Ticker

6/recent/ticker-posts

ஸ்குவாஷ்' வீராங்கனை ஃபதூமும், சந்திக்கு வந்துள்ள அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியும்!


"ஸ்குவாஷ்" என்பது நான்கு சுவர்கள் கொண்ட மைதானத்தில் ஒரு சிறிய ரப்பர் பந்தைப் பயன்படுத்தி விளையாடப்படும் ஒரு பிரபலமான ராக்கெட் விளையாட்டாகும். 

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மகளிர் கல்லூரியின் மாணவி சனித்மா சினாலி, 2025 டிசம்பர் மாதம் 19ம் திகதி இரவு நடந்த பாடசாலை நிகழ்வொன்றின்போது தனக்கு நடந்த ஓரவஞ்சனைத்தனத்தைப் போட்டுடைக்கப்போய் விவகாரம் பூதாகரமாக வெடித்து, ஒரே நாளில் பிரபலமானார். 

தனக்கு வரவேண்டிய விருது தட்டிப்பறிக்கப்பட்டதாக அவர் பகிரங்கமாக பாடசாலை அதிபர் மீது குற்றச்சாட்டை முன்வைத்தார். இதனைத் தொடர்ந்து இந்த மாணவியின் துணிச்சலுக்கு பாராட்டுக்கள் வந்து குவிந்து, சமூகவலைத்தளங்கள் அவரைக் கொண்டாடலாயின.

இதனைத் தொடர்ந்து, தனக்கு  இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராக பேசியதற்காக இன்று சமூக வலைத்தளங்களில் கொண்டாடப்பட்ட மாணவியினால் கடந்த காலத்தில் ஒரு ஸ்குவாஸ் வீராங்கனைக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பரவலாக செய்தி ஒன்று சமூகவலைத் தளங்களில் பதிவாகலாயின.

2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக இலங்கையின் கீர்த்திமிகு  தேசிய ஸ்குவாஷ் வீராங்கனையான ஃபதூம் ஸலீஹா இஸ்ஸதீன் என்பவர், இரண்டு முறைகளில் தெற்காசிய போட்டிகளில் bரோன்ஸ் மெடலைத் தனதாக்கிக் கொண்டவராவார்.

அடுத்தடுத்து தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் இலங்கையின் ஸ்குவாஷ் சேம்பியனாக இருந்து வந்துள்ள  இவர் 2022ல் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு, அவருக்குப் பதிலாக, பயிற்றுவிப்பாளராக இருந்த தனது  தந்தையின் சிபாரிசினால், அந்த வாய்ப்பை  சனித்மா என்ற இந்த மாணவி தட்டிப் பறித்துள்ளார். காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்பதற்கான ஒத்திகை நிகழ்ந்தபோது கூட, இந்த மாணவி, ஃபதூமிடம் தோல்வி கண்டிருந்தார் என்பது மேலதிக தகவலாகும்!

தேஷமான்ய  ஃபதூம் இஸ்ஸடீன் இப்போது விளையாட்டுத் துறையை விட்டு விலகியிருக்கின்றார்; இவர் விலகினாரா அல்லது விலக நிர்ப்பந்திக்கப்பட்டாரா என்பது புதிராகும்!
தனக்கிழைக்கப்பட்ட அநீதிக்கெதிராக பேசுவதற்கு அப்போது ஃபதூமுக்கு மேடை கிடைக்கவில்லை; அதுமட்டுமல்லாது பொது விமர்சனத்துக்குள் அகப்பட்டு சிரமப்படுவதை விரும்பாத அவர், விளையாட்டுத் துறையைவிட்டும் விலகி இருப்பதாகவும் அறிய முடிகின்றது.

அவரது வாய்ப்பு தட்டிப் பறிக்கப்படாமலிருந்திருந்தால் சர்வதேச அளவில் இலங்கைக்காக அவர் பல பதக்கங்களை வென்றிருக்கக்கூடும்.

மூன்று வருடங்களுக்கு முன் ஃபதூம் இஸ்ஸதீன், தனக்கு ஏற்பட்ட அநீதி பற்றி பிரபல ஊடகவியலாளர் சமுதித்தவுக்கு வழங்கிய அனல் பறக்கும் நேர்காணலை சமூக வலைத் தளங்களில் இப்போதும் பார்க்க முடிகின்றது.
வீராங்கனை ஃபதூமுக்கு அநீதி ஏற்பட்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் அவர் நேர்காணலின்போது சனித்மாவையோ அவரின் தந்தையையோ பெயர் குறிப்பிடவில்லை; மாறாக அவர் தனது நேர்காணலில் அரசியல்வாதிகளையும், விளையாட்டமைச்சையுமே தோலுரித்திருந்தார்.

விருதுக்கான கடுமையான நிபந்தனைகளில் அகில இலங்கை ரீதியில் முதலிடம், தேசிய சாதனை அல்லது சர்வதேச வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்பது முன்னரே அறிவிக்கப்பட்டது என்றும், ஸ்குவாஷ் வீராங்கனை சனித்மா சினாலிக்கு 'சிறந்த வீராங்கனை'க்கான விருது வழங்கப்படாமைக்குக் காரணம் அவர் தகுதிகளை பூர்த்தி செய்யாமையே தவிர, பயிற்சியில் கலந்து கொள்ளாமையல்ல என்றும், பழைய மாணவியான சனித்மா மேடையில் நடந்து கொண்ட விதம் பாடசாலையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகவும்; எதிர்கால சந்ததிக்கு தவறான முன்னுதாரணம் எனவும் பாடசாலை அதிபர் சுமேதா ஜயவீர கல்வி அமைச்சுக்கு வழங்கிய தனது விளக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது!

செம்மைத்துளியான்

 


Post a Comment

0 Comments