Ticker

6/recent/ticker-posts

நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞருக்கு காலணியால் தாக்குதல்.. நீதிமன்ற வளாகத்தில் நடந்தது என்ன?


உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை, அடையாளம் தெரியாத நபர்கள் காலணியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிக்கு எதிராக தனது எதிர்ப்பை காட்டுவதற்காக மூத்த வழக்கறிஞர் செய்த செயலுக்கு, இரண்டு மாதங்களுக்குப் பின்பு அவரின் பாணியிலேயே எதிர்வினை எனக் கூறி தாக்கிய காட்சி தான் இது… தாக்குதலுக்கு உள்ளான போதும் சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக புகார் அளிக்காமல், அனைவரும் ஒரே குடும்பத்தினர் என்று கூறியதன் பின்னணி என்ன?
கடந்த மாதம் அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நிகழ்ந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது, 71 வயதான வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என்பவர் ஷூவை வீச முயன்றார். உடனே, அங்கிருந்த காவலர்கள் அவரை பிடித்து கைது செய்தனர். ஆனால், அவருக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று உச்ச நீதிமைன்ற பதிவாளருக்கு பி.ஆர்.கவாய் உத்தரவிட்டார்.

இதனால், வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை போலீசார் விடுவித்தனர். அதேவேளையில், தனது செயலுக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ராகேஷ் திட்டவட்டமாக கூறினார். மாறாக, தலைமை நீதிபதி மீது காலணியை நான் வீசவில்லை, கடவுள் தான் அதை செய்தார் என்று பேசினார். பி.ஆர்.கவாய் சனாதன தர்மத்தை அவமதித்து விட்டதாகவும், அதன் காரணமாகவே அவர் மீது காலணியை வீசியதாகவும் கூறினார். இதற்கு வழக்கறிஞர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், தலைநகர் டெல்லியில் உள்ள கர்கர்டூமா நீதிமன்றத்திற்கு தனது சகாக்களுடன் சென்றார். அப்போது, நீதிமன்ற வளாகத்தில் இருந்த சில வழக்கறிஞர்கள் ராகேஷ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. திடீரென எதிர் தரப்பில் இருந்த ஒருவர், தனது காலணியை கழற்றி வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.

அத்துடன், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கவால் மீது, ஷூ வீச முயன்றதற்கு எதிர்வினை தான் எனக் கூறி, தொடர்ந்து தாக்கியுள்ளார். உடனே அருகில் இருந்த வழக்கறிஞர்கள் அந்த நபரை தடுத்து நிறுத்தி, ராகேஷை பாதுகாப்பாக மீட்டனர். தாக்குதலுக்கு உள்ளான போதும் “சனாத தர்மம் வெல்க… சனாதன தர்மம் வெல்க…” என அவர் முழக்கமிட்டார். இந்த தாக்குதலில், தனக்கு பெரிய காயம் ஏதும் ஏற்படவில்லை என்று வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் தெரிவித்துள்ளார்.

மேலும், வழக்கறிஞர்கள் மீது புகார் அளிப்பதில் என்ன பயன்? என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், இது தங்களது குடும்பத்திற்குள் நடந்த ஒரு சின்ன விஷயம் எனவும் கூறியுள்ளார். இருந்தபோதும், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிக்கு எதிராக தனது எதிர்ப்பை காட்டுவதற்காக மூத்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் செய்த செயலுக்கு, அவரின் பாணியிலேயே எதிர்வினை எனக் கூறி தாக்கிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

news18


 


Post a Comment

0 Comments