
லண்டனில் இருக்கும் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 224 ரன்கள் அடித்தது. அடுத்து விளையாடிய இங்கிலாந்து 77 பந்துகளில் 92 ரன்கள் அடித்ததால் நிச்சயம் 300 ரன்களை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அங்கிருந்து சிறப்பாக பவுலிங் செய்த இந்திய அணி இங்கிலாந்தை 247 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது. இந்திய அணிக்கு முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள். முன்னதாக இப்போட்டியில் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா விளையாடாததால் இந்திய அணி தடுமாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும் பும்ராவின் இடத்தில் பொறுப்புடன் செயல்பட்ட முகமது சிராஜ் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். ஜஸ்ப்ரித் பும்ராவை போல் பணிச்சுமையை பற்றி வாயைத் திறக்காத அவர் இந்தியாவுக்காக 5 போட்டிகளிலும் விளையாடி இதுவரை 18* விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அதன் வாயிலாக இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸை (17) முந்தி இத்தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார்.
முன்னதாக ஆகஸ்ட் 1ஆம் தேதி இங்கிலாந்தின் முன்னாள் வீரர் கிராஹம் தோப் பிறந்த நாளாகும். இங்கிலாந்துக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி நிறைய வெற்றிகளில் பங்காற்றிய அவர் 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி இயற்கை எய்தினார். தம்முடைய காலத்தில் அவர் பெரும்பாலும் தலையில் ஹெட்பேண்ட் அணிந்து விளையாடி இங்கிலாந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
எனவே நேற்று அவருடைய பிறந்தநாளில் இங்கிலாந்து வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் தோப் ஹெட்பேண்ட் அணிந்து அவருக்கு கௌரவ மரியாதை செலுத்தினார்கள். இருப்பினும் இந்திய அணியினர் யாரும் “ஜிடி” என்ற கிராஹம் தோப் பெயரின் முதல் எழுத்துக்கள் அச்சிடப்பட்ட அந்த ஹெட்பேண்டை அணியவில்லை. ஆனால் முகமது சிராஜ் மட்டும் 2வது நாளின் மாலை வேளையில் அந்த ஹேண்ட்பேண்டை அணிந்து தோப் அவர்களுக்கு மரியாதை செலுத்தினார்.
இங்கிலாந்து ஜாம்பவானுக்காக சிராஜ் செய்த அந்த செயல் அந்நாட்டு ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றது. அதே போல இந்திய ரசிகர்களும் என்ன மனுஷன்யா என்று ட்விட்டரில் அவரை பாராட்டினார்கள். இதைத் தொடர்ந்து இப்போட்டியில் இந்தியா 300+ ரன்களை இலக்காக நிர்ணயிக்கும் நோக்கத்தில் 2வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
crictamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments