
கிட்கேட் முதல் நெஸ்கஃபே வரையிலான பல பொருட்களை தயாரிக்கும் பிரபல நிறுவனமான நெஸ்லே, குழந்தைகளுக்கான உணவுப் பவுடர் பார்முலாவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. இதன் பின்னணி என்ன, இதை உட்கொண்டால் பச்சிளம் குழந்தைகளுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் போன்ற கேள்விகளுக்கான விடையை இங்கே அறியலாம்.
நெஸ்லே தான் தயாரிக்கும் உணவுப் பவுடர் பார்முலாவில் "Cereulide" (செருலியீடு) என்ற நச்சுப் பொருள் இருப்பதை அறிந்ததை அடுத்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தற்போதைக்கு நெஸ்லே நிறுவனம் பிரான்ஸ், ஜெர்மனி உட்பட 25 ஐரோப்பிய நாடுகளில் தனது குழந்தை உணவு பவுடர் பார்முலாவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. ஏனெனில் அங்கு விநியோகிக்கப்படும் பொருட்களில்தான் இந்த நச்சுப் பொருள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு விநியோகிக்கப்பட்ட பால் பவுடர்களை திரும்பப் பெறுவதாகவும் நெஸ்லே அறிவித்துள்ளது.
இதுபற்றி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் விளக்கியுள்ள திருவாரூரைச் சேர்ந்த மருத்துவர் பிரகாஷ்குமார், “நெஸ்லே நிறுவனத்தின் முக்கியமான 3 தயாரிப்புகளான SMA, BEBA மற்றும் NAN ஆகியவற்றில் அரக்கிலோனிக் என்ற அமிலம் சேர்க்கப்படும். இந்த அமிலம் காரணமாக, 3 தயாரிப்புகளிலும் Bacillus Cereus என்ற பாக்டீரியா உருவாகியிருப்பது தெரியவந்துள்ளது. இது அதிக வெப்பத்திலும் வாழக்கூடியது. இதுதான் செருலீயடு என்ற நச்சுப்பொருள் உருவாக காரணமாகிறது. இது மிகவும் ஆபத்தான நச்சுப்பொருள்.
இதை தெரிந்துதான் நெஸ்லே நிறுவனம், முன்னெச்சரிக்கையாக 25 நாடுகளுக்கு எச்சரிக்கை அறிக்கை விடுத்துள்ளது. அந்த நாடுகள் பட்டியலில் இந்தியா இல்லை என்பதால் அச்சம் வேண்டாம். இந்தியாவில் விநியோகிக்கப்படும் நெஸ்லே தயாரிப்புகள், நம் நாட்டிலேயே உருவாக்கப்படுகின்றன என்பதால் பயம் வேண்டாம். இந்த நச்சுப்பொருளானது, அதை உட்கொண்ட 6 மணி நேரத்திலேயே வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவற்றை ஏற்படுத்திவிடும். மற்றபடி நீண்டகால பாதிப்புகளுக்கு இது காரணமாக அமையாது. எனவே ஏற்கெனவே குழந்தைகளுக்கு நெஸ்லே கொடுத்தவர்கள், இனி பாதிப்பு வருமோ என அச்சப்பட வேண்டாம்” என்றுள்ளார் மருத்துவர்.
பெரும்பாலும் எந்தவொரு நச்சுப்பொருளும், சமைப்பதன் மூலமாகவோ, கொதிநீரைப் பயன்படுத்துவதன் மூலமாகவோ அல்லது குழந்தைகளுக்கான பால் தயாரிக்கும்போதோ அழிக்கப்படும். ஆனால் குறிப்பிட்ட இந்த செருலீயடு நச்சுப்பொருள் அப்படி அழிக்கப்பட வாய்ப்பில்லை என்று பிரிட்டனின் உணவுத் தர முகமையால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக கவனத்தோடு, முன்னெச்சரிக்கையாக நெஸ்லேவே முன்வந்து இவற்றின் தயாரிப்புகளை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வே எங்கள் முதன்மையான முன்னுரிமை என்று நெஸ்லே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்ப் பாதிப்பு எதுவும் உறுதியாகவில்லை என்றாலும் இந்த பவுடரை வைத்திருப்போர் குழந்தைகளுக்குத் தர வேண்டாம் என நெஸ்லே தெரிவித்துள்ளது.
நெஸ்லே தயாரிப்புகளான SMA, BEBA, NAN போன்ற குழந்தைக்கான ஃபார்முலா பால் என்பது 12 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குத் தாய்ப்பாலுக்கு மாற்றாக வழங்கப்படும் ஒரு சத்தான உணவாகும். தாய்ப்பால் சுரக்காத தாய்மார்களுக்கு மட்டுமே இது பரிந்துரைக்கப்படும்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments