Ticker

6/recent/ticker-posts

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-78


சகதிக்குழியைக் கடந்து வனத்தை நோக்கி வேகமாக  நடந்து கொண்டிருந்த செரோக்கியும், ரெங்க்மாவும்  ஆரம்பத்தில் வடிகால் ஒன்றைக் கண்டார்கள்!

செரோக்கிக்கு இதுவொன்றும் புதிதல்ல; ஆனால் ரெங்க்மாவுக்கு எல்லாமே புதிதாக இருந்தது! இதுபோன்ற ஆயிரக்கணக்கான வடிகால்கள் ஒன்று சேர்ந்துதான் அமேசான் நதியை உருவாக்கியுள்ளது!

வனத்துக்கு செல்லும் வழியில், ஒருமுறை இந்த வடிகாலைப் பார்ப்பதற்கு அவனது தந்தை செரோக்கியைக் கூட்டிச் சென்றார்.   முதன் முதலாக வடிகாலின் அழகைக் கண்டபோது செரோக்கி அதனை வெகுவாக ரசித்தான்!
 
அவர்கள் கரையோரமாக  அவர்கள் நடந்து கொண்டிருக்கும்போது, அதற்குள் இறங்கி நீராட வேண்டுமென்ற தனது ஆசையை ரெங்கமா செரோக்கியிடம் கூறினாள்!

ரெங்க்மாவின் கோரிக்கைக்கு எப்போதுமே மறுப்புக் கூறாத செரோக்கி, நீண்ட தூரம் நடந்து வந்த களைப்புத் தீர,  தாம் உடுத்திருந்தவைகளைக் கலற்றிப் பக்குவமாக வைத்துவிட்டு - நீருக்குள் இறங்கினார்கள்!

கரையோரம் அவ்வளவு ஆழமாக இருக்கவில்லை; ரெங்க்மா ஆசை தீர நீராடிக் கொண்டிருந்ததைப் பார்த்த செரோக்கி மகிழ்ச்சியடைந்தான்!

நீராடிக் கொண்டிருந்தபோது, அவர்கள் அந்த வனத்தைப் பற்றியும், வனத்தைக் குறுக்கறுத்து ஓடிக்கொண்டிருக்கும் இந்த வடிகால் பற்றியும் அதனோடிணைந்து கொள்ளும் பற்பல வடிகால்கள் பற்றியும் வெகு நேரமாகக் கதைத்தார்கள்!

தனது தந்தை தனக்குச் சொல்லித் தந்தவைகளை, தான் ரெங்க்மாவுக்குச் சொல்லிக் கொடுத்து, அவள் மூலம் எதிர்காலத்தில் தனக்குப் பிறக்கப்போகும் பிள்ளைக்குச் சொல்லிக்கொடுக்க வைத்து, சமூகத்தில் தனது பிள்ளையைத்  தலை நிமிர்ந்திருக்க  வைக்க வேண்டுமென்பது செரோக்கியின் ஆசை!

வருடமெல்லாம் கொட்டும் மழை!  சூரிய வெளிச்சமே பார்க்காத தரை! இறுக்கமும் நெருக்கமுமான மரங்கள்! கண்ணுக்கெட்டிய தூரம் வரை பின்னிப் பிணைந்து அடர்ந்த இந்த வனம்  மிகவும் ஆபத்தானவை!
அதில் வசிக்கும் எண்ணற்ற அபூர்வமான பறவைகள், விலங்குகள்! இவற்றோடு வனத்துக்குள் நடமாடிக் கொண்டிருக்கும் ஒருவருக்கொருவர் அறிமுகமற்ற - வெளி உலகம் கண்டிராத பழங்குடியினர்!

இவற்றையெல்லாம் ஒவ்வொன்றாக... ஒன்றுவிடாமல் ரெங்க்மா மூலமாகத்  தன் மகனுக்குப் புரிய வைக்கவேண்டும் என்பதில் செரோக்கி மிகவும் அவதானமாக இருந்தான்!

ஆச்சரியமும், அமானுஷ்யமும் சூழ்ந்த இந்த வனவாழ்க்கைச் சூழலை வெளியுலக மனிதர்கள் கற்பனை செய்தாலே  கரைந்து போய்விடுவார்கள் என்று தனது தந்தை அவனிடத்தில் கூறியது இப்போது அவன் நினைவில் வந்து போனது! 

இந்த வனத்துக்குள்  சென்று மீண்டு வருவதற்கு ஒரு அலாதி தைரியம் வேண்டும்!

வனத்துக்குள் நுழைந்தபின் அங்கு வாழும் விலங்குகளும், பயங்கரமான இயற்கை அமைப்புகளும், ஆங்காங்கே காணப்படும் சேற்றுக் குழிகளும், இருட்டான சூழ்நிலைகளும் எவரையும் பயமுறுத்தாதிருக்காது!

இங்குதான் செரோக்கியின் முன்னோர்கள் உள்நுழைந்து எச்சங்களையும் மூலிகைகளையும் எடுத்து வந்துள்ளார்கள்!

தனது தந்தையில்லாமல் தான் மட்டும் தனியே இதற்குள் வருவதை நினைத்தபோது  ஒரு காலத்தில் செரோக்கியின் நெஞ்சம் பதறியதுண்டு!

ஆனால் இப்போது ரெங்க்மாவுடன் இணைந்து வந்திருப்பதை நினைத்து அவன் பெருமைப் பட்டான்!

(தொடரும்)

செம்மைத்துளியான்


Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments