Ticker

6/recent/ticker-posts

புத்திசாலிகளுக்கு ஏற்படும் சறுக்கல்களும்; காரணங்களும்!


சாதாரண மனிதர்களை விட, புத்திசாலிகள் அறிவிலும் செயல்பாட்டிலும் சிறந்தவர்கள். மற்றவர்களை விட மேம்பட்டு சிந்திப்பார்கள். ஆனால், சில சந்தர்ப்பங்களில் இவர்களுக்கும் சில சறுக்கல்கள் ஏற்படும். அதற்கான காரணங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

புத்திசாலிகளுக்கு ஏற்படும் சறுக்கல்களுக்கான காரணங்கள்:

அதீத நம்பிக்கை: புத்திசாலிகளுக்கு தன் மேல் அதீத நம்பிக்கை இருக்கும். எப்போதும் தங்களை அதீதமாக மதிப்பீடு செய்து வைத்திருப்பார்கள். சில சிக்கலான விஷயங்களில் தங்கள் மீதுள்ள அதீத நம்பிக்கை காரணமாக அதன் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல், அதைப்பற்றி ஆழ்ந்த அறிவு இல்லாமல் ஈடுபட்டு தோல்வியை, சறுக்கல்களை சந்திப்பார்கள்.

அதீத சிந்தனை: சில சமயம் சுலபமாக முடிவெடுக்க வேண்டிய விஷயங்களுக்கு கூட அதிகமாக யோசித்து அதை கோட்டை விட்டுவிடுவார்கள். சரியான சமயத்தில் முடிவெடுக்காமல் ஒரு விஷயத்தைப் பற்றி அதிகமாக ஆராய்ந்து அதைப்பற்றி அதிகமாக சிந்தித்து அந்த செயலை செய்யவே முடியாமல் கைவிட்டு விடுவார்கள்.

சிறிய விஷயங்களுக்கு சிக்கலான தீர்ப்புகள்: எளிமையான மனிதர்கள் எளிமையான விஷயங்களை சிந்திப்பார்கள். ஆனால், புத்திசாலிகள் எப்போதும் சற்றே கடினமான விஷயங்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களது மூளை எப்போதும் சிக்கலான விஷயங்களைப் பற்றி சிந்திக்கும். அதனால் சில சமயங்களில் சுலபமான தீர்வுகளைப் பற்றி யோசிப்பதை விட்டு விட்டு கடினமான சிக்கலான தீர்வுகளைப் பற்றி யோசிப்பார்கள். அவை பலன் இல்லாமல் போய்விடும்.

பிறருடன் ஒப்பீடு: புத்திசாலிகள் எப்போதும் பிறரை விட தான் உயர்ந்தவர் என்ற எண்ணத்தில் இருப்பார்கள். அதை நிரூபிக்கும் வண்ணம் அவர்களது செயல்பாடுகள் இருக்கும். மற்றவரை விட தான் திறமை. கல்வி. செயல்பாடு இவற்றில் முன்னேறி இருக்கிறோம் என்று நிரூபிப்பதற்காக எப்போதும் போட்டி மனப்பான்மையுடன் இருப்பார்கள். எப்போதும் பிறருடன் தன்னை ஒப்பீடு செய்துகொண்டே இருப்பார்கள். அதனால் இவர்களுக்கு நிறைய சமயங்களில் உண்மையான சந்தோஷம் கிடைக்காது.

திருப்தி: எப்போதும் சாதனைகளை துரத்திக் கொண்டே ஓடுவதால் இவர்களுக்கு திருப்தி என்பது கிடைக்காது. ஒரு வேலை முடிந்ததும் அடுத்தது என்ன என்று நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருப்பதால் அவர்களது மனம் எப்போதும் எதையோ இழந்தது போலவே இருக்கும். சாதனைகளுக்காக ஏங்கும் மனம் சந்தோஷங்களை தேடுவதை தவறிவிடும். இவர்கள் ஓய்வு, ரசனை போன்றவற்றை வெற்றி என்கிற தேடுதலில் தொலைத்து விடுவார்கள்.

ஈகோ: இவர்கள் தங்களுடைய ஈகோ காரணமாக பிறருடன் மிக சுலபமாக நட்பு மற்றும் உறவிலிருந்து வெளியேறி விடுவார்கள். பச்சாதாபம், அனுதாபம் போன்ற உணர்வுகள் இவர்களுக்கு குறைவாகவே இருப்பதால் பிறருடனான நட்பும் உறவுகளும் ஆழமாக இருக்காது.

புகழ்ச்சிக்கு மயங்குதல்: இவர்கள் புகழ்ச்சிக்கு மயங்கியவர்களாக இருப்பார்கள். பிறர் புகழும்போது இவர்கள் மனம் மகிழும். இவர்கள் அதைத் தொடர்ந்து பெற விரும்புபவர்கள். எனவே, சாதனைகளைத் தேடி ஓடிக்கொண்டே இருப்பார்கள். அதனால் இவர்கள் எப்போதும் ஓய்வின்றி செயல்பட்டுகொண்டே இருப்பார்கள். சில சமயங்களில் மனதும் உடலும் மிகவும் களைத்துப் போய் விடுவார்கள். இவர்களால் நிம்மதியாக தூங்கக்கூட முடியாது.

இவர்கள் தோல்விக்கு பயந்தவர்கள். தன்னை பிறர் தோற்கடித்து விடுவார்களோ என்ற எண்ணத்திலேயே எப்போதும் இருப்பதால் இவர்களுக்கு சாதாரண மனிதனிடம் இருக்கக்கூடிய நிம்மதி, மன அமைதி போன்றவை இருக்காது. எப்போதும் ஏதோ ஒரு பற்றாக்குறை இருப்பது போலவே இருந்து கொண்டிருக்கும்.

புத்திசாலிகள் நிதானமாக அமர்ந்து யோசித்து தங்களிடம் உள்ள குறைகளை களைந்து கொண்டால் அவர்கள் மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.

kalkionline


 



Post a Comment

0 Comments