அவர்களிடம் சொல்லும் புதுப்புது கதைகளை அவர்கள் கேட்டு மகிழ்ந்தனர்.

"இன்று கென்ஜி எனக்கு ஜப்பானிய தேனீர் தந்தார்! நீங்களும் எங்களோடு இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!" என்று பாட்டி அடிக்கடி கூறுவதை அவர்கள் கேட்டு ரசித்தனர்.  
  
காலையில், இருவரும் கை கோர்த்துக்கொண்டு "கேட்டுபோல்" விளையாடும் மைதானத்துக்குச் செல்வார்கள். ஜப்பானிய முதியோர்களுடன் சேர்ந்து, பந்தைக் கோலால் அடித்து சிரித்துக்கொண்டே விளையாடுவது அவர்களின் பொழுதுபோக்காக இருந்தது!

"புஷ்பா, நீங்கள் இன்று சூப்பர் ஷாட் அடித்தீர்கள்!" என்று கென்ஜி பாராட்ட, அவள் எக்காளமிட்டுச் சிரிப்பாள்.  அந்தச் சிரிப்பில் கெஞ்சி சொக்கிப் போய்விடுவார்.

மாலையில், ஒன்றாக பாய்த் தரையில் உட்கார்ந்து, சூடான மேசைக்கு அடியில் கால்களை நுழைத்துக் கொண்டு, சுட்ட சுஷியைச் சாப்பிடுவதும்,  போர்க் காலத்தின் கசப்பான நினைவுகளையும்,  இனிப்பான விநாடிகளையும் பற்றி கதைத்துக் கொண்டிருப்பது அவர்களின் அன்றாட பொழுது போக்காக இருந்தது!

சகுரா பூக்கள் உதிர்ந்த ஏப்ரல் மாதத்தில் ஒருநாள் இருவரும் தோட்டத்து பெஞ்சில் அமர்ந்து, கைகளைப் பின்னி இணைத்துக் கொண்டிருந்தார்கள்.  

"கென்ஜி... இந்த வயதில் உங்களோடு வாழ்வது என் பாக்கியம்" என்றாள் புஷ்பா.  

"நாம் இழந்த காலங்களை இப்போது நிரப்பிக்கொண்டிருக்கிறோம்" என்று கென்ஜி அவளது தலையில் முத்தமிடுவார்.  

அவர்களின் வெள்ளை முடிகள் காற்றின் தாக்கத்தால் சிலவேளை  ஒன்றில் ஒன்று கலப்பதுண்டு.  காதல் மற்றும் நட்புக்கு வயதெல்லை இல்லை என்பதை காற்று வெள்ளை முடிகளை இணைத்து, அவர்களுக்கு உணர்த்திச் செல்லும்!

புஷ்பாவும்,  கென்ஜியும் வயதின் சுமையைக் கிழித்தெறிந்துவிட்டு, தமது இறுதி நாட்களைச் சிரித்து விளையாடிக் கழித்துக் கொண்டிருப்பதை ஒவ்வொரு வாரமும் வீடியோ கோலில் பேத்திகள் கண்டு ரசிப்பதில் இன்பம் காண்கின்றார்கள்!

செம்மைதுதுளியான்.



Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments