
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இழந்துள்ளது.
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியுள்ளது. முதல் 2 போட்டிகளில் இந்திய அணி ஒரு மேட்ச்சிலும், நியுசிலாந்து ஒரு மேட்ச்சிலும் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சம நிலையில் இருந்தன.
இந்நிலையில் 3 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 337 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் டேரில் மிட்செல் 137 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 106 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது. ரோஹித் சர்மா 11 ரன்களிலும், கேப்டன் கில் 23 ரன்களிலும் ஆட்டமிழக்க விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவித்தார்.
91 பந்துகளை எதிர்கொண்ட கோலி சதம் அடித்து அசத்தினார். இது சர்வதேச அரங்கில் அவர் அடித்த 85 ஆவது சதமாகும். ஒருநாள் போட்டித் தொடர்களில் இது கோலியின் 54 ஆவது சதம்.
இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போதிலும், விராட் கோலியின் சதம் இந்திய அணிக்கு தொடர்ந்து நம்பிக்கை அளித்தது.
108 பந்துகளை எதிர்கொண்ட கோலி 3 சிக்சர் 10 பவுண்டரியுடன் 124 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோலி ஆட்டமிழந்ததும் நியூசிலாந்து அணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.
46 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 296 ரன்கள் எடுத்து 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இழந்துள்ளது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments