
ரெங்க்மாவுடன் இணைந்து வனத்துக்குள் வந்திருப்பதை நினைத்து பெருமைப்பட்டுக் கொண்ட செரோக்கி, “ஒரினோகோ” வில் ரெங்க்மாவுடன் ஆசைதீர முங்கியெழுந்து விட்டு, சிறிது நேரத்தில் மெல்லக் கரைக்கு வந்தான்.
அவள் இன்னும் கொஞ்ச நேரம் நீருக்குள் இருக்க விரும்பினாள்! தனது கைகளையும், கால்களையும் நீரில் அடித்தவாறு சிறுபிள்ளைத்தனமாக அவள் விளையாடிக் கொண்டிருந்ததை செரோக்கி கரையிலிருந்து பார்த்து ரசித்தான்.
சற்று நேரம் சென்று... கரையைத் தொட்டவாறு விழுந்து கிடந்த காய்ந்த மரக்கட்டை மேல் வைத்திருந்த தனது அந்கவஸ்தியை எடுத்துக்கொண்டு நீரோட்டத்தைத் திரும்பிப்பார்த்தான். அங்கு நீரில் நீந்தி விளையாடிக் கொண்டிருந்த ரெங்க்மாவைக் காணவில்லை!
அவன் மனம் துடிதுடித்துப் போய்விட்டது. கையிலெடுத்த அங்கவஸ்தியைத் தூக்கி எறிந்துவிட்டு...ஆற்றுக்குள் பாய்ந்தான் செரோக்கி!
அங்குமிங்குமாக அவன் நீந்திச் சென்று, எங்கு தேடியும் அவனால் ரெங்க்மாவைக் கண்டுகொள்ள முடியாதிருந்தது. நீர் வழிந்தோடிக் கொண்டிருந்த திசையை நோக்கி அவன் சிறிது தூரம் நீந்தினான்!
அவனது கண்கள் கரையை நோக்கிச் சென்றபோது ... அங்கு சிலர் கூடி நின்று எதையோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.
அவர்களைப் பார்த்தால், வனப்பகுதியைச் சேர்ந்த வர்களாகத் தெரியவில்லை. சிறிது குள்ளமான உருவத்தைக் கொண்ட அவர்கள், நாகரீகமான ... நகரத்து உடையுடன் தொப்பியணிந்து காணப்பட்டனர்!
அவர்களுக்கு மத்தியில் ஒருவர் குப்புறப் படுத்திருப் பதையும், நீருக்குள்ளிருந்தவாறே கண்டு கொண்ட அவன், விரைந்து நீந்திச் சென்று கரைக்கு வந்து அவர்களை நெருங்கலானான்!
தூரத்திலிருந்து அவன் அவர்களைப் பார்த்தபோது... அவர்களுள் ஒருவன் குந்தியிருந்தவாறு... குப்புறப்படுத் திருந்தவரை எதையோ செய்துகொண்டிருந்தான்!
செரோக்கி மேலும் சற்று நெருங்கிப் பார்த்தபோது, குப்புறப்படுத்திருந்தது ரெங்க்மாவாகத்தான் இருக்கவேண்டும் என்பதையும் புரிந்துகொள்ள அவனுக்கு வெகு நேரம் எடுக்கவில்லை!
(தொடரும்)
செம்மைத்துளியான்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments