
ஐசிசி 2026 அண்டர்-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விரைவில் நமீபியா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளில் நடைபெற உள்ளது. அதற்கு தயாராகும் நோக்கத்தில் அருகில் உள்ள தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய அணி அங்கு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில் 2வது போட்டி ஜனவரி 5ஆம் தேதி நடைபெற்றது.
வில்லோமூர் பார்க் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஜேசன் ரௌல்ஸ் சதமடித்து 114 (113) ரன்கள் குவித்தார்.
ஆனால் மற்ற பேட்ஸ்மேன்கள் யாருமே 35 ரன்கள் கூட தாண்டவில்லை. அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய இந்திய அண்டர்-19 அணிக்கு அதிகபட்சமாக கிஷன் குமார் 4, ஆர்எஸ் அம்ரிஸ் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்கள். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் வைபவ் சூரியவன்சி அடித்து நொறுக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதே மைதானத்தில் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற முதல் போட்டியில் 2வது இன்னிங்ஸில் மழை வந்தது. மேற்கொண்டு போட்டி நடைபெறாத நிலையில் டிஎல்எஸ் விதிமுறைப்படி இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதே போல இப்போட்டியிலும் மாலை நேரத்தில் மழை வருவதற்கான வாய்ப்புகள் தெரிந்தது.
எனவே அதற்குள் பெரிய ரன்கள் குவிக்க வேண்டும் என்று நினைத்த சூரியவன்சி அடித்தால் சிக்ஸர் இல்லையென்றால் சிங்கிள் என்ற வகையிலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் சேர்ந்து 67 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஆரோன் ஜார்ஜ் 20 (19) ரன்களில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் அதிரடியாக விளையாடி அரை சதமடித்த சூரியவன்சி வெறும் ஒரே 1 பவுண்டரி 10 சிக்ஸர்களை பறக்க விட்டு 68 (24) ரன்களை 283.33 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி அவுட்டானார்.
அடுத்து வந்த அபிஞான் குண்டு 48* (42), வேதாந்த் திரிவேதி 31* (57) ரன்கள் எடுத்த போது எதிர்பார்த்தது போலவே மழை வந்தது. தொடர்ந்து பெய்த மழையால் மேற்கொண்டு போட்டியை நடத்த முடியாததால் நடுவர்கள் டிஎல்எஸ் விதிமுறையை பின்பற்றினர். அப்போது 23.3 ஓவரில் 176/2 ரன்களை எடுத்திருந்த இந்திய அணி தென்னாப்பிரிக்காவின் 23.3 ஓவர் ஸ்கோரை விட அதிக ரன்கள் குவித்திருந்தது.
எனவே இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதனால் இத்தொடரில் 2 – 0* (3) என்ற கணக்கில் தென்னாப்பிரிக்காவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்த இந்திய அண்டர்-19 ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. அதற்கு முக்கிய பங்காற்றிய சூரியவன்சி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
crictamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments