Ticker

6/recent/ticker-posts

பயணியா? விமானப் பணிப்பெண்ணா?: விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இளம்பெண்


இந்தோனேசியாவில் 23 வயதுடைய ஒரு பெண், விமான பணிப்பெண் போன்று உடை அணிந்து, பலேம்பாங்கிலிருந்து ஜகார்த்தா வழித்தடத்தில் பாட்டிக் ஏர் விமானத்தில் பயணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த பெண், தன்னை விமான பணிப்பெண் என கூறி, விமானக் குழுவினருக்கான சிறப்பு நுழைவுப் பாதையை பயன்படுத்தி விமானத்துக்குள் நுழைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விமானத்தில் ஏறியபோது செல்லுபடியாகும் பயணச் சீட்டு இருந்ததால் அவர் கேபினுக்குள் அனுமதிக்கப்பட்டார். ஆனால், விமானக் குழுவினரின் கேள்விகளுக்கு தெளிவற்ற பதில்களை வழங்கியதால் சந்தேகம் எழுந்தது.

விமானம் ஜகார்த்தா சுகர்னோ-ஹட்டா விமான நிலையம், டெர்மினல் 2-இல் தரையிறங்கியதும், விமான பாதுகாப்புப் பிரிவு (Avsec) அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றது.

அவர் தொடர்ந்து தன்னை அதே விமான நிறுவனத்தின் பணிப்பெண் என வலியுறுத்தியதுடன், சந்தேகத்திற்குரிய அடையாள அட்டையையும் காட்டியுள்ளார்.

விசாரணையில், அந்த பெண் முன்பு விமான பணிப்பெண் பதவிக்கு விண்ணப்பித்திருந்தாலும், தேர்ச்சி பெறவில்லை என்பது தெரியவந்தது.

குடும்பத்தினரிடம் விமான பணிபெண்ணாக வேலை செய்கிறேன் என காட்டுவதற்காகவும், அவமானத்தை தவிர்ப்பதற்காகவும் இப்படிச் செய்ததாக போலீஸாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் அணிந்திருந்த விமான பணிப்பெண் உடை, ஆன்லைன் கடையில் வாங்கப்பட்டதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

nambikkai

 


Post a Comment

0 Comments