Ticker

6/recent/ticker-posts

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-98


கிணற்றுக்குள்ளிருந்து ஒருவர் பேசுவது போலிருந்த அந்தக் குரல் இர்வினைக் கல்லடிவாரம் நோக்கி எட்டிப்பார்க்க வைத்தது!

“குழந்தாய்... அவர்கள் தூரத்தில் தெரிகிறதே ஆறு... அங்குதான்  சென்றுள்ளனர். நீயும் அங்கு செல்வாயாக!” என்ற ஒலிக்கட்டளை கேட்ட இர்வின், வெகு தூரத்தில் தெரிந்த வலைந்து நெளிந்து செல்லும் ஆற்றினை நோக்கினான்.  ‘ஆஹா ... இங்கிருந்து அது வரை வெகு  தூரம் போக வேண்டுமே?’

அவ்வளவு தூரம் தன்னால் நடக்க முடியாது என்பதை உணர்ந்த அவன் விழி பிதுங்கி நின்றபோது,

“குழந்தாய்  உனது நண்பனின் துணைவிக்குப் பரிகாரம் தேடி  கிராமத்தவர்கள் அங்கு போயுள்ளனர்! நண்பனிடத்தில் நீ உண்மை அன்பு வைத்திருந்தால், தூரம் ஒன்றும் உனக்குப் பெரிதாகத் தெறியமாட்டாது; நீ அங்கு செல்வாய்!” என்ற ஒலிக்கட்டளை வந்தது. அதன் பிறகு அந்த நரைத்த தலை மலையடிவாரத்திலிருந்தும் மறைந்துவிட்டது!

பெரிய கல்லை விட்டும் இறங்கி வந்த இர்வின், வந்த வழியே திரும்பிச் செல்வதா அல்லது ஆற்றை நோக்கி நடையைக் கட்டுவதா என்று யோசித்து நின்றான்!

வனவாசிகளுக்கு நடைப்பயணம் என்பது
சர்வசாதாரண விஷயம்! ஆனால் நகரத்தில் வாழ்ந்துவரும் இர்வினைப் போன்றவர் களுக்கு அது கடினகாரியம்!

தனது  நண்பனிடத்தில் அவனுக்கிருந்த அபரிதமான நட்பும், வனவாசிகளின் சடங்கு சம்பிரதாயங்களைப் பார்க்க வேண்டுமென்ற ஆர்வமும்  விபரீதமான இந்தப் பயணத்தை அவன் தொடரக் காரணமாக இருந்தது! 

பெரியகல்லின் உச்சியிலிருந்து பார்த்தபோது தெரிந்த, “ஓரினகோ” ஆறு, வனத்துக்குள் நடந்து கொண்டிருக்கும்போது, அவனுக்குத் தென்படவில்லை. அதனால் தான் போய்க்கொண்டிருக்கும் திசை சரியானது தானா என்பதைக்கூட அவனால் நிர்ணயித்துக்கொள்ள முடியாதிருந்தது!

மேடு – பள்ளம், கல்லு - முள்ளு நிறைந்த அந்த ஒற்றையடிப் பாதையில் தனியே நடந்து கொண்டிருந்தபோது, ஒருவிதமான பீதி அவனை ஆட்கொண்டது!

எத்திசை நோக்கினும் இருள் சூழ்ந்த வனாந்திரம்!  அதற்குள் கொடிய மிருகங்கள் பதுங்கியிருக்கும் என்பதும் நிச்சயம்! அவனது பாதையில் அவை குறுக்கிடுமானால் தனி ஒருவனாக நின்று, தப்பிப்பதென்பது சற்றுக் கடினமான காரியம்தான்!

அதனால் எதற்கும் பாதுகாப்பிற்காக கையில் ஒரு பாரமான மரக்குச்சியை எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தவன், நடைபாதை ஓரமாக இருந்த மரத்திலிருந்து ஒரு கிளையை  முறித்தெடுக்க முயன்றான்! 

அவ்வேளையில் சில வானரங்கள் அவனை நோக்கி வந்து கொண்டிருப்பதைக் கண்டதும், அவனது  பயம் இரட்டிப்பாகிவிட்டது! முறித்தெடுத்த மரக்கிளையை அப்படியே தூக்கித் தோளில் மாட்டிக் கொண்டவனாக ஓடலானான்! 


(தொடரும்)

 


Post a Comment

0 Comments